சிறந்த எழுத்தாளரும், யதார்த்த நாவல்களை அழகியல் நெறியோடு தமிழில் தந்தவருமான சா.கந்தசாமி (80) காலமானார். இவர், நாகைப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில், ஜூலை 23, 1940ல் சாத்தப்ப தேவர் - ஜானகி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இளவயதிலேயே தந்தையை இழந்தார். தாயுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். ஆட்டோமொபைல் துறையில் டிப்ளமா பெற்றார். குரோம்பேட்டை எம்.ஐ.டி. பரிசோதனைக் கூடத்தில் சில காலம் உதவியாளராகப் பணியாற்றிய பின் அகில இந்திய உணவுக் கழகத்தில் பணியில் சேர்ந்தார். நாளடைவில் அதன் இணை இயக்குநராக உயர்ந்தார்.
பள்ளிப்பருவம் முதலே எழுத்தார்வம் கொண்டிருந்த கந்தசாமி, ஓய்வுநேரங்களில் எழுதத் தலைப்பட்டார்.. முதல் நாவல் 'சாயாவனம்' 1967ல் வெளியாகி இவரை இலக்கிய உலகிற்கு அடையாளம் காட்டியது. தேசிய புத்தக அறக்கட்டளை இந்த நூலை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்துப் பாராட்டியது. நண்பர்களுடன் இணைந்து இவர் உருவாக்கிய 'கசடதபற' சிறந்த சிற்றிதழ்களில் ஒன்றாக விளங்கியது. 1974ல் வெளியான 'தக்கையின் மீது நான்கு கண்கள்' சிறுகதைத் தொகுப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.
சிறுகதை, கட்டுரை, நாவல் என்று பல படைப்புகளைத் தந்திருக்கிறார் கந்தசாமி. 'தொலைந்து போனவர்கள்' நாவல் வாசித்தோர் மனதைப் பாதித்த நாவலாகும். இது பின்னர் சென்னைத் தொலைக்காட்சியில் தொடராகவும் வெளியானது. 'வான்கூவர்', 'யாதும் ஊரே', 'இன்னொரு மனிதன்', 'பெருமழை நாட்கள்', 'எல்லாமாகிய எழுத்து', 'எழுத்தோவியங்கள்', 'அவன் ஆனது', 'சூர்ய வம்சம்', 'மாயலோகம்' போன்ற இவரது படைப்புகள் குறிப்பிடத்தகுந்தன. ஏ.கே. செட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். ஏழுக்கும் மேற்பட்ட நாவல்கள், பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், பத்துக்கும் மேற்பட்ட தொகுப்பு நூல்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தந்திருக்கிறார். 'Suns of the Sun', 'The defiant Jungle' என்ற இரு ஆங்கில நூல்களும் அவற்றுள் அடக்கம். 'சாயாவனம்', 'சூர்யவம்சம்', 'விசாரணைக் கமிஷன்' போன்ற புதினங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சாயாவனம் சென்னைத் தொலைக்காட்சியில் குறும்படமாக வெளியாகிப் புகழ்பெற்றது. 'நிகழ் காலத்திற்கு முன்பு' என்னும் நூல் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்றது. சாகித்திய அகாதமிக்காக 'நவீன தமிழ்ச் சிறுகதைகள்' என்னும் தொகுப்பு நூலைக் கொண்டு வந்திருக்கிறார்.
இவரது 'விசாரணைக் கமிஷன்' நாவலுக்கு 1998ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. கசடபதற இதழில் வெளியான 'தக்கையின் மீது நான்கு கண்கள்' சிறுகதை, 2004ல் குறும்படமாக உருவாக்கப்பட்டு, இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த குறும்படத்துக்கான விருதைப் பெற்றது. சிற்பி தனபால், ஜெயகாந்தன், அசோகமித்திரன் ஆகியோரது வாழ்க்கையைக் குறும்படமாக்கியுள்ளார். இவரது 'காவல் தெய்வங்கள்' என்ற ஆவணப்படம், சைப்ரஸ் விழாவில் முதல் பரிசு பெற்றது.
சாகித்ய அகாதமியின் ஆலோசனைக் குழு உறுப்பினராகத் திறம்படச் செயலாற்றியவர். திரைப்படத் தணிக்கைக் குழுவிலும் இருந்திருக்கிறார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளை அறிந்தவர். சிறந்த ஓவியரும்கூட. சிற்பக்கலையிலும் ஆர்வம் உடையவர். மேலும் வாசிக்க
அண்மைக் காலமாக இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்த சா. கந்தசாமி, சிகிச்சை பலனின்றிக் காலமானார். |