ஓரிரு நாள் நடக்கும் அன்னையர் தினக் கொண்டாட்டங்களைக் கண்டிருக்கிறோம். எட்டு நாள் இதை நடத்தமுடியுமா? அதுவும் கரோனாப் பேரிடர் பொதுமுடக்க காலத்தில்! இதைச் செய்திருக்கிறது அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்!
மே 3, 2020 அன்று தொடங்கிய 'மகளிர் வார' நிகழ்ச்சிகள், மே 10, அன்னையர் தினம் வரை ஒவ்வொரு நாள் மாலையும் வலைக் கூட்டமாக நடந்தேறியது. பெண்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கவிதைகள், செய்திகள், காணொளிகள் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டன.
பவித்ரா, பத்மா, பிரியா, செல்வி, ஐஸ்வர்யா, சுதா, ஜெயஶ்ரீ, பிரதீபா, ஜெகா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.
முதல்நாள் நிகழ்ச்சியில் தமிழ்ப்பள்ளிகளில் பணிபுரியும் தன்னார்வ ஆசிரியைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. தொகுப்பாளினிகள் ஆசிரியைகளைத் தம் மாணவர்களாகப் பாவித்து, விறுவிறுப்பான கேள்வி-பதில், நடிப்பு, பாடல், கவிதைப் பகுதிகளை நடத்தினர். இவற்றில் ஆசிரியைகள் குழந்தைகளாக மாறி மகிழ்ந்தனர்.
அடுத்தடுத்த நாட்களில் தமிழ்ச்சங்கத்தில் பொறுப்பேற்றுப் பணிசெய்த பெண்கள் மற்றும் உறுப்பினர்கள், உயிர்காக்கும் மருத்துவர்கள், செவிலியர், புத்தாக்கத் தொழில்முனைவோர் ஆகியோரைப் போற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துதலில், மகளிர் பலர் தன்னார்வத் தொண்டு செய்கிறார்கள். இவர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. இதில் இவர்களின் கற்பித்தல், எழுத்தாற்றல், பேச்சாற்றல், கவிதை, நடனம், நடிப்பு போன்ற தனித்திறமைகளை அறியமுடிந்தது.
'சாதனை படைத்த பெண் ஆளுமைகள்' தலைப்பிலான சிறப்பு தமிழே அமுதே நிகழ்ச்சி, மகளிர் வாரக் கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பாக அமைந்தது. வழி நடத்துநர் ஜெயா, சிங்கப் பெண் பேச்சாளர்கள் பிரதீபா, கயல், சக்தி, கிரேஸ், ஜெகா ஆகியோர், மற்றும் நன்றியுரை வழங்கிய அனிதா ஆகியோர் தமிழ்ச் சங்கத்தின் தாரகைகளாக ஒளிர்ந்தனர். அன்னையர் தினச் சிறப்புக் கொண்டாட்டம் சொல் விளையாட்டுப் போட்டிகள், கவிதை படைத்தல், நன்றி பரிமாறிக் கொள்ளுதல் போன்ற நிகழ்ச்சிகளோடு நிறைவடைந்தது.
துணை நின்ற சங்கத் தலைவர் திரு. ஜெயசாரதி, நிகழ்ச்சிகளைச் சாத்தியமாக்கிய மகேந்திரன், பிரபு, மற்றும் பல செயற்குழுவினர், தன்னார்வத் தொண்டர்கள் பாராட்டுக்குரியவர்.
ராஜி ராமச்சந்திரன், அட்லாண்டா |