நானே பொறுத்துக் கொள்கிறேனே, நீ பொறுக்கக் கூடாதா?
பெரிய பக்தன் ஒருவன் ஒருமுறை கடவுளின் சோதனையில் தோற்றதால் சான்றிதழ் பெறாமல் போனான். அவன் தினமும் மதியத்தில் ஓர் ஏழையை விருந்துக்கு அழைத்து அவருக்குச் சிறப்பான விருந்து கொடுப்பான். அப்படிப் பல வருடங்கள் போயின. ஒருநாள் முதிர்ந்து பலமிழந்த ஒருவர் தட்டுத் தடுமாறிச் சாப்பிட வந்து உட்கார்ந்தார். அவர் நூறு வயதைக் கடந்துவிட்டிருந்தார். அன்னதானம் செய்வதில் பக்தருக்குத் தீவிரம் இருந்ததே தவிர, விவேகம் இருக்கவில்லை. மணலில் கொட்டிய தண்ணீரைப் போல, அது செழிப்பைத் தராமல் போயிற்று. ஒவ்வொரு நாள் மதியமும் தானம் என்ற நீரை ஊற்றிய போதும், அவனது மனம் மணற்படுகையாகவே இருந்தது. விவேகமில்லாத மனமென்ற மணல், தானமெனும் நீரை உறிஞ்சியது; ஆனால், அவன் கறாரான சடங்கு மனிதனாகவே இருந்தான்.

நொந்து நூலாக வந்த விருந்தாளிக்கு எத்தனை பசி என்றால், இலையில் முதல் கவளம் விழுந்தவுடன் அவர் இறைநாமத்தைக் கூடச் சொல்லாமல் கைநிறைய எடுத்து விழுங்கிவிட்டார். இந்த நாத்திகத்தனத்தைச் சகிக்க முடியாத பக்தன், பசியோடு கிடக்கட்டும் அல்லது பிச்சையெடுக்கட்டும் என்று அவரைக் கொதிக்கும் வெய்யிலில் தெருவில் தள்ளிவிட்டான்.

அன்றிரவு பகவான் கனவில் வந்து அவரது நடத்தையின் குரூரத்தைக் கண்டித்தார். கடவுள், “எனது எண்ணற்ற நாமங்களில் ஒன்றைக்கூடச் சொல்லாவிட்டாலும் அவரை என் கண்ணின் மணிபோல நான் நூறாண்டுகளுக்கு மேல் போஷித்து வந்திருக்கிறேன். பிரியமானவனே! நீ ஒரு சில நிமிடங்கள் அவரைச் சகித்திருக்கக் கூடாதா?” என்று கேட்டார்.

நன்றி: சனாதன சாரதி, ஜூலை 2019.

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com