மன்னர் மன்னன்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ஒரே புதல்வரும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் (92) காலமானார். கோபதி என்ற இயற்பெயர் கொண்ட இவர், தமிழ்ப்பற்றின் காரணமாக 'மன்னர் மன்னன்' ஆனார். தந்தை வழியில் சிறந்த கவிதைகளைப் படைத்தவர். பல நூல்களை எழுதியிருக்கிறார். பாரதிதாசன் எழுதி அச்சில் வராத சில படைப்புகளையும் தொகுத்திருக்கிறார். பாரதிதாசனின் வரலாற்றை, 'கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல்' என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். பாரதி-பாரதிதாசனின் நட்பைப்பற்றிப் பேசும் 'பாட்டுப் பறவைகள்' நூல் குறிப்பிடத் தகுந்ததாகும். பாரதிதாசன் பற்றி இவர் எழுதிய 'பாரதிதாசனின் இலக்கியப் பாங்கு', 'பாவேந்தர் படைப்புப் பாங்கு', 'பாவேந்தர் உள்ளம்' போன்ற நூல்கள் குறிப்பிடத் தகுந்தன. புதுச்சேரி வானொலி நிலையத்தில் பணியாற்றிய இவர், முதன்முதலில் புதுவையில் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்ததுடன் அதன் தலைவராகவும் இரண்டு முறை பணியாற்றியிருக்கிறார்.

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றிருக்கிறார். திராவிட இயக்கச் சிந்தனையாளராக இருந்தாலும் அனைத்து சமயத்தவரிடத்தும் நட்பு பாராட்டியவர். பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரது நன்மதிப்பையும் அன்பையும் பெற்றவர்.

தமிழ்ப்பணிகளுக்காக தமிழக அரசின் கலைமாமணி விருது, திரு.வி. கலியாணசுந்தரனார் விருது, புதுவை அரசின் கலைமாமணி, தமிழ்மாமணி விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

© TamilOnline.com