புலன்களைவிடப் புத்தி சிறப்பாகப் பகுத்தறியும், ஆனால் ஆத்மா அதைவிட அதிகப் பகுத்தறியும் திறன் கொண்டது. ஒரு கிராமத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். ஒருவர் குருடர், மற்றவர் நொண்டி. இருவரும் நல்ல நண்பர்கள். குருடரால் நடக்கமுடியும், நொண்டியால் பார்க்க முடியும். அவர்கள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டனர். காலில்லாதவர் கண்ணில்லாதவரின் தோளில் உட்கார்ந்து கொண்டு வழி சொல்லுவார்.
அப்படி அவர்கள் கிராமம் கிராமமாகப் போய்க்கொண்டிருந்த போது ஒரு வெள்ளரித் தோட்டத்தை அடைந்தனர்.
"தோட்டத்திற்கு வேலி போட்டிருக்கிறதா? இல்லை காவலாளி இருக்கிறாரா?" என்று கேட்டார் குருடர்.
"இல்லை" என்றார் நொண்டி.
"உண்மையிலேயே சுவையான வெள்ளரிக்காய்களாக இருக்குமானால், அதற்குக் காவலோ வேலியோ இல்லாமல் தோட்டக்காரர் விடமாட்டார். அநேகமாக இந்த வெள்ளரிக்காய் கசப்பானதாக இருக்கும்" என்றார் குருடர்.
கண்ணில்லாவிட்டாலும் புத்தி இருந்த காரணத்தால் குருடரால் எளிதில் உண்மையை அறிய முடிந்தது. அதுதான் புத்தியின் வேலை. புலன்களால் நல்லது கெட்டதைப் பகுத்தறிய முடியாது. புத்தியால் பகுத்தறிய முடியும் ஆனால் புத்திக்குப் புலன்களில்லாத காரணத்தால் அதைச் செயல்படுத்த முடியாது.
நன்றி: சனாதன சாரதி, ஜூன் 2019
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |