ரேவதியின் திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரங்கூட இல்லை. வீடு களைகட்டத் தொடங்கிவிட்டது. கொழும்பிலிருந்து சித்தப்பா, மாமா குடும்பத்தினர் குழந்தைகளோடு வந்திருந்தனர். ரேவதியின் தம்பி குமாருக்கு ஒரே கொண்டாட்டம். திருமணம் முடியுமட்டும் பள்ளிக்குப் போகவேண்டாம் என்று அப்பா சொல்லிவிட்டார். வந்திருந்த குழந்தைகளோடு ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தான். நிறைய உறவினர்களும், நண்பர்களும் வந்திருந்து ஆகவேண்டிய வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். வீட்டு முற்றத்தில் பந்தல் ஒன்று போட்டு அதனைச் சோடிக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டிருந்தார்கள். ரேவதியின் அம்மா தங்கம் சில பெண்களோடு சேர்ந்து முற்றத்தின் இன்னொரு பக்கத்தில் அடுப்பு மூட்டி முறுக்கு, சீடை, தட்டைவடை என்று பலவகையான பண்டங்க¨ளையும் செய்து கொண்டிருந்தாள். குமார் இடையிடையே வந்து அம்மாவுக்குத் தெரியாமல் முறுக்கு, வடை என்று எடுத்துக்கொண்டு ஓடினான். அப்பா வேலுப்பிள்ளை எல்லாவற்றையும் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.
வேலுப்பிள்ளையின் மனத்தில் ஒரு பெருமிதம். ஓரு பெண்ணைக் கரை சேர்ப்பதென்றால் சும்மாவா? அதுவும் தனது ஒரே மகளுக்குக் கனடாவில் வசதியோடிருக்கும் ஒரு மாப்பிள்ளை கிடைத்ததில் அவருக்குப் பரம திருப்தி. மாப்பிள்ளையும் தனக்கு சீதனம் ஒன்றுமே தேவையில்லை என்று சொல்லிவிட்டான். இலங்கையில் இனப்பிரச்சினை தொடங்கிய பின்னர் பல தமிழ் இளைஞர்கள் கனடா, அமெரிக்கா, நோர்வே என்று பல இடங்களுக்கும் அகதிகளாகப் போய்க் குடியேறினர். அவர்களில் பலர் எப்படியும் ஊர்ப் பெண்ணொருத்தியைத்தான் கட்டவேண்டுமென்று திரும்பி வந்து திருமணம் செய்து கொண்டு சென்றனர். அப்படித்தான் சங்கரும் கனடாவிலிருந்து வந்து ரேவதியைப் பார்த்துச் சம்மதம் தெரிவித்து விட்டான். வேலுப்பிள்ளை இது தனக்குக் கிடைத்த பெரிய அதிர்ஷ்டமாக நினைத்து மகிழ்ந்து போனார். அவருடைய வசதிக்கு மேலாகவே ஒரு மாப்பிள்ளை கிடைத்து விட்டான். வழமையாக யாழ்ப்பாணத்து மாப்பிள்ளை என்றால் நிறையச் சீதனம் கேட்பார்கள். ஓரு வீடு கூடச் சீதனமாகக் கொடுக்கவேண்டி இருக்கும். வேலுப் பிள்ளை யாழ்ப்பாணக் கச்சேரியில் குமாஸ்தாவாக வேலை செய்கிறார். அவருக்குக் கிடைக்கும் சம்பளம் அன்றாட செலவுகளுக்குத்தான் போதுமானது. அப்படியிருந்தும் ரேவதி பிறந்த நாளிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்த காசில் ஒரு சிறிய கல்வீடொன்று கட்டி வைத்திருந்தார். சங்கர் அதையும் வேண்டாமென்று சொல்லிவிட்டான்.
ரேவதியும் ஓடியாடி வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். வீடு துப்புரவாக்கும் வேலையை அம்மா அவளுக்குக் கொடுத் திருந்தாள். ரேவதியின் முகத்தில் வேர்வைத் துளிகள் அரும்பியிருந்தன. ஒரு திருமணப் பெண்ணிற்கான களையை அதில் காண முடியவில்லை. ஓர் ஏமாற்றம், ஓர் ஏக்கம், ஒரு சோகம் - இப்படிப் பல உணர்வுகள். அப்பா, அம்மா, தம்பி, உறவினர், நண்பர்கள் எல்லோருமே மகிழ்ந்திருந்த அந்த நேரத்தில், அவளுக்கு மட்டும் ஏன் இந்த மனக்குழப்பம்?
பாலு அமெரிக்காவிலிருந்து வந்து, தன்னைக் கூட்டிக்கொண்டு செல்வான் என்ற நம்பிக்கையில் ரேவதி கடந்த இரண்டு வருடங்களையும் கழித்துவிட்டாள். 'எப்படி யும் நான் திரும்பி வந்து உன்னைக் கல்யாணம் செய்து கூட்டிக்கொண்டு போவன்' என்று அவன் அமெரிக்கா செல்வதற்கு முன்னர் திரும்பவும் திரும்பவும் சொல்லிச் சென்றது இன்றும் அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஆனால், அங்கு போன பின்னர் அவன் ஒரே ஒரு கடிதந்தான் போட்டான். அதன் பின்னர் அவள் தனது உள்ளத்தை உருக்கி வரைந்த கடிதங்களுக்கெல்லாம் பதிலே இல்லை. பாலுமேல் அவளுக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்தது. அமெரிக்கா அவ்வளவு இலகுவில் அவனை மாற்றிவிட்டதா?
சங்கர் வந்து அவளைப் பெண்பார்த்துச் சம்மதம் தெரிவித்த பின்னர், அப்பாவிற்கும் அம்மாவிற்கும் எதுவும் சொல்லவும் முடியாமல், உள்ளத்தில் கட்டிவிட்டிருந்த கற்பனைக் கோட்டைகள் உடைந்து சிதறப்போவதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அவள் துடிதுடித்துப் போனாள். 'இதுதான் நான் உங்களுக்கு எழுதும் கடைசிக் கடிதமாகக் கூட இருக்கலாம். எனக்குக் கல்யாணம் பேசி முடிவாகிவிட்டது. இந்தக் கடிதத்தைக் கண்டவுடன் ஓடிவந்து என்னைக் கூட்டிக் கொண்டு போவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இதை எழுதுகிறேன். இதுவரைக்கும் நான் எழுதிய கடிதங்களுக்கெல்லாம் படிப்பு, வேலை போன்ற காரணங்களால் பதில் போடாமல் இருந்திருக்கலாம். தயவுசெய்து இனிமேலும் பொறுத்திருக்க வேண்டாம். Please, please, என்னை வந்து காப்பாற்றுங்கள்...' என்று அவள் கடிதம் வரைந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. பாலுவிடமிருந்து இதுவரை ஒருவித செய்தியும் வரவில்லை.
பாலுவை ரேவதி முதன்முதலாகப் பார்த்தது 'கேம்பிரிட்ஜ் சென்டர்' என்ற ரியூட்டரியில் தான். அப்போது அவள் பல்கலைக்கழக அனுமதிப் பரீட்சைக்கு மும்முரமாகத் தயாராகிக் கொண்டிருந்த நேரம். பள்ளிக் கூடத்தில் பயிற்சி போதாதென்று வசதியுள்ள எல்லா மாணவர்களுமே ரியூஷனுக்குப் போவது வழக்கமாகிவிட்டது. வகுப்பு தொடங்குவதற்கு முன்னர் வெளியே தோழிகளோடு நின்றிருந்தபோது பாலு நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டே வந்தான். அவனது அழகான தோற்றம் அவளது கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை. பின்னர் பல தடவை அவனைக் கண்டபோதெல்லாம் அவன் தோளை உயர்த்தி உயர்த்திக் கதைக்கின்ற விதத்தையும், ஸ்டைலாகத் தலையைத் தடவி விட்டுக்கொள்கின்ற முறையையும் பார்த்து 'அவனுக்குத் தான் ஒரு ஹீரோ என்று நினைப்பு' என எண்ணிக்கொண்டாள்.
ஒரு நாள் அவள் ரியூஷன் முடிந்து அந்தச் சிறு தெருவினூடாக வீடுநோக்கித் தம்பி குமாரோடு நடந்துகொண்டிருந்தபோது பின்னால் பாலு சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். ரேவதியும் அவனைப் பார்க்காத மாதிரி நடந்துகொண்டே இருந்தாள். சிறிது நேரத்தில் அவர்களைக் கடந்து அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே சைக்கிளில் ஓடிக்கொண்டிருந்தான். ஆனால், குறுக்குத் தெருவிலிருந்து திடீரென்று வந்த அந்தச் சைக்கிளை பாலு கவனிக்கவில்லை. இரண்டு சைக்கிள்களும் மோதி, பாலு நிலத்தில் விழுந்து, 'விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்பதுபோல் எழுந்து நின்றபோது, ரேவதியும் குமாரும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கி விட்டார்கள். அதன் பின்னர் இரு வாரங்களாக பாலுவை அந்தத் தெருவில் காணவே இல்லை.
பெண்ணின் மனது விசித்திரமானது. பாலு இரு வாரங்களாக வராதது அவள் மனதுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது.
ரியூட்டரியில் பார்த்தும் பார்க்காததுபோல் அவன் நடந்துகொண்டான். பின்னர் ஒருநாள் தம்பி அவளைக் கூட்டிக்கொண்டு போக வராததால் ரேவதி தனியே நடந்து வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தாள். யாரோ சைக்கிளில் வருவதுபோல் இருக்கவே திரும்பிப் பார்த்தாள். பாலு சைக்கிளிலிருந்து இறங்கி அருகில் நடந்து வந்தான். "எப்படி பரீட்சைக்கு நல்லா படிக்கிறீங்களா?" என்றான். " ஓ, ஆனால் கெமிஸ்றி தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு" என்றாள் அவள். "எனக்குக் கெமிஸ்றி நன்றாகப் பிடிக்கும். நான் உங்க வீட்டுக்கு வந்து சொல்லித்தரவா?" என்றான். "வீட்டுக்கு வந்தீங்களெண்டால் அப்பா உங்கடை முதுகுத்தோலை உரிச்சுப் போடுவார்" என்று சிரித்தாள் அவள்.
அதன் பின்னர் அடிக்கடி பாலு சைக்கிளில் அவளைத் தொடர்ந்து வந்தான். அவன் வரும்போதெல்லாம் ரேவதி தம்பி குமாரிடம் காசு கொடுத்து "போய் சாக்லட் வாங்கிச் சாப்பிடு" என்பாள். அவனும் மகிழ்ச்சியோடு துள்ளி ஓடுவான். பின்னர் வீட்டருகில் அவளுக்காகக் காத்திருப்பான். ரேவதியும் பாலுவும் கதைத்து, சிரித்து, கைகோர்த்துத் திரிந்த அந்த நாட்கள் மிகவும் இனிமை யானவை. தெருவின் இருபுறமும் இருந்த பனந்தோப்புகள், மாஞ்சோலைகள், தெருக் கோடியில் இருந்த அம்மன் கோவில், ஆலமரம் எல்லாமே அவர்கள் காதல் வளரத் துணைநின்றன.
பரீட்சை நெருங்கிக்கொண்டிருந்தது. ரேவதி - பாலுவின் காதல் செய்தி ஊரில் பரவத் தொடங்கி விட்டது. ரேவதியின் பெற்றோர் செய்தியறிந்து துடித்துப் போய் விட்டனர். சினிமாப் படங்களில் வரும் காதல் தோல்வியைக் கண்டு கண்ணீர் வடிக்கின்ற அம்மா இப்போது ரேவதியை "கண்டவங்களோடையும் சுத்திறதுக்கா உன்னைப் படிக்க விட்டம்? ஊரெல்லாம் அதைப்பற்றித்தான் கதைக்கிது. எங்கடை மானம் போகுது" என்று திட்டிக்கொண்டே இருந்தாள்.
அப்பா "அவன் பெரிய இடத்துப் பிள்ளை. எங்களுக்கும் அவங்களுக்கும் சரிவராது. இனிமேல் அவனை நீ பார்க்கக் கூடாது. ரியூட்டரிக்கு இனிப் போகத் தேவையில்லை. வீட்டிலையிருந்து படி" என்று திட்டவட்ட மாகச் சொல்லிவிட்டார். சில வாரங்களில் பரீட்சை தொடங்கியது. பரீட்சைக்குப் போகும்போது மட்டும் இடையிடையே அவனைக் கண்டாள். அதிகம் அவனோடு கதைக்க முடியவில்லை. ஓரிருமுறை கதைக்கச் சந்தர்ப்பம் கிடைத்தபோது வீட்டில் நடந்ததை எடுத்துச் சொன்னாள். பரீட்சை முடிந்த பின்னர் பாலு இடையிடையே சைக்கிளில் அவள் வீட்டருகால் செல்வான். ஆனால் அம்மா எப்போதும் அருகே இருப்பதால் அவனோடு கதைக்க முடியவில்லை.
சில வாரங்களில் பரீட்சை முடிவுகள் வெளிவந்தன. ரேவதியின் முடிவுகள் திருப்திகரமாக அமையவில்லை. "கண்டவ னோடையும் சுத்தினால் படிப்பு எப்படி வரும்" என்று அம்மா மீண்டும் திட்டித் தீர்த்தாள். பாலுவின் பரீட்சை முடிவுகள் நன்றாக அமைந்துள்ளன என்று தோழிகள் சொன்னபோது அவள் மகிழ்ந்து போனாள். உடனே அவனைப் பார்த்துப் பாராட்ட வேண்டும்போல் இருந்தாலும் அவளால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. சில நாட்களின் பின்னர் பாலு ரகசியமாகக் கடிதமொன்றை குமாரிடம் கொடுத்து விட்டிருந்தான். அந்தக் கடிதத்தில், தான் விரைவில் தன் சித்தப்பாவிடம் கலி·போர்னியா செல்ல இருப்பதாகவும் அங்குதான் படிப்பைத் தொடரவேண்டுமென்று தனது பெற்றோர் வற்புறுத்துவதாகவும் எழுதியிருந்தான். அடுத்த வெள்ளிக்கிழமை பிள்ளையார் கோவிலில் அவளைச் சந்திக்கும்படியும் கேட்டிருந்தான். பக்கத்து வீட்டுக் கமலா வோடு கோவிலுக்குச் செல்வதற்கு அம்மா ஒருவாறு சம்மதித்தாள். கோவிலில் பாலுவைச் சந்தித்தபோது அவன் அவளுக்கு ஆறுதல் சொல்லி, போய்ச் சேர்ந்தவுடன் கடிதம் போடுவதாகவும் பதில் தவறாமல் போடும்படியும் சொல்லிச் சென்றான்.
பாலு கலி·போர்னியா போய்ச் சேர்ந்த இருவாரங்களில் அவனது கடிதம் வந்து விட்டது. பாலு அமெரிக்காவுக்குப் போய் விட்டான் என்ற துணிச்சலில் அம்மா கெடுபிடிகளை நன்றாகக் குறைத்துக் கொண்டாள். அதனால் ரேவதி தபால்காரன் வரும்வரை காத்திருந்து அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டாள். அந்தக் கடிதம் அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தென்பையும் கொடுத்தது. இரகசியமாக அதற்குப் பதிலெழுதி தம்பி குமாரிடம் "தம்பி இதைப் போஸ்ட் ஆபீசில் கொண்டுபோய் போட்டுவிடுறியா" என்று அவன் கையில் கடிதத்தையும் காசையும் கொடுத்து "மிச்சக் காசை நீ வைச்சுக்கொள்" என்றாள். அவள் எழுதிய அந்தக் கடிதத்திற்கு நீண்ட நாட்களாகப் பதில் வரவில்லை. அதன் பின்னர் அந்த இரண்டு வருடங்களில் பத்துக் கடிதங்கள்வரை எழுதியிருப்பாள். தபால்காரனின் வருகைக்காகக் காத்திருந்து காத்திருந்து ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம்.
இப்போது திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரங்கூட இல்லாத நிலையிலும் அவள் உள்ளத்தின் ஒரு மூலையில் அவன் வருவான் என்ற நம்பிக்கை மட்டும் இருக்கத்தான் செய்தது.
ரேவதி இந்த மனக்குழப்பத்தின் மத்தியிலும் வீட்டைத் துப்புரவாக்கும் வேலையில் கவனத்தைச் செலுத்த முயன்று கொண்டிருந்தாள். அம்மா உள்ளே வருவதைக் கண்டு நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வைத் துளிகளை விரல்களால் துடைத்தபடியே நிமிர்ந்து பார்த்தாள். "ரேவதி, தம்பியின்ரை ரூமைத் துப்பரவாக்க மறந்திடாதை. அவன் சரியான குப்பையாக வைச்சிருக்கிறான்" என்று அம்மா சொல்லிவிட்டுப் போனாள். ரேவதி குமாரின் அறைக்குள் சென்றாள். அங்கே புத்தகங்கள், உடுப்புகள் எல்லாமே ஒழுங்கில்லாமல் ஆங்காங்கே போடப் பட்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்திக் கொண்டே வந்தவள் அவனது புத்தக அலமாரியை மெதுவே திறந்தாள். அலமாரி நிரம்பி வழிந்ததால் சில புத்தகங்களும் மற்றும் பொருட்களும் அவள் காலடியில் வந்து விழுந்தன. குனிந்து பார்த்தவள் அப்படியே அதிர்ந்து போனாள். அவள் பாலுவுக்கு எழுதிய அத்தனை கடிதங்களுமே அவள் காலடியில் விழுந்து கிடந்தன, ஸ்டாம்ப் ஒட்டாமலே. அந்தக் கணத்தில் அவள் கட்டிவைத்திருந்த கற்பனைக் கோட்டைகள் அனைத்துமே உடைந்து சுக்குநூறாகின. "தம்பி, ஏன் இப்படிச் செய்திட்டாய்" அவள் அழத்தொடங்கினாள்.
அந்த வேதனைக்கு மத்தியிலும் பாலு தன்னை ஏமாற்றவில்லை என்ற எண்ணம் மட்டும் அவளுக்குச் சற்று ஆறுதலைக் கொடுத்தது.
இரத்தினம் சூரியகுமாரன் |