தெரியுமா?
"தாணு" சிதம்பரதாணுப் பிள்ளை, பிஎச்.டி., அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளால் சோர்ந்து போயிருந்தார். ஜனவரி அதிபர் பதவியேற்பு நாளன்று கருப்பு உடையணிந்து துக்க நாளாகக் கொண்டாடினார். உள்ளூர்ப் பள்ளி வாரியத் தேர்தல் பற்றிய செய்தி தற்செயலாக அவர் கண்ணில் பட்டது. வாரியக் குழுவில் நான்கு உறுப்பினர் இடங்களுக்குத் தேர்தலில் போட்டியிடப் போதுமான வேட்பு மனுக்கள் தாக்கலாகவில்லை என்றது செய்தி. அதிபர் தேர்தல் முடிவுகளை எண்ணி வேதனைப்படுவதை விட, உள்ளூர் அரசியலில் ஈடுபட்டு நம் பங்குக்குப் பொதுத் தொண்டாற்றினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது தாணுவுக்கு.

லசால் நகரில் காரஸ் கெமிகல் நிறுவனத் தில் சூழல்நிலை மேலாளராகப் பொறுப் பேற்றிருக்கும் தாணு கடந்த 18 ஆண்டு களாக வாழ்ந்து வரும் ஊர் லசால் அருகில் உள்ள பெரு, இல்லினாய். இந்தச் சிற்றூரில் வாழும் 9,800 மக்களில் 96% வெள்ளை இனத்தவர். தனது இனம், மதம், பெயர், மொழி, உச்சரிப்பு இவையெல்லாம் வாக்கு களைப் பெறுவதற்குத் தடையாய் இருக்குமோ என்றெல்லாம் கவலைப்படாமல் வேட்பு மனுவை வாங்கி வந்தார் தாணு.

அடுத்த ஒரு மணி நேரத்தில் தேர்தலில் போட்டியிடுவது எப்படி என்ற திடீர்ப் பாடத்தைத் தானே கற்றுக்கொண்டார். தன் நீளமான பெயரைக் (Chithambarathanu G. Pillai, Ph.D) குறுக்கி சி. ஜி. பிள்ளை என்ற பெயரில் போட்டியிட முடிவு செய்தார். வேட்பு மனுவில் ஆதரவு காட்ட 50 பேரிடம் கையெழுத்து வாங்க வேண்டியிருந்தது. வழக்கமாக உடற்பயிற்சி செய்யும் ஒய்எம்சிஏ நிலையத்தில் அன்று மாலையே 15 பேரிடம் கையெழுத்து வாங்கினார். சுறுசுறுப்பான முயற்சிக்குப் பின் 80 பேர் கையெழுத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நான்கு இடங்களுக்கு ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒரு வேட்பாளர் 50 விளம்பரப் பலகைகளை ஊரெங்கும் நட்டு வைத்ததைப் பார்த்தார் தாணு. மிகக் குறுகிய காலத்தில் 10,000 பேரின் கவனத்தை ஈர்க்க வேண்டுமென்றால், மற்றவர்களை விட அதிகமாக விளம்பரம் செய்ய வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும் என்று உணர்ந்தார். மற்றவர்களை விடக் கூடுதலான விளம்பரப் பலகைகளை ஊரெங்கும் நட்டார். இந்தத் தேர்தலில் வீடு வீடாகப் படியேறி வாக்காளர்களைச் சந்தித்த ஒரே வேட்பாளர் தாணு மட்டும் தான்.

தன் கெமிஸ்டிரி டாக்டர் பட்டத்தையும், மேலாளர் பதவியையும் தன் படிப்புக்கும் அனுபவத்துக்கும் சான்றாகச் சுட்டிக் காட்டிய தாணு, அவற்றால் மட்டும் யாரும் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று உணர்ந்து, அந்தப் பள்ளியில் படித்த தன் மூன்று மகள்களைப் பற்றிப் பேசினார். இல்லினாய் பல்கலையின் சிகாகோ மருத்துவக்கல்லூரியில் படிக்கும் தன் மூத்த பெண் செல்வி, இல்லினாய் பல்கலை-அர்பானா-சேம்பேனில் படிக்கும் இளைய பெண் பாரதி, எல்-பி உயர்நிலைப் பள்ளியில் பயிலும் கடைக்குட்டி கோகிலா ஆகியோரின் முன்னேற்றத்துக்குப் பெரு பள்ளி மாவட்டத்தின் கல்வித்தரம் உறுதுணையாய் இருந்தது என்றார் தாணு. "நமது வருங்காலம் நம் பிள்ளைகள்; அவர்கள் வருங்காலம் கல்வியில்" என்ற முழக்கத்தோடு இந்தக் கல்வி மாவட்டத்தை மேலும் முன்னேற்றத் தன் திட்டங்களை விவரித்தார்.

பெருவின் மக்களில் சிலர் இவன் எங்கே மூக்கை நுழைக்கிறான் என்று எரிச்சலோடு பார்ப்பது போல் தோன்றினாலும், தாணுவுக்கு மக்களிடையே வரவேற்பு இருந்தது. நாடு விட்டு நாடு வந்து தம் மண்ணில் வேர் விடும் இந்தத் தமிழர் தேர்தலில் போட்டியிடுவது அமெரிக்க மரபின் மாட்சிக்குச் சான்று என்று மகிழ்ந்தார்கள் பலர். இவர்களில் எவ்வளவு பேர் தேர்தல் அன்று மறக்காமல் தனக்கு வாக்களிப்பார்களோ என்று எண்ணினார் தாணு.

இறுதியில் தேர்தல் முடிவு வந்த போது மறுபடியும் போட்டியிட்ட இன்னொரு வாரிய உறுப்பினர் அளவுக்குத் தானும் வாக்கு பெற்று நான்காவது உறுப்பினர் இடத்தைக் கைப்பற்றினார் தாணு. தன் வாக்குறுதிகளை மதித்துத் தன்னைத் தேர்ந்தெடுத்த பெருவின் மக்களைப் பற்றிப் பெருமை கொள்ளும் தாணு, உடனடியாகச் செயலாற்றத் தொடங்கியுள்ளார்.

இந்தியர்கள் வெகுசிலர் வாழும் தன் பகுதியிலேயே பெரும்பான்மை இன மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தேர்தலில் வென்ற தாணு, அமெரிக்கா வெங்கும் வாழும் தமிழர்கள், இந்தியர்கள், தாமும் பொதுத் தொண்டில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் களத் தில் இறங்குங்கள் என்று ஊக்குவிக்கிறார்.

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com