கு.மா.பாலசுப்பிரமணியம்
"அமுதைப் பொழியும் நிலவே", "சிங்கார வேலனே தேவா", "சித்திரம் பேசுதடி", "காணா இன்பம் கனிந்ததேனோ", "இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே", "வானம் மீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே", "மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே", "கனவின் மாயா லோகத்திலே", "உன்னை கண் தேடுதே", "மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு" இப்படி நூற்றுக்கணக்கான, காலத்தால் அழியாத இனிய திரைப்பாடல்களைத் தந்தவர், குறிச்சி மாரிமுத்து பாலசுப்ரமணியம் எனும் கு.மா. பாலசுப்ரமணியம். இவர், மே 13, 1920ல், திருவாரூரை அடுத்துள்ள வேளுக்குடி என்ற சிற்றூரில் மாரிமுத்து-கோவிந்தம்மாள் இணையருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். குறிச்சி இவர்களது பூர்வீகம் என்பதால் குறிச்சி மாரிமுத்து பாலசுப்ரமணியம் என்பதைச் சுருக்கி பிற்காலத்தில் கு.மா.பா. என்றழைக்கப்பட்டார். எளிய விவசாயக் குடும்பம். தந்தை இவரது குழந்தைப் பருவத்திலேயே காலமானார். குடும்பத்தை வறுமை சூழ, உழைக்க அஞ்சாத அன்னை தாங்கிப் பிடித்தார்.

ஆயினும், கல்வி ஆறாம் வகுப்போடு நின்றுபோனது. விவசாய வேலையில் தாய்க்குத் துணையாக இருந்தார். அக்காலகட்டத்தில் தாயார் பாடக் கேட்ட தேவார, திருவாசகப் பாடல்கள் பண்ணிசை ஞானத்தை இவருக்கு அளித்தன. விவசாயத்தில் நிரந்தர வருமானம் கிடைக்காததால் மளிகைக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். பொட்டலம் மடிக்க அங்கு வைத்திருக்கும் புத்தகங்களைக் கிடைத்த நேரத்தில் வாசிப்பார். அவ்வாறே அறிவை வளர்த்துக்கொண்டார். கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி போன்றோரின் சிறுகதைகள் இவரில் எழுத்தார்வத்தைத் துளிர்விடச் செய்தன. தானும் ஒரு சிறுகதையை எழுதிப் பத்திரிகைக்கு அனுப்பினார். இவரது 'இன்பத்துளி' என்ற சிறுகதை, எழுத்தாளர் நவீனன் நடத்திவந்த 'நவயுவன்' இதழில் பிரசுரமானது. தொடர்ந்து திருமகள், சண்டமாருதம், பிரசண்டவிகடன், கலைமகள் போன்ற இதழ்களில் கதை, கட்டுரைகள் வெளியாயின.



பாரதியாரின் கவிதைகள் இவரை மிகவும் கவர்ந்தன. பாரதிதாசன், கவிமணியின் கவிதைகள் இவரைக் கவர்ந்தன. அவர்களை அடியொற்றி இவரும் சிறு சிறு கவிதைகளை எழுதினார். 1941ல் மரகதவல்லி அம்மையாருடன் திருமணம் நிகழ்ந்தது. ஆனால், 1942ல் அவ்வம்மை காலமானார். மீண்டும் தனிமரமானார் கு.மா.பா. தனது மனதை இலக்கிய வாசிப்பிலும், எழுதுவதிலும் செலவிட்டார். நண்பர் ஒருவர் அறிமுகத்தின் மூலம் மதுரை சென்று சி.பா. ஆதித்தனாரைச் சந்தித்தார். அவரது 'தமிழன்' மாத இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பிழை திருத்துவது முதல் அச்சிடுவதுவரை இதழியல் நுணுக்கங்கள் அனைத்தையும் கற்றார். சில ஆண்டுகளுக்குப் பின் அப்பணியிலிருந்து விலகினார். சில மாதங்கள் வேலையில்லாமல் இருந்தார். இதையறிந்த பரலி சு. நெல்லையப்பர் இவரைக் கொழும்பிலிருந்து வெளிவந்த 'வீரகேசரி' இதழுக்குப் பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அடுத்துச் சிலகாலம் 'மேதாவி' இதழுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் ம.பொ.சி. நடத்திய 'தமிழ் முரசு' இதழில் துணையாசிரியராகச் சேர்ந்தார். அக்காலகட்டத்தில் சிந்தாதிரிப்பேட்டை பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய திருவேங்கடம் என்பவர் இவருக்கு நண்பரானார். கு.மா.பா.வின் திறமையை அறிந்த அவர் இலக்கண நுணுக்கங்களையும், மரபுக்கவிதைகள் இயற்றும் உத்திகளையும் கற்றுக்கொடுத்தார். மரபுக் கவிதைகள் எழுதுவதில் தேர்ந்தவரானார் கு.மா.பா.

1946ல் ஜெயலக்ஷ்மி அம்மையாருடன் மணம் நிகழ்ந்தது. நன்மக்கட்பேறும் வாய்த்தது. திராவிட இயக்கங்கள் வேர்விட்டு வளர்ந்து கொண்டிருந்த காலத்தில், மாற்றுச் சிந்தனையும், தமிழ்த் தேசிய நோக்கமும் கொண்ட ம.பொ.சி., ஒத்த கருத்துள்ளவர்களுடன் இணைந்து தமிழரசுக் கழகத்தை ஆரம்பித்தார். அதன் பொதுச் செயலாளரானார் கு.மா.பா. இந்நிலையில் நண்பரான இயக்குநர் ப. நீலகண்டன் மூலம் ஏவி.எம். நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. நீலகண்டன் 'ஓர் இரவு' படத்தை இயக்க, துணை இயக்குநராகப் பொறுப்பேற்றார் கு.மா.பா. அண்ணாத்துரை கதை எழுத எழுத, அதனைப் படித்துப் பார்த்து, காட்சிகளாகப் பிரித்து, பிரதி மேம்படுத்தும் பணியினை மேற்கொண்டார் கு.மா.பா. அண்ணா எழுதிய ஒரு காட்சியும் வசனமும் இவரை மிகவும் ஈர்க்கவே அதனை ஒரு பாடலாக வடித்துப் பிரதிகளின் இடையே வைத்தார். கதையினூடேஅதனைப் படித்துப் பார்த்த ப. நீலகண்டன், கு.மா.பா.வை பாராட்டியதுடன், ஏவி.எம்மிடம் அந்தப் பாடலைத் திரையில் பயன்படுத்த அனுமதி பெற்றார். "புவிமேல் மானமுடன் உயிர்வாழ வழியேதும் இல்லையே" என்ற பாடல் பதிவு செய்யப்பட்டு, காற்றலைகளில் தவழ்ந்தது. 'ஓர் இரவு' படத்தின்மூலம் ஒரே இரவில் திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகமானார் கு.,மா.பா.

அக்காலத் திரைப்பாடல் உலகில் உடுமலை நாராயணகவியும், தஞ்சை ராமையாதாஸும் கோலோச்சினர். அதனால் திரைப்பாடல் எழுதும் வாய்ப்பு அரிது. என்றாலும், கு.மா.பாவிற்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின. சுதர்சனம், ஜி. ராமநாதன், டி.ஜி. லிங்கப்பா போன்றோர், இயக்குநர்களின் அழுத்தங்களை மீறி, குறைந்தது ஒரே ஒரு பாடலாவது கு.மா.பா.வுக்கு வழங்கினர். காரணம், மெட்டுக்குப் பாட்டாக இருந்தாலும், பாட்டுக்கு மெட்டாக இருந்தாலும் இசையமைப்பாளருக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் கு.மா.பா.வின் பாடல்கள் இருந்ததுதான். நாளடைவில், நிலவைப் பற்றிய பாடலா, கூப்பிடு கு.மா.பாவை, இயற்கை வர்ணனையா, கூப்பிடு பாலசுப்ரமணியனை, கவிச்சுவை, சொற்சுவை வேண்டும், படித்தவர்களும் பாராட்ட வேண்டும், பாமரர்களும் முணுமுணுக்க வேண்டுமா, அதனை பாலு எழுதுவதுதான் சரியாக இருக்கும் என்று இயக்குநர்களையும் சொல்ல வைக்குமளவுக்குத் திறமையால் உயர்ந்தார் கு.மா.பாலசுப்ரமணியம். எப்படி பத்திரிகையுலகில் அத்தனையும் அத்துப்படி ஆனதோ, அப்படியே திரையுலகில் கதையமைப்பு, காட்சியமைப்பு முதல் இயக்கம்வரை அனைத்தும் அத்துப்படியானது இவருக்கு. அதனால் பல இயக்குநர்கள் இவரைத் தங்களது படத்தின் கதை விவாதத்துக்கு அழைத்து ஆலோசித்தனர். பல படங்களுக்குத் துணை இயக்குநராகவும், ஆலோசகராகவும் பணிபுரிந்திருக்கிறார் கு.மா.பா. குறிப்பாக ப. நீலகண்டனின் பல படங்களுக்கு இவர்தான் ஆலோசகர். 'மகாகவி காளிதாஸ்' (கதை-வசனம்), 'கொஞ்சும் சலங்கை' (வசனம்), 'வேலைக்காரன்' (1952-கதை மட்டும்) போன்ற பல புகழ்பெற்ற படங்களில் பங்களித்துள்ளார்.



"நான் பாடியவற்றில் எனக்கு மிகப்பிடித்த பாடல்" என்று பி. சுசீலா சொன்னது, "அமுதைப் பொழியும் நிலவே". எஸ். ஜானகிக்குப் பிடித்தது "சிங்கார வேலனே தேவா". இரண்டையும் எழுதியவர் கு.மா.பா! திரைப்பாடல்களை யாப்பு வழுவாமல் எழுதுவதில் தேர்ந்தவர். கண்ணதாசன், வாலி உள்பட பல சக கவிஞர்களது மனங்கவர்ந்த கவிஞர். சுயமாகவே கற்றுத் தன்னை மேம்படுத்திக் கொண்டவர். கா.மு. ஷெரிப், கு.சா. கிருஷ்ணமூர்த்தி போன்றோரின் நெருங்கிய நண்பர். இயக்குநர் ஏ.பி. நாகராஜன், எழுத்தாளர், பதிப்பாளர், தமிழ்ப்பண்ணை சின்ன அண்ணாமலை போன்றோர் இவரது நலம்விரும்பிகள்.

அக்காலத்தில் மொழிமாற்றுப் படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதுவதில் தேர்ந்தவர்கள் இருவர். ஒருவர் கம்பதாசன், மற்றவர் கு.மா.பாலசுப்பிரமணியன். "மாநிலம் மேல் சில மானிடரால் என்ன மாறுதல் பாரைய்யா; மனிதன் மாறியதேனய்யா," இது 'நாஸ்திகன்' என்ற மொழிமாற்றப் படத்தில் இடம் பெற்ற கு.மா.பா.வின் பாடல். 'நாஸ்திக்' என்ற ஹிந்திப் படத்தின் பாடல் மெட்டுக்கு எழுதிய பாடல் இது. 'சாம்ராட்' என்ற படத்தையும் தமிழாக்கிப் பாடல்களும் எழுதியிருக்கிறார். 'உத்தம புத்திரன்', 'அன்னையின் ஆணை', 'அம்பிகாபதி', 'கோமதியின் காதலன்', 'கணவனே கண்கண்ட தெய்வம்', 'தங்கமலை ரகசியம்', 'திருடாதே', 'மரகதம்', 'ரத்த பாசம்', 'சக்கரவர்த்தித் திருமகள்', 'களத்தூர் கண்ணம்மா', 'குழந்தைகள் கண்ட குடியரசு' என எண்ணற்ற படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தின் அனைத்து பாடல்களும் இவர் எழுதியவையே. அதேபோன்று 'சபாஷ் மீனா' படப் பாடல்களும் இவர் எழுதியவைதாம்.

கவிஞர் பொன்னடியான் தலைமையில் முதல் கடற்கரைக் கவியரங்கைத் தொடங்கி வைத்தவர் கு.மா.பா.தான். 'தமிழ்க்குரல்' என்னும் இதழையும் நடத்தியிருக்கிறார். தமிழக எல்லைப் போராட்டங்கள், தலைநகர் போராட்டம், தமிழ்நாடு பெயர்மாற்றப் போராட்டம், மாநில சுயாட்சிப் போராட்டம் எனப் பல போராட்டங்களில் பங்கேற்றுச் சிறைசென்றவர். 1975ல் தமிழக அரசு இவருக்குக் 'கலைமாமணி' பட்டம் வழங்கி கௌரவித்தது. ஈரோடு தமிழ்க் கவிஞர் மன்றம் இவருக்கு 'கவிக்குயில்' என்ற பட்டம் அளித்தது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலர் ஆகவும் பணிபுரிந்துள்ள இவர், தமிழக மேலவை (எம்.எல்.சி.) உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.



வானதி பதிப்பகம் 'முதற்குரல்' என்னும் இவருடைய கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது. 'இன்பத்துளிகள்', 'சூடிய மலர்' போன்றவை சிறுகதைத் தொகுப்புகள். 'அதிர்ஷ்டக் குழந்தை', 'பச்சை மாலை' இவர் எழுதிய நாவல்கள். 'காவிய நடனம்' என்பது இவர் எழுதிய நாட்டிய நாடகங்களின் தொகுப்பு. 'தணிகைவேள் சதகம்' என்ற பக்திக்கவிதை நூலையும் எழுதியிருக்கிறார்.

அதன் முன்னுரையில் திருமுருக கிருபானந்த வாரியார்,

புகழ்பால சுப்பிரமணிப் புண்ணிய சீலன்
தகவார் தணிகைச் சதகம் - மிகவினிதாய்ப்
பாடி வழங்கினான் பாரெலாம் போற்றியே
நாடி உவக்கும் நயந்து


என்று வாழ்த்தியிருக்கிறார்.

கு.மா.பாலசுப்ரமணியம், கடைசியாக எழுதிய பாடல், "வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்கள்". இதனை பெயர்ப் பொருத்தமாக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். கங்கை அமரன் இசையில் 'கனவுகள் கற்பனைகள்' என்ற திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றது. மூப்பாலும், காலமாற்றத்தாலும், வாய்ப்புகளைத் தேடிப்பெற இவர் விரும்பாததாலும் அதன்பின் அவர் அதிகம் பாடல்கள் எழுதவில்லை. நவம்பர் 4, 1994ல், 74ம் வயதில், இதய அடைப்பால் இவர் காலமானார். கு.மா.பா. இளங்கோவன், கு.மா.பா. திருநாவுக்கரசு, கு.மா.பா. கபிலன் இவரது மகன்கள். மங்கையர்க்கரசி கலியமூர்த்தி, அங்கயற்கண்ணி கிருஷ்ணகுமார் இருவரும் மகள்கள்.

இவர் எழுதிய 176 பாடல்களைக் கவிஞர் பொன். செல்லமுத்து தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். மணிவாசகர் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. "ஆசைக்கிளியே கோபமா" "இகலோகமே இனிதாகுமே", "எந்தன் உள்ளம் துள்ளிவிளையாடுவது ஏனோ" "கனவின் மாயா லோகத்திலே", "ஆடாத மனமும் ஆடுதே", "காதலென்னும் சோலையிலே ராதே ராதே", "மதனா எழில் ராஜா நீ வா", " யாரடி நீ மோகினி", "குங்குமப் பூவே, கொஞ்சும் புறாவே", "உள்ளமெல்லாம் தள்ளாடுதே" போன்ற பாடல்கள் என்றும் காற்றலையில் கவிஞர் கு.மா. பாலசுப்ரமணியத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கும்.

இந்த 2020ம் ஆண்டு, கவிஞர் கு.மா. பாலசுப்ரமணியத்தின் நூற்றாண்டு. அவர் எழுதிய பிற திரைப்படப் பாடல்களைத் தேடித் தொகுப்பதும், அவரது பாடல்கள் பற்றிய திறனாய்வு நூல்கள் வெளியாவதுமே அவருக்குச் செய்யும் சிறந்த நூற்றாண்டு அஞ்சலியாக இருக்கும்.

பா.சு.ரமணன்

(தகவல், படங்கள் நன்றி: கவிஞர் கு.மா.பா திருநாவுக்கரசு, கவிஞர் கு.மா.பா. கபிலன் (கட்டுரைகள்), பொன். செல்லமுத்து - "கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம் திரை இசைப் பாடல்கள்", மணிவாசகர் பதிப்பகம்.)

© TamilOnline.com