அழுகை வரவில்லை
கூடத்தில் அமர்ந்து லலிதாவின் வீட்டுப் பாடத்துக்கு உதவிக்கொண்டிருந்த போது திடீரென ஞாபகம் வந்தது. நாகராஜ் பாட்டி எப்படி இருக்கிறாள் என்று ஒரு நடை போய் பார்த்துவிட்டு வரவேண்டும். நாகராஜ் இரண்டு நாட்களாக ஊரில் இல்லை. அவன் வீட்டு அக்கம்பக்கத்தில் உள்ள எல்லோரும், அவன் உட்பட, அருகில் ஊருக்கு ஒரு கல்யாணத்துக்குப் போயிருப்பதால் பாட்டி தனியாக இருப்பாள். ஒரு கண் வைத்துக்கொள் என்று கிளம்பும்போது என்னிடம் சொல்லியிருந்தான். நான் பாட்டியைப் பார்த்துப் பல நாட்கள் ஆகியிருந்தன. உடம்பு முடியாமல் இருப்பதாகக் கேள்வி.

நாகராஜ் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவன். அவனுக்கும் அவன் அம்மாவுக்கும் பக்கபலமாக இருந்தவள் பாட்டிதான். நாகராஜ் உயர்நிலைப்பள்ளி முடித்தவுடன் அவனுடைய அப்பா செய்த அரசாங்க வேலை அவனுக்கு கிடைக்க நாயாய் நடந்தாள். ஊழல் உலகம் அவளைச் சுழற்றி அடித்தது. அவள் அதற்கெல்லாம் சலித்துக் கொண்டதேயில்லை. வெய்யில் கொளுத்தும் நடுப்பகலில் கையில் குடையோடு சண்டியர்களுக்கு முன்னே சத்தியாக்கிரகம் செய்யக் கிளம்பி விடுவாள்.

குள்ளம் என்பதால் குடை அவள் தோள்வரை வரும். "இன்னைக்கும் என்னை அடித்தாடி விட்டார்கள்" என்பாள். ஆனால் அலுக்காமல் மறுநாளும் படையெடுப்பாள். மனம் தளராத மங்கம்மாவின் மல்யுத்தம் தாங்காமல் அழுக்குப்பிடித்த அலுவலரும் ஆடிப்போய், கடைசியாக காகிதத்தை நகர்த்தினர். நாகராஜ் வேலையில் அமர்ந்தபின்னும் பாட்டிக்கு நிம்மதியில்லை. அவன் அம்மாவுக்கு உடம்பு பல்வேறு விதங்களில் படுத்தி எடுத்தது. பாட்டி மீண்டும் சத்தியாக்கிரகம், தியாகம், தவம் எல்லாவற்றிலும் ஈடுபட்டு முகம் கோணாமல் பெண்ணைக் கண்போல் பார்த்துக் கொண்டாள். இருந்தாலும் நோயின் மூர்க்கம் தாக்க, இளவயதுப் பெண்ணை இழந்தாள். அதன்பின் நாகராஜ்தான் அவள் உலகம். நாகராஜுக்கு அவள்தான் உறவு.

கதவைத் தட்டியதும் தானாகத் திறந்தது! பூட்டாமல் வைத்திருக்கிறாளே என்றெண்ணி உள்ளே நுழைந்த எனக்கு தூக்கிவாரிப் போட்டது. நடுக்கூடத்தில் பாட்டி கிடந்தாள். புடவையை ஒரு முண்டுபோல் சுற்றிக் கொண்டிருந்தாள். குளித்துவிட்டு வெளியே வரும்போது விழுந்திருக்கலாம். அருகில் சென்று பார்த்தபோது பரிதாபமாக இருந்தது. நம்பமுடியாதபடி நலிந்த தேகம் சுருண்டு ஒரு சதையற்ற சிசுவாக, எலும்புப் பந்தாகக் கிடந்தாள். புரையேறிய கண்கள் ஒளியிழந்து பஞ்சடைத்திருந்தன. கண்ணிலிருந்து ஏதோ கசிய அதை ஒரு கொத்து ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அதை ஓட்டக்கூடத் தெம்பில்லாமல் கிடந்தாள் பாட்டி. கைவைத்துப் பார்த்ததில் மெல்லிசாக மூச்சு தென்பட்டது. எறும்பு வரிசை சாவகாசமாக அவள் கால்மேல் ஏறி உடல்மேல் ஊர்ந்து பின் கீழிறங்கிச் சென்று கொண்டிருந்தது. அதைப்பற்றிய பிரக்ஞை சிறிதும் இல்லை. எத்தனை நேரமாகக் கிடக்கிறாளோ! மிக மெல்லிய நூலிழையில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.

நடுங்க ஆரம்பித்தேன். உடனடி அவசர மருத்துவம் தேவை. தொலைபேசி தேடி ஓட வேண்டும். அதற்கு முன்னர் தண்ணீர் வேண்டுமானால் ஒரு துளி கொடுத்துவிட்டுப் பாட்டியிடம் சொல்லிவிட்டுப் போகவேண்டும். அருகில் போய் "பாட்டி, நான் சுந்தர் வந்திருக்கேன். தண்ணி ஏதாவது வேணுமா?" என்று கேட்டேன். அசையவில்லை. சரி, கிளம்பலாம் என்று ஒரு அடி எடுத்தவுடன் ஏதோ சொல்வது கேட்டது. திரும்பி அருகில் சென்று காதுகொடுத்துக் கேட்டேன். முனகினாள்.

பாட்டி "லலிதா எப்படி இருக்கிறாள்?" என்றாள்.

அந்த வார்த்தைகள் என் பிடரியில் பளாரென்று அறைந்தது போல் விழுந்தன. ஒரு இம்மிக்கும் குறைவான ஜீவன் உள்ள பாட்டியால் தன் உயிரைப்பற்றிய அக்கறை இல்லாமல் எப்படி இவ்வளவு அன்புடன் அடுத்தவரைப்பற்றி விசாரிக்க முடிகிறது!

"பாட்டி, ஒரு நிமிஷம் வந்துடறேன்" என்று சொல்லி வெளியே வந்தவுடன் பீறிக்கொண்டு வந்த அழுகையில் உடைந்து போய் ஒரு நொடி உறைந்து நின்றேன்.

அதன்பின் நான் அரக்கப் பரக்க பக்கத்துக் கடைக்குப் போய் தொலைபேசியில் மருத்துவமனையை அழைத்தேன். நான் ஏகப்பட்ட பதற்றத்தில் இருக்கும்போது உலகம்பூரா கொஞ்சம்கூட அவசரமில்லாமல் அதிமந்தமாக இயங்கியது. நாகராஜுக்கு தூது அனுப்புவது, ஆம்புலன்ஸ் வருவது, ஆஸ்பத்திரி அடைவது என்று ஒவ்வொன்றும் முடிக்க ஒரு யுகம் எடுத்தது. நாகராஜ் மருத்துவமனைக்கு ஓடி வந்ததும், நாங்கள் இருவரும் குட்டிபோட்ட பூனைகளாய்க் குறுக்கும் நெடுக்கும் நடக்க, மருத்துவமனையில் அனைவரும் நிமிடத்துக்கு நிமிடம் ஏதோ நகைச்சுவை தென்பட்டது போல் கூடிக் குலாவிக் கொண்டிருந்தார்கள். மாலை முழுவதும் நாங்கள் இருவரும் முள்மேல் தவமிருந்தோம்.

அசாதாரணமான நிலையில் அளவற்ற அன்புடன் ஒரு சாதாரண கேள்வி கேட்டு என் நெஞ்சை நெகிழ்த்திய நாகராஜ் பாட்டி நள்ளிரவில் காலமானாள். அவள் உடல்மேல் அவள் உள்ளம் கொண்ட அசாத்திய ஆளுமை என்னைத் தீராத அதிசயத்தில் ஆழ்த்தியிருந்ததால் எனக்கு அழுகை வரவில்லை.

'கீமூ'

© TamilOnline.com