ஒரு கிராமத்தில் என்ன நடந்ததென்று சொல்கிறேன், கேளுங்கள். அங்கு ஒரு பகுதியினர் 'லங்கா தகனம்' நாடகம் நடிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தனர். மற்றொரு பகுதியினரோ 'ஹரிச்சந்திரா'வை நடிக்கத் தீர்மானித்தனர். ராணி சந்திரமதியின் பாத்திரத்தில் நடிக்க அவர்களுக்கு ஆளே கிடைக்கவில்லை. எனவே, 'லங்கா தகனம்' குழுவிலிருந்து ஒருவரை எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
ஒவ்வொரு காட்சியாக நாடகம் நகர்ந்துகொண்டிருந்தது. இளவரசன் பாம்பு கடித்து இறப்பதுவரை எல்லாம் நல்லபடிதான் போயிற்று. ஆனால் ராணி ஒப்பாரி வைத்து அழ மறுத்துவிட்டாள், ஏனென்றால் 'மகன்' எதிர்க்குழுவைச் சேர்ந்தவன்! அதற்கு ஹரிச்சந்திரன், சந்திரமதியை எப்படிப் பழிவாங்கினான் என்றால், மகன் இறந்ததற்குக்கூட அழாத அவள் முதுகில் அவன் நன்றாகப் போட்டுச் சாத்திவிட்டான். நாடகம் திசைதிரும்பி, இப்போது வெறுப்பும் குழுச் சண்டையுமாக நடக்கத் தொடங்கிவிட்டது.
ஆஞ்சநேயர் வந்து குதித்தார். நாடகம் கிளைமாக்ஸை எட்டியது. அவர் தன் வால் நுனியில் எரியும் தீயோடு வந்து நாடக அரங்கத்தைக் கொளுத்திவிட்டார். அவரது குழுவினருக்கு ஒரே குஷியாகி விட்டது, ஆனால் எதிர்க்குழுவினரோ நொந்து போனார்கள்.
நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம், ஹரிச்சந்திரன் அல்லது லங்கா தகனம் இரண்டில் ஏதாவதொன்றை நடியுங்கள். ஒரே மேடையில் இரண்டையும் நடத்தினால் அங்கு பேரழிவுதான் வந்து சேரும். ஹரிச்சந்திரனாக இருங்கள், நெருப்போடு விளையாட மாட்டேன் என்று மறுத்துவிடுங்கள். உங்கள் இதயக்கோவிலில் சத்தியத்தைப் பிரதிஷ்டை செய்யுங்கள். அப்போது மனிதர்களிடையே சகோதரத்துவம் என்னும் செழுமையான பண்பு வளர்ச்சி அடையும்.
பாபா |