தேவையான பொருட்கள் பழுப்பரிசி - 2 கிண்ணம் துவரம்பருப்பு - 1 மேசைக்கரண்டி பயத்தம்பருப்பு - 1/4 கிண்ணம் கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு மிளகாய் வற்றல் - 3 அல்லது 4 பச்சைமிளகாய் - 1 உப்பு - தேவைக்கேற்ப நெய் - 1 தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை: பழுப்பரிசியைத் தண்ணீரில் ஒருமணி நேரம் ஊறவைக்கவும். நீரை வடிக்கவும். பயத்தம்பருப்பை வாசனை வர வறுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்/நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும். தேங்காயையும் அதில் போட்டுச் சிவக்க வறுத்து, கறிவேப்பிலை உப்புச் சேர்க்கவும். இதில் 5 கிண்ணம் தண்ணீர் ஊற்றி, பழுப்பரிசி, பயத்தம்பருப்பு இவற்றைப் போட்டு குக்கரில் வேகவிடவும். ஆறு, ஏழு விசில் விடலாம். பிறகு எடுத்து, நன்கு கலந்து சாப்பிடவும். இதனை உசிலி என்று சொல்வார்கள். நீரிழிவு உள்ளவர்களுக்கு மிக நல்லது. தேங்காய் இல்லாமல் வெங்காயம் வதக்கிப் போட்டும் செய்யலாம். தக்காளிச் சட்னி அல்லது மிளகாய் புளிப்பச்சடியுடன் சாப்பிடக் கொள்ளை சுவை!.
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி |