உமாவும் அண்ணன் ரவியும் அந்த ஆச்சரியமான அன்னையர் தினத்தை நினைத்துப் பார்த்தனர். அன்றைக்கு அவர்கள் தம் தாயை ஆச்சரியப்படுத்த விரும்பினர், ஆனால் அவர்களுக்கே ஆச்சரியம் காத்திருந்தது!
இருவரும் வெவ்வேறு கல்லூரியில், வெவ்வேறு இடத்தில் படித்தனர். ஒரு பொதுவான இடத்தில் அவர்கள் சந்தித்து அன்னையர் தினத்தைத் திட்டமிடத் தீர்மானித்தனர்.
அந்த வார இறுதியில் ஏதாவது ஆச்சரியமான ஒன்றை அம்மாவுக்கு வாங்க முடிவு செய்தார்கள்.
ரவி "நாம் வாங்குவோம், ஆனால் அவளின் தேவை என்னைவிட உனக்குத்தான் நன்றாகத் தெரியும்" என்று சொல்லவே, உமா "சரி, நாம் அதைப்பற்றி யோசிப்போம், பெரும்பாலும் அம்மா எலக்ட்ரானிக் மற்றும் இசையை விரும்புகிறார். இப்போது அவளால் மியூசிக் பிளேயர் போன்றவற்றைக் கையாள முடியாது. அவளுடைய புதிய வீட்டுக்கு ஏதாவது தேவை இருக்கும். நாம் முடிவு செய்வோம், வார இறுதியில் வாங்கிவிடலாம்" என்றாள்.
இருவருக்கும் அம்மாமீது மிகுந்த பாசம். அவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தில் பெற்றோருடன் கழித்ததை நினைவு கூர்ந்தனர். மரங்களும் பூக்களும் கொண்ட பெரிய வீட்டில் அவர்கள் வாழ்ந்தார்கள். அவர்களுக்கும் ஒரு பண்ணை இருந்தது.
அப்பா போனபின் அம்மா அபார்ட்மெண்ட்டுக்குச் சென்றார். அங்கே இது முதல் அன்னையர் தினம்.
அம்மாவுக்குப் பக்கத்து வீட்டில் அதே வயதில் ஓர் அம்மா இருந்தார்கள். அவரும் அம்மாவுடன் நன்றாகப் பழகுவதால் நல்ல துணை. ஆனால் அவருக்குக் குழந்தை இல்லை.
திடீரென்று உமாவுக்குக் குழந்தையில்லாத அம்மாவின் அண்டை வீட்டுப் பெண்மணிபற்றி யோசனை வந்தது. உமா கேட்டாள் "நாம் அம்மாவுக்கு மட்டும் எப்படிப் பரிசு கொடுப்பது? பக்கத்து வீட்டு அம்மா மோசமாக உணரலாம். அம்மாவை என் இடத்துக்கு அழைத்து வர முடியுமா? அல்லது நாம் அவர்களை வெளியே அழைத்துச் செல்லலாமா?" குழப்பமாக இருந்தது.
"நீ அவரைப் பார்த்திருக்கிறாயா?" என்று ரவி கேட்க உமா "இல்லை, அதுதான் யோசிக்கிறேன்" என்றாள்
ரவி "எந்தப் பிரச்சனையும் இல்லை, நாம் அவருக்கும் ஒரு பரிசு வாங்கிப் போகலாம், இருவரையும் நம்முடன் அழைத்துச் செல்வோம்" என்று முடித்தான். சற்றே நிம்மதி ஆயிற்று.
அதிகாலையில் போய் அம்மாவைப் பார்க்கத் திட்டமிட்டனர். எழுந்தவுடன் அம்மா தங்களைப் பார்க்கவேண்டும் என்பதே அவர்களின் திட்டம். ஆச்சரியப் பரிசாக 'கூகிள் ஹோம்' வாங்கினார்கள். தங்கள் தாய்க்கும் அண்டை வீட்டிற்கும் பரிசு பூக்களை வாங்கினார்கள். அடுத்த நாளுக்காகக் காத்திருந்தார்கள்.
அம்மாவின் அபார்ட்மென்ட்டிற்குச் சென்றபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெண்கள் இருவரும் தத்தம் வீடுகளுக்கு முன்னால் இருந்தனர், எல்லா வயதினரும் வந்து அவர்களை வாழ்த்திக் கொண்டிருந்தார்கள்.
அம்மாவின் பக்கத்து வீடோ, பூக்கள் மற்றும் பரிசுகளால் நிறைந்திருந்தது. தமது கண்களை நம்ப முடியாமல், இருவரும் குழப்பத்துடன் அவருக்கு அன்னையர் தின வாழ்த்துக் கூறி, பரிசு மற்றும் பூக்களை வழங்கினர்கள்.
அம்மாவின் வீட்டுக்குள் சென்று "என்னம்மா நடக்கிறது? அவள் தனியாக இருக்கிறாள் என்று சொன்னீர்கள். நாங்கள் உங்கள் இருவரையும் வெளியே அழைத்துச் செல்லத் திட்டமிட்டோம், அவருக்கும் பரிசு கொண்டு வந்தோம்."
"ஆமாம் இப்போது அவள் தனியாக இருக்கிறாள். அவளுக்குச் சொந்தக் குழந்தைகள் இல்லை, ஆனால் அவள் பல குழந்தைகளை வளர்த்தாள். இப்போது அவள் வளர்த்த குழந்தைகள் அவளைக் கவனித்துக்கொள்கிறார்கள்" என்றாள் அம்மா.
"அவர்கள் அவளுக்குத் தேவையானதைச் செய்கிறார்கள். அவள் நலமாக இல்லாத போது வந்து அவளைப் பார்த்துக்கொள்கிறார்கள்.
நீங்களும் அவளை அம்மாவாகக் கருதினீர்கள் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று அம்மா கூறவும் இருவரும் திகைத்துநின்றனர்.
குழந்தைகள் இல்லை என்றாலும் அவளும் அவள் கணவரும் அன்பும் பரந்த மனப்பான்மையும் கொண்டிருந்தார்கள். பாசம் தேவைப்படும் குழந்தைகளுக்கு அதைக் கொடுத்து வளர்த்தார்கள்.
எல்லோரும் இப்படி நினைத்தால் உலகில் அனாதைகளே இருக்க மாட்டார்கள்.
உமாவுக்கும் ரவிக்கும் என்றும் நினைவில் நிற்கும் அன்னையர் தினம் ஆனது அது!
வீ.ச. குமார் |