காதில் விழுந்தது...
நெடுஞ்செவியன்

ஒவ்வோரு கோடை விடுமுறையிலும் அலை அலையாகத் தாயகம் திரும்பும் வெளிநாட்டு இந்தியர்கள் பல நிழற்படங்கள் கொண்டு வந்து - அதோ பார், அந்தப் புதிய 52 இஞ்ச் டிவிக்கு முன்னால் இருப்பது என் மகன், இதோ இந்தப் புதிய மினி-வேன் மேல் இருப்பது என் மகள், அந்த அகன்ற அடுப்பறையில் இருப்பது என் மனைவி, எங்கள் பங்களா பின்னணியுடன் புழக்கடை நீச்சல் குளத்தில் மகிழ்ந்து விளையாடு பவர்கள் எங்கள் குடும்பம் - என்று பீற்றிக்கொண்டு திரும்பிப் போவார்கள். இந்தியாவில் தங்கிவிட்ட உடன் பிறப்புகளின் மனதில் இந்த நிழற்படங்கள் டிக்-டிக்-டிக் கண்ணிவெடிகளாகின்றன. அந்த நிழற்படங்களைக் கையில் வைத்துக் கொண்டு தம் இரண்டு அறை அடுக்கு மாடி வீட்டை ஒரு நோட்டம் போடுபவர்களுக்குத் தங்கள் புத்தம் புதிய சோ·பாவும் 2-in-1 அகாய் ஸ்டீரியோவும்கூட அற்பமாகவும், அசிங்கமாகவும் தோன்றத் தொடங்கிவிடும்.

சுகேது மேத்தா,
'மேக்சிமம் சிடி' நூலில்

*****


ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் - ஆல்பர்ட் ஐன்ஸ் டைன் தலைமையில் நாங்கள் பதின்மர் கூடி அணு ஆயுதப் போரின் கொடும் விளைவுகள் பற்றிய எச்சரிக்கை அறிக்கை படைத்தோம். அதில் "நாம் புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டும். நாம் ஆதரிக்கும் அணி எவ்வாறு போரில் வெற்றியடையலாம் என்று திட்டமிடுவதில் பயனில்லை. அப்படிப்பட்ட திட்டங்கள் இனி ஏதும் இல்லை. இனி நாம் நம்மைக் கேட்க வேண்டிய கேள்வி: நம் எல்லோரையுமே அழிக்கக்கூடிய போரை எப்படித் தடுப்பது என்பதுதான்" என்று எழுதியிருந்தோம். அது 1955க்கு மட்டுமல்ல இன்றும் பொருத்தமான கேள்வி. அன்று நாங்கள் சொன்ன "உன் மனிதத் தன்மையை நினை; மற்றதை மற" என்ற வாசகமும் இன்றும் பொருந்துகிறது.

டாக்டர் ஜோஸப் ரோட்ப்ளாட், 1995 நோபல் சமாதான விருது பெற்றவர். முதல் அமெரிக்க அணுகுண்டுத் திட்டமான மன்ஹாட்டன் பிராஜக்டிலிருந்து அறவழியைக் காரணம் காட்டி விலகிய ஒரே விஞ்ஞானி. உண்மை என்னவென்றால், எழுதுவது எப்படி என்று யாருக்கும் கற்பிக்க முடியாது. எழுதிஎழுதித்தான் பழக வேண்டும். அதற்கு ஆசிரியர் தேவையில்லை. தட்டச்சில் விரல்களை வைத்து அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால், எனது மாணவர்களுக்கு ஒரு விதி பற்றிச் சொன்னேன். மறைந்த வாலஸ் ஸ்டெக்னர் தன் மாணவர்களுக்குச் சொன்னார் "ஓர் எழுத்தாளன் உன்னத இலக்கியத்தைப் படைக்க மட்டும் முயலக்கூடாது; ஓர் உன்னத இலக்கியம் தரக்கூடிய மனிதனாக முயல வேண்டும்". அது விலைமதிப்பற்ற அறிவுரை.

ஜோயல் ஆசன்பா·க்
வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர்

*****


"பள்ளியில் என் பெண் சீனமொழி படிக்கிறாள்; அது போதுமா" என்று என்னை மூன்று வெவ்வேறு நகரங்களில் பெற்றோர்கள் அறிவுரை கேட்டார்கள். உலகநாடுகளோடு போட்டி போடுவதற்கு முக்கியமான திறமை கற்றுக் கொள்ளுவது எப்படி என்பதுதான். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைத் துணைவேந்தர் பில் புரோடு சொன்னது போல் கற்பது எப்படி என்பதைக் கற்றுக் கொள்வதன் மூலம்தான் விரைவான மாற்றமும் வளர்ச்சியும் கொண்ட காலத்தில் புதிய வேலைகள் வேகமாக முளைக்க, பழைய வேலைகள் சடுதியில் மறையும்போது சமாளிக்க முடியும். கற்பது எப்படி என்பதை எப்படிக் கற்றுக் கொள்ள முடியும் என்று கேட்டார் ஓர் 9-வது வகுப்பு மாணவர். ம்ம்ம். உங்கள் நண்பர்களிடம் போய் யார் நல்ல ஆசிரியர்கள் என்று கேளுங்கள். பின்னர் அவர்கள் என்ன வகுப்பு நடத்தினாலும் அதைக் கற்றுக் கொள்ளுங்கள். எனக்குப் பிடித்த ஆசிரியர்களைப் பற்றி நினைக்கும்போது அவர்கள் கற்பித்த பாடங்களல்ல, கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் தூண்டிய ஆர்வம் நினைவில் நிற்கிறது. கற்பது எப்படி என்பதைக் கற்பதற்கு, கல்வியை நீங்கள் நேசிக்க வேண்டும். சிலருக்கு அந்த நேசம் பிறப்பிலேயே கிடைத்த வரம்.

மற்றவர்கள் ஒரு நல்ல ஆசிரியர் அல்லது பெற்றவரிடமிருந்து கல்வி நேசத்தை வளர்த்துக்கொள்ளலாம்.

தாமஸ் ·ப்ரீட்மன்
நியூ யார்க் டைம்ஸ் கட்டுரையாளர்

*****


உலகத்தின் பெருங்கடல்கள் கடந்த 150 ஆண்டு கால வெப்ப நிலையேற்றத்தை உறிஞ்சிக் கொண்டு வந்திருக்கின்றன. அதன் பின் விளைவுகள் மெதுவாகத்தான் தொடங்கும். நாம் இப்போது என்ன செய்தாலும் இந்த விளைவுகளைத் தடுக்க முடியாது. ஒரு கொடுமையான முரண்பாடு என்னவென்றால், கடந்த 150 ஆண்டு களாகத் தட்பவெப்ப நிலையைப் பாதிக்கும் பசுமைக் கொட்டகை வாயுகளை (Green house gases) வெளியிட்டுத் தங்கள் தொழில்வளத்தைப் பெருக்கிக் கொண்ட நாடுகள் தப்பித்துக் கொள்ள, ஒரு பாவமும் அறியாத வளர்ந்து வரும் நாடுகள்தாம் இந்த விளைவுகளால் பெரிதும் பாதிக்கப்படும்.

எப்படிப் பார்த்தாலும் 2050-க்குள் கடல் நீர்மட்டம் ஓர் அடி உயரப் போகிறது. பல தீவு நாடுகள் மூழ்கிவிடும். பணக்கார நாடுகள் கடலை அணை கட்டித் தேக்குவார்கள்; காப்பீடு, முன்னெச்சரிக்கை மூலம் தங்கள் மக்களையும் அவர்கள் உடமைகளையும் காப்பாற்றுவார்கள். ஆனால், ஏழைநாடுகள் நாசமாகப் போகின்றன.

சுஜாதா பைரவன், சுதீர் செல்லராஜன்,
நியூ யார்க் டைம்ஸ் கட்டுரையில்

*****


இன்றைய அமெரிக்கா போலவே 1917-ல் ஆங்கிலேயர்கள் மெசபடோமியாவின்மீது படையெடுத்து, பாக்தாதுக்குச் சென்றார்கள். ஓட்டமன் அரசைக் கவிழ்த்து மக்களை "விடுவித்தார்கள்." தங்களுக்குக் கட்டுப்பட்ட அரசனை நியமித்தார்கள். இருந்தாலும், 1920-ல் ஆங்கிலேயர்களை எதிர்த்து பாக்தாதில் ஒரு புரட்சி வெடித்தது. அந்தப் புரட்சியை ஆங்கிலேயர் எப்படி நொறுக்கினார்கள்? இன்றைய அமெரிக்கர்கள் போலல்லாமால், அவர்களின் படைபலம் பெரியது. தங்கள் எதிராளிகளை ஆதரித்த ஊர்களை ஈவு இரக்கம் இல்லாமல் தண்டித்தார்கள். 1950கள் வரை ஆங்கிலேயர் அங்கே ஒரு கால் வைத்துக் கொண்டிருந்தனர்.

அமெரிக்கர்களால் முடியாத அளவுக்கு ஆங்கிலேயருக்கு எப்படிப் படை வலிமை வந்தது?

அவர்கள் பேரரசின் கீழிருந்த இந்தியாவிலிருந்து படை வீரர்களைத் தருவித்ததால்தான்.

படையில் 87% இந்தியர்கள். இன்றும் அமெரிக்கர்களுக்குத் துணை நிற்பது ஆங்கிலப் படைதான். இருந்தாலும், அன்றைய சீக்கியர், மராத்தியர், பலூச்சிப் படைகளுக்கு நிகரானவை அல்ல இன்றைய குட்டிப் படை.

அமெரிக்கர்கள் தங்கள் படைவலிமையை எப்படிப் பெருக்க வேண்டும்? கூட்டணிக்குப் புதிய நண்பர்களைக் கொண்டு வரலாம் (காண்டலீசா ரைசை புது டில்லிக்கு அனுப்பலாமா?); படையில் சேரும் குடிபுகு மக்களுக்கு விரைவாகக் குடியுரிமை கொடுக்கலாம்; படையில் சேரத்தேவையான நுழைமுகக் கல்வித்தரத்தைத் தாழ்த்தலாம்.

நியால் ·பெர்கூசன் - ஹார்வர்ட் பல்கலை வரலாற்றுப் பேராசிரியர்,
ஸ்டான்·போர்ட் ஹுவர் நிலைய மூதறிஞர் - 'கொலாஸ்ஸஸ்: அமெரிக்கப் பேரரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்' நூலாசிரியர்

© TamilOnline.com