(பாகம்-16e)
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம். வாருங்கள், ஆரம்பநிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம்!
★★★★★
கேள்வி: (சென்ற இதழ் தொடர்ச்சி) நான் ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நல்ல வேலையில் உள்ளேன். என் நண்பன் ஒருவனும் அதே நிறுவனத்தில் இருந்தான். ஆனால் சமீபத்தில் திடீரென வேலையை விட்டுவிட்டு, ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளான். அப்போதிலிருந்து என்னையும் தன்னோடு வந்து நிறுவனனாகச் சேர்ந்துகொள், நிறுவனத்தில் சமபங்கு தருகிறேன் என்று அரிக்கிறான். நான் வேண்டாம் என்றாலும் விட்டபாடில்லை. எனக்கும் இப்போது அவனோடு சேர்ந்து, உழைத்து நிறுவனத்தை வளர்த்துச் சாதிக்கலாம் என ஆர்வம் உண்டாகியுள்ளது. ஆனால் நல்ல வேலையையும் சுளையான சம்பளத்தையும் லேசில் உதறித்தள்ள இயலவில்லை. ஒரே குழப்பம், இருதலைக் கொள்ளி எறும்பு நிலை. நான் என்ன முடிவெடுக்க வேண்டும்? கதிரவனின் பதில் (தொடர்ச்சி): சென்ற பகுதிகளில், பெரும் நிறுவனங்களில் வேலை நிலையானதென்று எண்ணி அதனாலேயே ஆரம்பநிலை நிறுவனத்தில் சேராமலிருப்பது சரியாகாது என்றும் எக்காரணங்களால் பெருநிறுவன வேலையை இழக்க நேரக்கூடும் என்பதையும் விவரித்தோம். அவற்றில் லாபக்குறைவு, வணிகக் குழு விற்றல், குழு அல்லது செயல்பாட்டுக் குழு நீக்கல் (cancellation), மற்றும் மேலாளர் அதிருப்தி போன்றவற்றை விவரித்தோம். இப்போது மற்றொரு காரணத்தைப் பார்ப்போம்.
நீங்கள் உங்கள் வேலையில் தழைத்து வளர்வதோ, அல்லதுத் தடுமாறித் தத்தளிப்பதோ முழுவதும் உங்கள் கையில் மட்டுமில்லை. உங்கள் மேலாளர் (manager/boss ) மற்றும் உங்கள் சக குழுவினரிடமும் உள்ளது என்று சென்ற பகுதியில் குறிப்பிட்டேன். மேலாளர் விஷயத்தை அலசியாயிற்று. இப்போது சக குழுவினர் பற்றி விவரிப்போம்.
பொதுவாக எந்த நிலை நிறுவனமானாலும் நீங்கள் தனி ஒருவராக மட்டும் வேலை பார்த்துவிட முடியாது. பலதரப்பட்ட சக ஊழியர்களுடன் ஒத்துழைத்து வேலை பார்க்கவேண்டிய அவசியம் உள்ளது.
நீங்களே மேலாளராக இருந்தால் உங்கள்கீழ் வேலைசெய்யும் ஊழியர்களைச் சரியாகக் கவனித்து, ஊக்குவித்து, பணிகளை எதிர்பார்ப்புக்கும் மேலாக முடித்துக் கொடுக்கும்படிச் செய்தால் நல்லது. உங்கள் மேலாண்மை முறை அவர்களுக்கு பிடிக்காதபடி கடுமையாக, கறாராக நடந்துகொண்டால், அல்லது ஏளனமாகப் பேசிப் பழித்தால் அவர்கள் உங்களைப்பற்றி மேலாளரிடமோ, அல்லது நிறுவனத்தின் மனிதவளக் குழுவினரிடமோ புகாரளிக்கக் கூடும்.
அப்படி நேர்ந்தால், முதலில் உங்களை மேலாளரும் மனிதவளக் குழுவினரும் அழைத்து உங்கள் வழிமுறையை மாற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்துவார்கள். சிறிது காலத்தில் உங்கள் குழுவினர் உங்கள் நடத்தை மேம்பட்டு விட்டதாக உரைக்காவிட்டால், முன்னர்க் கூறியபடி மேலாளரின் அதிருப்திக்கு நீங்கள் உள்ளாகி அது உங்கள் வேலைக்கே உலையாகிவிடக் கூடும்.
நீங்கள் மேலாளராக இல்லாவிட்டாலும், உங்கள் குழுவில் வேலை செய்யும் ஊழியர்களிடமும் நிறுவனத்தின் மற்ற ஊழியர்களிடமும் நீங்கள் சகஜமாக நடந்து ஒத்துழைத்து வேலை செய்யாவிட்டால் நீங்கள் ஊருடன் ஒத்துவாழாத, பிரச்சனையான நபர் என்று உங்கள் மேலாளருக்குப் புகார் செல்லும். அதன் விளைவுகளை முந்தைய பத்திகளில் பார்த்தோம்.
அதெல்லாம்கூடப் பரவாயில்லை. ஆனால் அலுவலக அரசியல் என்று ஒன்று இருக்கிறது பாருங்கள்! அதுதான் மிக மோசம்.
நீங்கள் உங்கள் மேலாளருக்கு மிகவும் பிடித்த ஊழியராகக்கூட இருக்கலாம். சக ஊழியர்களுடன் மிக நல்லபடி நடந்துகொள்ளலாம். எல்லாம் நல்லபடியே இருந்தாலும், பாழாய்ப்போன அலுவலக அரசியலால் அது இடிந்து நொறுங்கக்கூடும்.
அதென்ன அலுவலக அரசியல், இதனால் எப்படி என் வேலை பாதிக்கப்படும் என்று குழம்புகிறீர்களா? விளக்குகிறேன்: நிறுவனம் சிறிதாக இருக்கும்போது அனைவரும் அதை வளர்த்து வெற்றிகரமாக்குவதிலேயேதான் குறியாக இருப்பார்கள். ஒரே குழுவாகச் சேர்ந்து உழைப்பார்கள். எந்த இடைஞ்சல் உண்டானாலும் சேர்ந்து எதிர்கொண்டு நிவர்த்திப்பார்கள்.
நிறுவனம் பெரியதாக வளர வளர, நிறுவன வெற்றியைப்பற்றிய கவலை நீங்கிவிடும். நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இருப்பதால் ஒரு தனிப்பட்டவரின் முயற்சிமட்டும் நிறுவனத்தின் வெற்றிக்கு பெரும் காரணமாகாது. குழுமுயற்சி தேவைப்படும். மேலும் வெற்றிபெறும்போது அதற்கான பாராட்டும் பரிசுகளும் ஒரேயொரு கீழ்நிலை ஊழியருக்குப் போய்ச் சேர்வதில்லை. ஒரு பெரும் குழுவுக்கு அல்லது அதன் மேலாளருக்குச் சேரும்.
அதனால், பெருநிறுவனங்களில், பல நிலைகளிலும் உள்ள ஊழியர்கள் தங்களுக்குச் சம்பளம் அல்லது பதவி உயர்வு கிட்டுவது எப்படி என்பதில் குறியாக இருக்க வாய்ப்புள்ளது. அதனால் ஊழியர்களிடையில் போட்டியும் பொறாமையும் தோன்றுகின்றன. அதிலும் மேலாண்மைக் குழுக்களில் இன்னும் உயர்பதவிகள் மிகச் சிலவே என்பதால் இது இன்னும் அதிகமாகவே உள்ளது.
அதனால் தங்கள் வேலையைத் திறம்படச் செய்து உயர்வது எப்படி என்பதை மட்டும் பார்க்காமல், சிலர் சக ஊழியர்களை எப்படி மட்டந்தட்டி அதனால் போனஸ் அதிகம் பெறுவது அல்லது பதவி உயர்வைத் தனக்கு வாங்கிக் கொள்வது என்பதில் அதிகக் கவனம் செலுத்துவார்கள். அதனால், மேலாளரைக் காக்காய் பிடிப்பது, வதந்தி சொல்வது, பிறர் வேலைத்திறனைக் குறை சொல்வது இதெல்லாம் நடக்கும். அதுதான் அலுவலக அரசியல். இதில் கைதேர்ந்த ஆசாமிகள் அப்பாவிகளை மட்டந்தட்டி அவர்கள் வேலைக்கே உலைவைக்கவும் வாய்ப்புள்ளது.
மேலும் சில நிறுவனங்களில் ஒரே விதமான விற்பொருளை இரண்டு வணிகக் குழுக்கள் தயாரிப்பதுண்டு. அப்படி இருந்தால் அவை இரண்டுக்கும் இடையில் ஏற்படும் போட்டியால் பல அரசியல் கசமுசாக்கள் நடக்க வாய்ப்புள்ளது. அப்போது எந்த விற்பொருள் மேன்மையானது என்பதைவிட எந்தக் குழுவின் மேலாளர் அரசியலில் சாமர்த்தியசாலி என்பதைப் பொறுத்து, எந்தக் குழு வெற்றிபெறும், எந்தக் குழுவினரின் விற்பொருள் விலக்கப்பட்டு அவர்கள் வேலைக்கு உலை வரக்கூடும் என்பவை நிர்ணயிக்கப் படலாம்.
இதுவரை பெருநிறுவனங்களில் ஏன் வேலை நிரந்தரமில்லை என்று கண்டோம். ஆகவே, வேலை நன்றாகப் போகிறது என்பதை வைத்து மட்டும் இருப்பதா செல்வதா என்பதை முடிவு செய்யக்கூடாது. மேலும் அலசுவோம்...
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |