சுவாமி விவேகானந்தர்
பகுதி - 5

இந்தியாவில்...
மேலைநாடுகளில் சுற்றுப்பயணம் செய்த காலத்தில் விரைவில் இந்தியா திரும்பவேண்டும் என்ற உள்ளுணர்வு சுவாமி விவேகானந்தருக்கு அடிக்கடி தோன்றிக்கொண்டே இருந்தது. இறுதியில் இந்தியா திரும்புவதே தனது உடல்நிலைக்கும், மனோநிலைக்கும் சிறந்தது என்று தீர்மானித்தவர், தனது நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, 1900 நவம்பர் 26ம் நாள், எஸ்.எஸ். ரப்பாடினோ என்ற இத்தாலியக் கப்பல்மூலம் பம்பாய்க்குப் புறப்பட்டார்.

டிசம்பர் 6ம் தேதி பம்பாய் துறைமுகத்தை அடைந்தது கப்பல். விவேகானந்தர் தன் வருகையை சீடர்களுக்கு முன்னதாகத் தெரியப்படுத்தி இருக்கவில்லை. ஆகவே எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி அவரது வருகை நிகழ்ந்தது. சாதாரண நபர் போன்று ரயிலில் கல்கத்தாவை நோக்கிப் புறப்பட்டார். டிசம்பர் 9 மாலை சுவாமிகள் பேலூர் மடத்தை அடைந்தார். உடல் மெலிந்து, மாறுபட்ட தோற்றத்தில் இருந்த அவரை அங்கிருந்த தோட்டக்காரனால்கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரைக் கண்ட சீடர்களுக்கோ ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. திடீரென அவர் எப்படி வந்தார் என வியப்புற்றனர். உணவருந்திக் கொண்டிருந்த அவர்கள், தங்களுடன் உணவு உண்ணுமாறு விவேகானந்தரைக் கேட்டுக் கொண்டனர். மிகுந்த பசியாக இருந்த சுவாமிகளும் அவர்களுடன் உணவருந்தினார். அதன்பின் நண்பர்கள் அனைவரும் சுவாமிகளின் அனுபவங்களைக் கூறுமாறு கேட்டுக்கொண்டனர். சுவாமிகள் தனது மேல்நாட்டுப் பயண அனுபவங்களைச் சொல்லத் தொடங்கினார்.

விடிய விடிய நேரம் போனதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர். மேலைநாட்டின் அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளம், முன்னேற்றம், உழைப்பு என அனைத்தைப்பற்றியும் விரிவாகக் கூறினார் சுவாமி விவேகானந்தர். இந்தியாவும் அதேபோல் முன்னேறவேண்டும் என்றும், தன்னிறைவு பெற்ற நாடாக விளங்கவேண்டும் என்பதே தமது ஆசை என்றும் அவர் கூறினார்.

மறுநாள்முதல் வழக்கம் போலப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார். தியானம், பஜனை பாடுதல், இளஞ்சீடர்களுக்குப் போதித்தல், வேத வேதாந்தக் கருத்துக்களுக்கு விளக்கம் கூறுதல் போன்றவற்றைச் செய்தார். ஆனாலும் நாளுக்குநாள் அவரது உடல்நிலையில் பிரச்சனைகள் தோன்றிக்கொண்டே இருந்தன. மருத்துவர்கள் அவரைப் பூரண ஓய்வில் இருக்கச்சொல்லி வலியுறுத்தினர். ஆனால் விவேகானந்தர் கேட்கவில்லை. காலையில் எழுந்ததும் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு தோட்டவேலை செய்வது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஒருபோதும் அதனைச் செய்யத் தவறியதில்லை அவர்.

ஆலய தரிசனம்
அதேசமயம் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம் என்பது அவரது உள்ளுணர்விற்குப் புரிந்தது. அதனால் புனிதத் தலங்களை தரிசிக்கவேண்டும் என்ற தாயாரின் வேண்டுகோளை நிறைவேற்ற எண்ணி, தாயுடனும், சகோதரிகளுடனும் புறப்பட்டு டாக்காவிற்குச் சென்றார். ஆலய தரிசனங்கள் செய்தார். தாயின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

தொடர்ந்து ராமகிருஷ்ணரின் அன்புக்குகந்த சீடராக விளங்கிய நாகமகாசாயரின் இல்லத்திற்குச் சென்றார். அவரது மனைவியைச் சந்தித்து ஆசிபெற்றார். சிட்டகாங் அருகில் உள்ள சந்திரநாத் தலத்திற்குச் சென்று தரிசித்தார். பின் அஸ்ஸாமில் உள்ள புனித காமாக்யா ஆலயத்திற்குச் சென்று தரிசித்தார். உடல்நலம் குன்றியவராக அவர் பேலூர் மடத்திற்குத் திரும்பினார்.

முழுக்க முழுக்க அவர் ஓய்விலேயே இருக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்றும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர். ஆனால் விவேகானந்தர் அதனை நிராகரித்துவிட்டார். "எனக்கு ஓய்வு என்பதே இல்லை. 'காளி' என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் எதனை அழைத்தாரோ, அந்தச் சக்தியே எனது உடலையும், ஆன்மாவையும் பற்றிக் கொண்டுள்ளது. அதுவே என்னை மேலும் மேலும் உழைக்கச் செய்கிறது. எனது தனிப்பட்ட வசதிகளைக் கவனிப்பதற்கோ அல்லது சும்மா இருப்பதற்கோ அது ஒருபோதும் என்னை அனுமதிப்பதில்லை" என்று அவர்களிடம் கூறினார்.

மக்கள் சேவையோ வேறு செயல்களோ, அன்னையின் அருளாசியும் ஆணையும் இல்லாமல் எதுவும் நடைபெற முடியாது என்பதை அவர் முழுதாக உணர்ந்திருந்தார். தனது அந்த அனுபவங்களைக் கவிதையாகப் புனைந்தார். அது 'காளி அன்னை' என்ற தலைப்பில் வெளியாகி அவருக்கு மிகுந்த புகழைத் தேடிக்கொடுத்தது.

மடமும் மக்கள் பணியும்
காலையில் எழுவது, சிறு சிறு உடற்பயிற்சிகள், தோட்ட வேலை, பின் தியானம், படிப்பது, எழுதுவது, சீடர்களுடன் உரையாடல், மாலை நேரங்களில் பஜனை, வேத பாராயணம், பின்னர் சீடர்களின் கேள்விகளுக்கு பதில் கூறுதல், சந்தேகங்களுக்கு விளக்கமளித்தல் என்று அவரது வாழ்க்கை பேலூர் மடத்தில் கழிந்து கொண்டிருந்தது. உடல் நாளுக்குநாள் நலிவுற்றுக் கொண்டிருந்தது. நாளடைவில் மடத்தின் மற்ற பணிகளிலிருந்தும் பொறுப்புக்களிலிருந்தும் முற்றிலுமாக விலகிக்கொண்டார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரின் நேர் சீடரான பிரம்மானந்தரிடம் மடத்தின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார். அதே சமயம் மடத்தின் வளர்ச்சியில் விவேகானந்தர் காட்டிய அக்கறையில் ஏதும் குறைவு ஏற்படவில்லை. அந்த நிலையிலும் மடத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இளஞ்சீடர்களை வேதாந்த வழியில் பயிற்றுவித்தார். அவர்களை நல்வழிப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு உழைத்தார்.

விவேகானந்தருக்கு பல்வேறு திட்டங்களும், கனவுகளும் இருந்தன. வேதங்களைப் பயிற்றுவித்துப் பாதுகாக்கப் புதிய வேதாகமக் கல்லூரி நிறுவவேண்டும் என்பது அவரது எண்ணம். பெண்களுக்கென்று ஒரு தனி மடம் அமைப்பதிலும், அவர்களின் பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதிலும் அவர் ஆர்வமுற்றிருந்தார். மேம்பட்ட கல்வியை அனைவருக்கும் போதிக்க வேண்டும், அறியாமையும் ஏழ்மையும் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் சகசீடர்களிடம் அவர் கூறுவது வழக்கம்.

சுவாமிகளின் உடல்நிலை நலிந்துவந்தது. அவரோ அதுபற்றிய கவலை இல்லாமல் மடத்தின் திடலில் வேலை பார்த்துவந்த ஏழைத் தொழிலாளிகளைப் பார்க்கப் போவார். அவர்களது துன்பங்களைச் செவிகொடுத்துக் கேட்பார். ஆறுதலும், அறிவுரையும் கூறுவார். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதுடன், தன் கையால் உணவு பரிமாறி மகிழ்விப்பார். சகசீடர்களிடம் இதுபற்றிக் கூறும்போது, "இவர்கள் ஏழைகள்தாம். ஆனால் இவர்களுக்குள் இறைவன் இருக்கிறான். இவர்களுக்குச் செய்யும் சேவை அந்த இறைவன் நாராயணனுக்கே செய்யும் சேவை" என்று நெகிழ்ந்து கூறுவார்.



இறுதி நாட்கள்
சுவாமிகளின் உடல்நிலை தொடர்ந்து சீர்கேடடைந்தது. கண் வலி, ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்றவை அவரை வருத்தின. டாக்டர் சான்டர்ஸ் சிகிச்சை அளித்தார். ஆனாலும் அது பூரண குணத்தைத் தரவில்லை. பின்னர் ஆயுர்வேத சிகிச்சையிலும் குணம் ஏற்படவில்லை. என்றாலும் தன்னைக் காணவரும் அன்பர்களைச் சந்திப்பதை அவர் நிறுத்தவில்லை. பூரண ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு கூறிய சகசீடர்களிடம், "என்னைக் காண வருபவர்களைச் சந்திப்பதே எனக்கு மிக மகிழ்ச்சி தரும். சகோதர மனிதர்களின் ஆன்மாவைத் தட்டி எழுப்பும் அப்புனிதப் பணியில் நான் இறந்துபட்டாலும் எனக்குக் கவலையில்லை" என்று தெரிவித்தார்.

கிடைத்த நேரத்தில் தியானம் செய்வதும், சகசீடர்களுடன் பஜனை பாடுவதும், நீண்ட நடை சென்று வருவதுமாக அவரது பொழுது கழிந்தது. தியானத்தில் அமரும்போதெல்லாம் ஒரு மாறுபட்ட உணர்வில் அவர் திளைத்தார். அமர்நாத் தரிசனம் செய்துவந்த பிறகு அவருக்குப் பல அசாதாரணமான அனுபவங்கள் ஏற்பட்டன. ஒரு கூட்டுக்குள் அடைபட்ட பறவையாக இருக்கும் தான், அதிலிருந்து விரைவில் விடுபடுவோம் என்ற எண்ணம் அவருக்கு அடிக்கடி தோன்றிற்று. தன் குருநாதர் முன்பு சொன்னதுபோல், அவர் பூட்டி வைத்திருந்த அந்த நிர்விகல்ப சமாதி நிலையைத் தாம் அடையும் நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். தன் உடலை உகுக்கும் வேளை நெருங்கிவிட்டதையும் உணர்ந்தார்.

ஒருமுறை தன்னைக் காண வந்திருந்த ஜோஸஃபின் மெக்லியாடிடம் இதுபற்றிக் கூறும்போது, "நான் வெகு விரைவில் இறந்து போய்விடுவேன். நாற்பதாண்டுகள் வரைகூட நான் உயிரோடு இருக்க மாட்டேன்" என்று வருத்தத்துடன் கூறினார். அவரது வருத்தம் தான் விரைவில் இறக்கப் போகிறோம் என்பது குறித்து அல்ல. மானிட சமூகத்திற்கு இன்னமும் பல சேவைகளைச் செய்து, அதனை உயர்த்துவதற்கு முன்னால் மறையப் போகிறோமே என்பது குறித்துத்தான்.

நிவேதிதையுடன் ஓர் இறுதிச் சந்திப்பு
"தான் யாரென்பதை நரேந்திரன் உணர்ந்து கொண்டுவிட்டால், அதன் பின் அவனால் கொஞ்சநேரம்கூட இந்த உடலில் ஒட்டிக் கொண்டிருக்க முடியாது!" என்று முன்பு குருதேவர் ராமகிருஷ்ணர் கூறியது உண்மையாகும் வேளை நெருங்கியது. நரேந்திரன் தான் யார் என்பதையும், தன் பிறப்பின் நோக்கம் என்ன என்பதையும் க்ஷீர பவானியில் கிடைத்த அன்னை தரிசனத்திலும், அமர்நாத்தில் கிடைத்த சிவ தரிசனத்திலும் நன்கு உணர்ந்துகொண்டு விட்டார். அந்த ஆன்மா, பேரருள் ஒளியோடு ஒன்றுவதற்கான வேளையை எதிர்நோக்கியிருந்தது.

அன்று ஜூலை 2ம் தேதி. அவரைச் சந்திக்கச் சகோதரி நிவேதிதை வந்திருந்தார். அன்று ஏகாதசி திதி. சுவாமிகள் உபவாசம் இருக்கும் நாள். ஆனாலும் அவர் நிவேதிதைக்கு மதிய உணவைத் தாமே பரிமாற இருப்பதாகவும், அவர் அவசியம் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். சீடரான தான்தான் அவருக்குப் பணிவிடை செய்யவேண்டுமே அன்றி, குருவான அவரல்ல என்று நிவேதிதை மறுத்தும் கேளாமல், மதிய உணவைப் பரிமாறினார் சுவாமிகள். பின் அவர் கைகளைத் தண்ணீர் ஊற்றிக் கழுவி, அதனைத் தம் துண்டால் துடைத்தும் விட்டார்.

நிவேதிதைக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. காரணம் புரியாமல் திகைத்தார். விவேகானந்தரிடம் அதுபற்றிக் கேட்கவும் செய்தார்.

அதற்கு விவேகானந்தர், "இது ஒன்றும் புதிதல்ல நிவேதிதை. இயேசுநாதர் கூடத் தன் சீடர்களுக்கு இவ்வாறு செய்திருப்பது தான் உனக்குத் தெரியுமே!" என்றார்.

அது கேட்ட நிவேதிதை திகைத்தார். "இயேசு தன் வாழ்வின் கடைசி நாட்களில் தானே அப்படிச் செய்தார்!:" என்று மனத்துள் நினைத்துக் குழம்பினார். பின் இனம் புரியாத சோக உணர்வுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

மகா சமாதி
இரண்டு நாட்கள் கழிந்தன. அது 1902ம் வருடம், ஜூலை மாதம் நான்காம் தேதி. தேவிக்கு மிகவும் பிடித்தமான வெள்ளிக்கிழமை. அதிகாலை எழுந்து கொண்ட சுவாமி விவேகானந்தர், வழக்கத்திற்கும் மாறாகக் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வரை தனித்திருந்து தியானம் செய்தார். பின் தேவியைக் குறித்து சில பாசுரங்களைப் பாடினார். காலையில் சகசீடர்களுடன் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தார். பின் என்றும் இல்லாத அதிசயமாக மதியம் உணவுக் கூடத்தில், அனைத்து சகோதரத் துறவிகளுடனும், சீடர்களுடனும் அமர்ந்து உணவு உண்டார். சிறிது நேரம் அவர்களுடன் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்தார். அடுத்து பிரம்மசாரிகளுக்கும், இளந்துறவிகளுக்கும் கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் வேதாந்தப் பாடம், வடமொழி இலக்கணம் கற்பித்தார். மாலை ஆனதும் பிரேமானந்தருடன் உலாவுவதற்காக வெளியே சென்றார். வெகு நேரம் உலாவியபின் வந்து சகசீடர்களுடன் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.

பின் தனது அறைக்குச் சென்ற அவர், தான் தனித்துத் தியானம் செய்யப் போவதாகவும், யாரும் தொந்தரவு செய்யவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அறைக்குள் சென்று தியானத்தில் அமர்ந்தார்.

சிறிது நேரம் சென்றது. இரவு எட்டு மணி இருக்கும். வெளியே மற்றவர்கள் வேதபாராயணம் செய்து கொண்டிருந்தனர். சீடர் ஒருவரை உள்ளே அழைத்தார் விவேகானந்தர். அறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்து விடுமாறு சொன்னார். கங்கையைப் பார்த்தவாறே அமர்ந்து தியானம் செய்தார்.

சில மணித்துளிகளுக்குப் பின், தான் படுத்துக் கொள்ளப் போவதாகவும் சற்று நேரம் தமக்கு விசிறிக் கொண்டிருக்குமாறும் சீடரிடம் வேண்டிக்கொண்டார். மெல்லப் படுக்கையில் சாய்ந்தார். சற்றுநேரம் சென்றிருக்கும். மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட்டார் சுவாமி விவேகானந்தர். அதுவே அவரது இறுதி மூச்சாக அமைந்தது. அதன் பிறகு அவரது உடலில் எந்த அசைவுமில்லை. அதையறியாது சீடர் தொடர்ந்து விசிறிக்கொண்டே இருந்தார்.

ஆனால், அதே சமயம் சென்னை மடத்தில் தியானத்தில் இருந்த ராமகிருஷ்ணானந்தரின் காதுகளில் "சசி, நான் என் உடம்பை விட்டுவிட்டேன்!" என்றது சுவாமி விவேகானந்தரின் குரல்! ராமகிருஷ்ணானந்தர் மிகுந்த துயரத்திற்கு உள்ளானார்.

வெகுநேரம் கழித்தே சுவாமிகள் சமாதிநிலை எய்திவிட்ட விஷயம் பேலூரில் இருந்த மற்ற சீடர்களுக்குத் தெரிய வந்தது. சோகத்துடன் அவரது உடல் சமாதியில் வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். சுவாமி விவேகானந்தருக்கு அப்போது வயது 39.

ஞானசூரியன் மறைந்துவிட்டது. இந்தியாவின் இருளைப் போக்கவந்த தேவ ஒளி அணைந்துவிட்டது. ஆனாலும் அவரது ஆன்மா மறையவில்லை. "நான் இறந்தாலும் ஆவி உருவில் உங்களை வழிநடத்துவேன்" என்று அவரே குறிப்பிட்டிருப்பது போன்று, அது இன்னமும் இந்தப் பிரபஞ்சத்தின் உயர்வுக்காக எண்ணற்றவர் மூலம் பாடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சொற்பொழிவுகளாகவும், கடிதங்களாகவும், நூல்களாகவும் அவரது ஆன்மா இன்னமும் நமக்கு வழிகாட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

"துன்பத்தைக் கண்டு அஞ்சாதே. பெரியமரத்தின் மீது புயல்காற்று மோதத்தான் செய்யும். கிளறிவிடுவதால் நெருப்பு நன்கு எரியத்தான் செய்யும். தலையில் அடிபட்ட பாம்பு முன்னிலும் வேகமாகப் படமெடுக்கத்தான் செய்யும். ஆகவே துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல், உறுதியாய் எதிர்த்து நில். வெற்றி உனதே!"
சுவாமி விவேகானந்தர்


(முற்றும்)

பா.சு.ரமணன்

© TamilOnline.com