சாரா வந்துவிடுவாள்.....
அன்று வியாழக்கிழமை. மாலை நேரம். நாளைக் காலை சாரா வந்துவிடுவாள்.

மாலாவின் வீடு அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. எல்லோரும் மும்முரமாக தத்தம் அறைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். மாலா தன் பிள்ளையைப் பார்த்துக் கடிந்து கொண்டிருந்தாள்.

''அவிஷ், எல்லா புத்தகங்களையும் ஒழுங்காக அலமாரியில் அடுக்கி வை. தரையிலும், படுக்கையிலும் இறைந்து கிடக்கிறது. நாளை சாரா வருகிறாள். அப்புறம் திங்கள்கிழமை காலையில் இதைக் காணோம் அதைக் காணோம் என்று என்னைத் தேட வைக்காதே. விளையாட்டுச் சாமான்கள், கார் எல்லாம் கம்பளத்தின்மேல் கிடக்கின்றன. எதையாவது குப்பைத் தொட்டியில் போட்டுவிடப் போகிறாள்.''

அவள் தன் அறையில் மேஜை மேலிருந்த காதணிகள், மோதிரங்கள், தலை கிளிப்புகள் என்று பாகுபடுத்தி பத்திரப்படுத்திக் கொண்டிருந்தாள். இதன் நடுவே மறுபடி ஏதோ ஞாபகம் வந்தவள் போல, தன் மகள் அறையைப் பார்த்து, ''ஏய் லயா, உன் அறையில் கலர் பென்சில், பாசிமணி எல்லாம் கீழே கிடக்கிறது பார். எடுத்து அதனதன் பெட்டியில் வை. எம்ப்ராய்ட்ரி போடுகிறேன் என்று எடுத்த ஊசி கீழே கிடக்கப் போகிறது, ஜாக்கிரதையாக எடுத்து வை'' என்று குரல் கொடுத்தாள்.

தன் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டே தன் கணவனைப் பார்த்து, ''இது என்ன கம்ப்யூட்டர் ஒயர் எல்லாம் அறை முழுவதும் குறுக்கும், நெடுக்குமாக அவரைப் பந்தல் போல ஓடுகிறதே. நான் தடுக்கி விழுந்தால் கால்தான் உடையும். எதற்கு வீட்டில் அறைக்கு ஒன்றாக இத்தனை கம்ப்யூட்டர் மானிட்டர்கள், ஏதோ பெரிய ஆபீஸ் மாதிரி. சட்டென்று ஒரு சின்ன விஷயம் வேண்டும் என்றால், எது எந்த கம்ப்யூட்டரில் இருக்கிறது என்று தெரிய மாட்டேன் என்கிறது. Fry's கடையில் ஏதாவது புதிதாக கம்ப்யூட்டர் சாமான் வந்தால் உடனே அதை வாங்கி வீட்டில் சேர்த்து விட வேண்டியது. இந்த நாட்டில் நம் இந்தியா மாதிரி பழைய சாமான்களை விலைக்குப் போடமுடியுமா? அதை எடுத்துக் கொண்டு போக, ஆயிரம் போன் பண்ணி, ஒரு ஆளைப் பிடிக்க வேண்டும். அதற்குக் கூலி வேறு கொடுக்க வேண்டும். சுண்டைக்காய் கால்பணம், சுமைகூலி முக்காப் பணமாம்'' என்று முணுமுணுத்தவாறு, அவள் சாமான்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையும் 8 மணிக்குச் சாரா தவறாமல் வந்து அவர்கள் வீட்டு அழைப்பு மணியை அடிப்பாள். கடிகாரம் தவறினாலும் அவள் வருகை தவறாது. இந்தக் குழந்தைகள் அப்பா, அம்மாவுக்குக் கூட அவ்வளவு பயப்படுவதில்லை. ஆனால் இந்தப் பெண்மணியின் வருகைக்கு அவ்வளவு பயப்படுகிறார்கள்.

சாரா வேறு யாருமில்லை, அவர்கள் வீட்டை வாரம் ஒருமுறை வந்து சுத்தப்படுத்தும் பெண்மணி!

அம்பா ராகவன்

© TamilOnline.com