மகள்
''சாயங்காலம் உங்களோட பேச்சு இருக்கே! தயார் செஞ்சாச்சா?'' பாகிரதி தன் கணவனிடம் கேட்டாள்.

''தலைப்பு என்ன தெரியுமோ.. 'சொந்தக் காலில் நிற்பது', பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேலே சாராம இருப்பது எப்படிங்கறது''

''சரியான தலைப்புதான், நீங்களே எடுத்துண்டதா?''

''இல்லே ரதி. பிரசிடெண்ட் சுவாமிதான் உங்களுக்குச் சரியான தலைப்புன்னு கொடுத்தார். இங்கே 50 சீனியர் காட்டேஜுகள் இருக்கு. எல்லோருடைய குழந்தைகளும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர் இப்படி உலகம் பூரா இருக்கா. அமெரிக்காவிலேதான் ஜாஸ்தி. ஆனா ரொம்பப் பேர் நம்பள மாதிரி கிரீன் கார்டு வாங்கி சில வருஷங்களுக்கு அப்புறம், அது வேண்டாம்னு விட்டுட்டா. பணரீதியா யாருக்கும் பிள்ளைகளோட தயவு வேண்டியதில்லை. ஆனால் அன்பு, பாசத்திற்காகத் தான் பல பேர் ஏங்கறா. எனக்கு இந்த தலைப்பு கொடுத்தப்போ எனக்கு ஒரு காலே போதும், இன்னொரு கால் என் மனைவி பாகிரதி. அதனாலே 'சொந்தக் கால்கள்' அப்படீங்கறதை கால்னு மாத்திட்டேன்.''

''அது சரி, நம்ம பொண்ணு மாலினிக்குக் கல்யாணம் பண்ணலைன்னு உங்களுக்குத் தோணலையே''

''ரதி, தன் வாழ்க்கையை தானே அமைச்சிக்கணும். மாலினி ஓர் அமெரிக்கப் பிரஜை. உயர்ந்த படிப்பு, பொறுப்பான வேலை, நல்ல எண்ணங்கள். நமக்கு மாதம் இருபதாயிரம் ரூபாய் அனுப்ப வேண்டாம்னு எத்தனையோ தடவை சொல்லிட்டேன். 'அப்பா உங்களுக்கு வசதியிருக்கு. ஆனா என் மனத் திருப்திக்காகத்தான் அனுப்பறேன். என்னை ஒரு பையனாகத்தான் வளர்த்தீர்கள்... இல்லையா?' அப்படீன்னு சொல்றா அவ. மாலினி அனுப்பறதுல பாதியை நாம் 'கிருஷ்ணா கடவுள் கண் மணிகள்'க்கு அனுப்பிடறோம். உனக்குத் தெரியுமே... பிறந்தநாள், கல்யாணநாள் சந்தர்ப்பத்திலே அந்த ஆசிரமத்திற்குப் போறோம். அந்தப் பிஞ்சுக் குழந்தைகளைப் பார்க்கும்போது பாலகிருஷ்ணனைப் பார்க்கற மாதிரி இருக்கு; உனக்கும் அப்படித்தானே..''

"வாரக்கடைசியில எங்களைப் பார்க்க வறே, குழந்தை மாலினி. எங்களுக்கு நிரம்ப சந்தோஷம். ஆனா வரும் போது வாரத்திற்கு வேண்டிய பலசரக்குளையும் வாங்கிக்கிட்டு வரயே, அதிலே எனக்குச் சம்மதம் இல்லே. என்ன ஜூலி உனக்குந்தானே?''

"ஆமாம் ஜேம்ஸ். மாலினி நமக்குப் பிறக்காத பொண்ணு. நம்மோட ஏழிலே ஆறு குழந்தைங்க ஏற்கனவே பறந்து போயிட்டுதுங்க. கடைக்குட்டி எப்போ இறகு முளைக்கும்னு காத்திட்டு இருக்கான். 18வயது ஆன உடனே எல்லாக் குழந்தைகளும் போய்டுதுங்க. நீங்கதான் கவலையில்லாம 'பதினெட்டு வயதுப் பறவைகள்'னு சிரிச்சிக் கிட்டே சொல்றீங்க''

''ஜூலி, ஓர் உயிரை உண்டாக்கிய ஜீஸஸ் அதற்கு உணவு அளிக்காமல் இருப்பாரா? நம்ம நாட்டு டாலர்லே 'In God We Trust"ன்னு போட்டிருக்கே. அதே அரசு நமக்குப் பராமரிப்பும் கொடுக்குது. நமக்கு ஒரு பட்டம் கிடைச்சிருக்கே! BPL-below poverty line அப்படீன்னு, அது போதாதா! மாலினி நான் என்ன சொல்றேன்று புரியுதா?''

''டாட், மாம்! ஓர் உயிருக்குத் தாய் தந்தை உண்டு. அந்த விதத்திலே எனக்கு உயிரளித்த தாய் தந்தையர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அந்த ஒருநாள் ஹைவே விபத்துலே என் உயிர் ஊசல் ஆடிக் கொண்டிருந்தது. அப்போ என்னைக் காப்பாற்றி எனக்கு மறு உயிர் கொடுத்தீர்கள். அதனாலே எனக்கு நீங்க எனக்கு இன்னொரு பெற்றோர் ஆயிட்டீங்க. பிறந்தபோது எனக்கு உயிர்கொடுத்ததை என்னால் உணர முடியவில்லை. ஆனால் போன உயிரை நீங்க திருப்பிக் கொடுத்தது--அந்த உணர்வு என்னைப் பூராவும் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கு. விபத்து 30 செகண்டுக்குள் நடந்துடுச்சு. எனக்கு மூச்சுக்கூட வரவில்லை. நான் கையை ஆட்டிய சைகையைச் சிலர் பார்த்தும் நிற்காமல் போய்விட்டார்கள். ஒவ்வொரு கார் லைட்டைப் பார்க்கும் போதும் என் நம்பிக்கை துளிர்க்கும். கார் நிற்காமல் போய்விடும் போது மனம் சோர்ந்து போகும். நீங்க காரை என்னருகில் நிறுத்தும்போது எனக்கு உணர்வு போய்விட்டது. நீங்கள் என்னைக் காப்பாற்றிவிடுவீர்களென என் உள்ளுணர்வுக்குத் தோன்றியிருக்கலாம்!''

''மாலி, எங்கள் காரை நிறுத்தியது ஜீஸஸ்தான். என்னைப் போல் அதுக்கும் வயசாச்சு. அதுக்கு அடிக்கடி ஜுரம் வரும். அப்போதெல்லாம் இப்படித்தான் நின்னுடும். அன்னைக்கும் அப்படித்தான். நீ ரத்தத்திலே கிடந்தே. உடனே என் காருக்கு ஜுரம், நின்னுடுச்சு. பின்னால் வந்தவர்களை நிறுத்தினேன். பலர் என்னை ''you balck ba***" என்றுகூடத் திட்டினார்கள். என்னை வழிப்பறிக் கொள்ளையன் என்று நினைச்சுட்டாங்க போல. விவரமா ஆம்புலன்சுக்குப் போன் செய்ய வச்சேன்.

"உன்னுடைய பல்ஸ் இறங்கிட்டிருந்தது. உனக்கு mouth to mouth resuscitation கொடுக்க நினைச்சேன். ஜூலி பக்கத்திலிருக்கையிலே எனக்கு தைரியம் வருமா. அவளையே உனக்குச் செய்யச் சொன்னேன். ஜூலி கல்யாணம் ஆனதிலிருந்து அந்த மாதிரி முத்தம் கொடுத்ததே இல்லை,'' குறும்பாகக் கண் சிமிட்டுகிறார் ஜேம்ஸ்.

''ஜேம்ஸ், உங்களுக்கு வாழ்க்கைக்கும் விளையாட்டிற்கும் வித்தியாசம் இல்லை...''

"மாலி அடிக்கடி சொல்லும், கிருஷ்ணன்னு அவங்க கடவுளாம். அவர் விளையாடியே வாழ்க்கைக்கு வழி காட்டினாராம். கடவுளுக்கு நாம் நன்றி சொல்லறது எப்படி? நாமும் நம் சுற்றமும் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்டறதுதான். மாலி நீ என்ன சொல்றே?''

''டேட், இந்த எழுவது வயதிலும் உங்கள் நகைச்சுவையும், உயர்ந்த எண்ணங்களும் தான் உங்களை ஆரோக்கியமா வச்சிருக் குது...'' என்றாள் மாலினி.

''மாலி நீ வேறே தூபம் போடாதே. இவருக்கு 25 வயது என்று நினைப்பு. ஜீஸஸ் கருணையினாலே குரல் நன்றாக இருக்கு... இரவுவிடுதிகளிலும், ரெஸ்டராண்ட்களிலும் பாட அழைக்கிறார்கள். ஆனால் என்ன புண்ணியம். வந்த பணத்திலே பாதியை நண்பர்களுக்காகச் செலவு செய்தா எப்படி? இந்த மனுஷனுக்குப் பாட ஆரம்பிச்சா பசியே தெரியாது.''

"மாலி எவ்வளவு சொல்லியும் வாராவாரம் வந்து எங்களைப் பார்த்துப் பேசறதுல எங்களுக்கு பாதி வயிறு நிரம்பிவிடுகிறது. போதாதுன்னு வாரத்துக்கு வேண்டிய பலசரக்குகளையும் வாங்கி வர்ற... இந்த மனுஷன் அக்கம்பக்கத்துப் பேர்களையெல்லாம் விருந்துக்கு அழைச்சிடறாரு. எனக்குச் சமையல் செய்து மாளலே''

''ஜூலி, முக்கால் சமையலை நானே முடிச்சிடறேன். பாத்திரங்கள் நானே கழுவிடறேன். சமையல் பதமா இருக்கான்னு பார்க்கறதுதான் உன் ஜோலி... ஏன்னா நீதான் ஸ்பெஷலிஸ்டு. கடைசிலே உட்கார்ந்து சாப்பிடணும். ஆமாம்... ஆமாம், சாப்பிடறது உனக்குப் பெரிய வேலைதான். சாப்பிட்ட உடன் எழுந்திருக்க முடியாத அளவுக்கு," இடிச்சிரிப்பு சிரிக்கிறார் ஜேம்ஸ்.

''மாலி உன்னுடைய படிப்புக்கும் வேலைக்கும் தகுதியான குடியிருப்பு இது இல்லை. Ghetto என்று சொன்னாலே இங்கு குடியிருக்க உன்னைப் போல் படித்தவர்கள் இங்கு வரமாட்டார்கள். எங்க கடைசிக் காலம்வரை எங்க பக்கத்திலே இருக்கணும்னு நீ பிடிவாதம் பிடிக்கிறே. எங்கள் குழந்தைகள் கூட இங்க வர விருப்பம் தெரிவிக்கவில்லை.

"ஜூலி போகும்போது கடைசிவரை அவள் பக்கத்திலேயே உட்கார்ந்து கவனிச்சியே. இயேசு உனக்கு இன்னும் உயர்ந்த வாழ்க்கையை அளிப்பார். அவளை அடக்கம் பண்ணும்போது, பெரிய பெண் எம்மா தவிர நீதான் அவளுடைய குழந்தையாயிருந்து நல்லபடி வழியனுப்பி வைச்சே. எல்லாச் செலவையும் நீயே செய்தியே. போன ஜன்மத்தில் நீ எங்கள் குழந்தையா? இல்ல இல்லே. எங்களுடைய தாய். ஏன்னா, இந்த ஜென்ம குழந்தைகளைப் போல் போன ஜென்மத்திலும் குழந்தைகள் இருந்திருக்கலாம். ஆனால் தாய்தான் எல்லா ஜென்மத்திலும் ஒரே அன்பு நிலை.

"ஜூலி போறதுக்கு இரண்டு நாள் முந்தி என்ன சொன்னா தெரியுமா? 'ஜீஸஸ்! அடுத்தமுறை நான் மாலிக்குக் குழந்தையாய்ப் பிறந்து என் நன்றியை நிறைவு செய்யணும். எங்கேயோ பிறந்த இந்தியப் பெண், நாம் எதேச்சையாய்ச் செய்த உதவியை மறக்காமல் நம் கடைசி காலம் வரை நம் பக்கத்திலிருப்பது நாம் செய்த புண்ணியமா? நம்ம ஏழு குழந்தைகளைவிட, மாலி என் பக்கத்திலிருப்பது நான் செய்த தவம். நான் மேலேயிருந்து எப்போதும் மாலியை ஆசீர்வதித்துக் கொண்டே இருப்பேன். என் மனதில் ஒரு நிம்மதி இப்போது, மாலி என் பக்கத்திலிருந்து கொண்டு ஜீஸஸிடம் போக வழிகாட்டுவது போல ஒரு மனநிம்மதி.'

''மாலி, ஜூலி இருந்தபோது இருந்த மனதைரியம் இப்போது எனக்கு இல்லை. ஜூலியிடம் போய்ச் சேரத் துடிக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் முள்ளின் மேல் படுத்துக்கிடக்கிறேன். நீ இப்போதும் என் பக்கத்திலிருப்பது குளிரில் துடித்துக் கொண்டிருந்த போது ஒரு நல்ல கம்பளிச் சால்வையால் போர்த்தினது போலிருக்கு. வரும் கிறிஸ்துமஸ்ஸ¤க்கு முன்னாலேயே நான் ஜூலியிடம் போய்ச் சேர்ந்திடுவேன். ஜீஸஸ் என் வேண்டுதலுக்கு எப்போதும் செவி கொடுப்பார். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

"மாலி, நான் போவதற்கு முன் ஏதாவது ஒரு ஞாபகப்பொருள் தரணும். ஜூலி என்னிடம் சொல்லிவிட்டுத்தான் கண் மூடினாள். அவள் அப்பா வழித் தாத்தா ஒரு வெள்ளிச் சிலுவையை அவளுக்குக் கொடுத்தார். இது ஒரு ரட்சை மாதிரி. இது உன்னிடம் இருக்கும் போது உனக்கு ஒரு கெடுதலும் நடக்காது. நல்லதே நடக்கும் என்று சொல்லி அவளுக்கு அணிவித்தாராம். நாங்கள் காதலித்த காலத்தில் ஒருநாள் ஜூலி எனக்குக் கொடுத்தாள். இதை என் கழுத்திலிருந்து கழட்டவிடமாட்டாள். நீங்கள் தாலியென்று ஒரு புனிதச் செயின் அணிவீர்களாமே அதேபோல்தான் இது.

"இந்தச் சிலுவை மதபேதம் இல்லாதது. இதைச் செய்தவர் ஒரு மலேசிய இஸ்லாமியர். ஜூலியின் தாத்தா சிலோனைச் சேர்ந்த புத்தமதத்தினர். அவர் மலேசியா வழி இங்கு வரும்போது அதை வாங்கினார். அவர் ஜூலியின் பாட்டியை காதலித்து மணந்த போது இதை பரிசாகக் கொடுத்தாராம். தாத்தாவும், பாட்டியும் கடைசிவரை மணவாழ்க்கையில் ஒன்றிச் சந்தோஷமாக வாழ்ந்தனர்.

"இந்தச் சிலுவையை உனக்குக் கொடுக்கிறேன். என்னிடம் இது இருந்தவரை எனக்கு எப்போதும் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் இருந்தது. இந்த மகிழ்ச்சி உனக்கும் கிடைக்கும்.''

''அப்பா மாலினி பேசறேன்.''

''என்னம்மா செளக்கியந்தானே? ஏன் உன் குரல் கம்மியிருக்கு. உடம்புக்கு ஒண்ணும் இல்லையே? போன் சரியில்லையோ...''

''மனசு சரியில்லைப்பா. மூன்று நாளைக்கு முன்னே ஜேம்ஸ் டாட் எங்களை விட்டு ஜீஸஸோட சேர்ந்துட்டார்..''

''அடடா! நல்ல மனுஷன். உடம்பு நன்றாகத்தானே இருந்தார்...''

"ஜூலி மாம் போனதிலிருந்து அவரது மனசு தொய்ஞ்சுப் போயிடுச்சு. தான் சீக்கிரம் ஜூலியுடன் போய்விடுவேன்னு அடிக்கடி சொல்லுவார்."

''நீ பக்கத்திலிருந்து எல்லா வேலையையும் கவனிச்சிருப்பேன்னு எனக்குத் தெரியும்...''

''ஆமாம்ப்பா.. கடைசி நாலு நாள் லீவு போட்டுட்டு அவர் பக்கத்திலேயே இருந்தேன். அவர் என்னிடம், 'மாலி, கிறிஸ்துவ மதத்தில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. உன்னைப் பார்த்தபின் பிற மதத்திலும் எனக்கு மரியாதை வருகிறது. கடவுள் இருப்பது மலையுச்சி. மலையடி வாரத்திலிருந்து உச்சிக்குப் போக மலையடி வாரம் 360 டிகிரியிலும் வழியுண்டு. நான் ஏறும் பாதை கிறிஸ்துவம், நீ ஏறும் பாதை இந்துமதம். மலையடிவாரத்தில் நாம் தள்ளித் தள்ளி இருக்கலாம். மலையேற ஏற நாம் ஒருவருக்கு ஒருவர் அருகில் வருகிறோம். எனக்கு ஒரு கடைசி ஆசை. உன் மடியில் தலை வைத்து நிம்மதியாய்த் தூங்கும்போதே நான் ஜீஸஸிடம் போகணும். உன் தாய்மடி எனக்குக் கிடைக்குமா...!' என்றார்.

கடைசி நாளன்று ஜேம்ஸ் டாடுக்கு சுவாசம் வாங்க ஆரம்பித்துவிட்டது. என்னைப் பார்த்து பிரிட்ஜ் பக்கம் கண்ணசைத்தார். நான் அதிலிருந்து ஒரு டம்ளரில் பாலும் ஸ்பூனும் எடுத்து அவரிடம் வந்தேன். அவர் தலையை என் மடியில் வைத்து அவரைப் பார்த்தேன். வாயைத் திறந்தார். ஒரு ஸ்பூன் பால் கொடுத்தேன். ஒவ்வொரு ஸ்பூன் பால் விழுங்கும் போது என்னைப் பார்ப்பார். கண்களில் ஒரு நிம்மதியைக் கண்டேன். கடைசி முறை கண்மூடியபின் திறக்கவேயில்லை. கண்களில் நீர் வழிந்தது, வாயில் பால் வழிந்தது. அப்போது அவர் சொல்லிய வார்த்தை என் மனத்தில் எதிரொலிக்கிறது, 'மாலி, நீ என் பக்கத்திருக்கும்போது என் கண்களில் நீர் வழிந்தால் அது ஆனந்தக் கண்ணீராகத்தான் இருக்கும்.'

''அப்பா, அப்பா, என்னால் தாங்கமுடிய வில்லை. அப்பா... அம்மா...''

''வாய் விட்டு அழுதுடு.. அப்பதான் மனப்பாரம் இறங்கும்..அழுடா கண்ணு!''

மாலினி, நானும் அம்மாவும் ரொம்பப் பெருமைப்படறோம் உன்னுடைய செயலுக்கு. நான் படித்தது ஒண்ணு நினைவுக்கு வருது, 'மனிதர்கள் இறப்பார்கள்... மனிதநேயம் இறக்காது'. உண்மைதான்."

தண்டலை நடேசன் ஸ்ரீநிவாசன்

© TamilOnline.com