ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
(பாகம்-16d)

முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.

வாருங்கள், ஆரம்பநிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம்!

★★★★★


கேள்வி: (சென்ற இதழ் தொடர்ச்சி) நான் ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நல்ல வேலையில் உள்ளேன். என் நண்பன் ஒருவனும் அதே நிறுவனத்தில் இருந்தான். ஆனால் சமீபத்தில் திடீரென வேலையை விட்டுவிட்டு, ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளான். அப்போதிலிருந்து என்னையும் தன்னோடு வந்து நிறுவனனாகச் சேர்ந்துகொள், நிறுவனத்தில் சமபங்கு தருகிறேன் என்று அரிக்கிறான். நான் வேண்டாம் என்றாலும் விட்டபாடில்லை. எனக்கும் இப்போது அவனோடு சேர்ந்து, உழைத்து நிறுவனத்தை வளர்த்துச் சாதிக்கலாம் என ஆர்வம் உண்டாகியுள்ளது. ஆனால் நல்ல வேலையையும் சுளையான சம்பளத்தையும் லேசில் உதறித்தள்ள இயலவில்லை. ஒரே குழப்பம், இருதலைக் கொள்ளி எறும்பு நிலை. நான் என்ன முடிவெடுக்க வேண்டும்?
கதிரவனின் பதில் (தொடர்ச்சி): சென்ற பகுதிகளில், பெருநிறுவனங்களில் வேலை நிலையானது என்று எண்ணி அதனால் மட்டும் ஆரம்பநிலை நிறுவனத்தில் சேராமலிருப்பது சரியாகாது என்றும் எக்காரணங்களால் பெருநிறுவன வேலையை இழக்க நேரலாம் என்பவற்றைப் பட்டியலிட்டோம். அவற்றில் லாபக் குறைவு, வணிகக் குழு விற்றல், மற்றும் குழு அல்லது செயல்பாட்டுக் குழு நீக்கல் (cancelation), பற்றி விவரித்தோம். இப்போது மற்றொரு காரணத்தைக் காண்போம்.

நீங்கள் உங்கள் வேலையில் தழைத்து வளர்வதோ, அல்லது தடுமாறித் தத்தளிப்பதோ முழுவதும் உங்கள் கையில் மட்டுமில்லை. உங்கள் மேலாளர் (manager/boss) மற்றும் உங்கள் சக குழுவினரிடமும் உள்ளது. மேலாளருக்கு உங்கள் வேலையும் திறனும் பிடித்திருந்தால் ரொம்ப நல்லதாய்ப் போயிற்று, பாராட்டுகள். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த மேலாளருக்கு உங்களைப் பிடிக்காமல் போகக்கூடும். உதாரணமாக அவர் எடுத்த ஒரு முடிவை நீங்கள் வெளிப்படையாக அங்கீகரிக்காததால் அவருக்கு உங்கள்மேல் கோபமிருக்கலாம். இப்படிப் பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். காரணம் எதுவாயினும் விளைவு என்ன? உங்கள் வேலைக்கு வரும் அனர்த்தந்தான்!

முதலில் உங்களுக்குச் சரிப்பட்டு வராத பணியை அளிக்கலாம். பிறகு வருடாந்திர விமர்சனக் கட்டத்தில் எதாவது காரணங்களைச் சுட்டிக்காட்டி உங்கள் வேலை சரியில்லை என்று உங்கள்மேல் பழி சுமத்தலாம். அதற்குப் பிறகு திறன் உயர்த்தும் திட்டம் (performance improvement plan) என்று கறாரான சில அம்சங்களை மூன்று மாதத்திற்குள் நீங்கள் சாதித்துக் காட்டவேண்டும் என்று கட்டளையிடுவார்கள்.

அந்த மூன்று மாத காலத்துக்குள் மேலாளரின் திருப்திக்கேற்ப நீங்கள் பணி மேம்பாட்டைக் காட்டாவிட்டால் வேலையிலிருந்தே நீக்கிவிடக் கூடும். உங்களை வேலையிலிருந்து சட்டரீதியாக விலக்குவதற்காகவே அப்படிப்பட்ட போலி நாடகத்தை நடத்துவதும் உண்டு. (அதற்குள்ளாக நீங்களேகூட மேலாளரின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட மனக்கசப்பால் ராஜினாமா செய்துவிடக் கூடும், அது வேறு விஷயம்!)

இதெல்லாம் எதற்கு, சட்டென்று கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடலாமே என்று கேட்கிறீர்களா? சிறு நிறுவனங்களில் அப்படித் தள்ளவும் வசதி உண்டு. ஆனால் பெருநிறுவனங்கள் சில சட்டங்கள், விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கவேண்டும். ஒருவரை மட்டும் தனிப்படுத்திச் சாதாரணமாக வெளியில் தள்ளிவிட முடியாது. பொதுவான வேலையாளர் குறைப்பென்றால் பரவாயில்லை. மேலாளருக்குத் திருப்தி இல்லை என்றால் மேம்பாட்டுத் திட்டமுறைப் படிதான் செய்தாக வேண்டும்.

சரி, அப்படியில்லை, உங்கள் மேலாளர் உங்கள் வேலைத்திறனால் அசந்துபோய் உங்கள்மேல் மிக்க மரியாதையுடனும் நட்புடனும் நடந்துகொள்வதால் உங்கள் வேலைக்களம் சொர்க்கபுரியாகவே இருக்கக்கூடும். சிலிக்கான் சமவெளியில் மென்பொருள் பொறியாளர்களாக இருக்கும் பெரும்பாலோர்க்கு இந்த நன்னிலையே உள்ளது. ஆனால் அப்படி சிலாகிக்கும் அனைவருக்கும் அது அப்படியே நீடிக்கும் என்பது சாஸ்வதமல்ல. நீடிக்கலாம். ஆனால் ஒன்றை மனதில் கொள்ளுங்கள். உங்கள் மேலாளர் பல காரணங்களால் உங்கள் குழுவை விட்டு நீங்கிப்போக வாய்ப்புள்ளது. அவருக்குப் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். அல்லது அவரது மேலாளர் அவரைப் பதவிநீக்கக்கூடும் – அதற்கும் வாய்ப்புள்ளது! அல்லது அவர் நிறுவனத்தைவிட்டே நீங்கி வேறொரு நிறுவனத்திற்குச் சென்றுவிடக் கூடும்.

அப்படி மேலாளர் விலகிச் சென்றால்தான் என்ன! புது மேலாளருடன் நன்கு பழகி முன்போல் மீண்டும் சொர்க்கபுரியாகத் தொடரலாம் அல்லவா என்கிறீர்களா? அப்படி நடக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் சில சமயம் இசகுபிசகாக நடக்கவும் கூடும்.

முந்தைய மேலாளருக்கு உங்களிடம் பிடித்த குணாதிசயம் புது மேலாளருக்குப் பிடிக்காமல் போகலாம். உதாரணமாக மேலாளரின் முடிவை உடனே ஏற்று அதைச் செயலாற்றாமல் அதன் பலன்களையும் குறைகளையும் அவருடன் அலசி அதை மறுத்தோ மேம்படுத்தியோ பேசுவது இதுவரை உங்கள் வழக்கம். ஆனால் புது மேலாளர், என் வழி அல்லது வெளிவழி என்று கறாரக உங்கள் மறுபேச்சை விரும்பாமல் போய்விட்டால்? பிறகு முன்பு கூறிய வேலைநீக்க வழிமுறை ஆரம்பிக்கக் கூடும்!

அல்லது, நீங்கள் மேல்நிலைப் பணியாளராக இருந்தால், சில சமயங்களில் புது மேலாளர் தனக்கு முன்பே பரிச்சயமான, பழகிய குழுவைத் தன்கீழ் வரவழைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடும். அதனால் உங்களுக்குப் பிடித்தமில்லாத வேறு பணியில் உங்களைத் தள்ளி வைத்துவிட்டு, தனக்குப் பிடித்தவரை வரவழைக்கக் கூடும். உதாரணமாக, நீங்கள் ஒரு உபகுழுத் தலைவராக இருக்கும்போது அந்தப் பதவியிலிருந்து நீக்கித் தனிநபர் பதவியளிக்கக் கூடும். இன்னும் மோசமாக, உங்களுக்குப் பதிலாக புதிதாக வந்தவரின் கீழே வேலை செய்யுமாறு பணிக்கக் கூடும்!

இவ்வாறு உங்களுக்கும் உங்கள் மேலாளருக்கும் இடையில் ஏற்படும் சில அசம்பாவிதங்களால் உங்கள் சொர்க்கபுரி நரகமாகி உங்கள் வேலை நீக்கத்துக்கோ, உங்கள் மனநிலை நிர்ப்பந்தத்தால் வேலை விலகலுக்கோ காரணமாகி விடக்கூடும்.

அடுத்த பகுதியில், பெருநிறுவனங்களில் வேலை இழப்பதற்கான மற்றக் காரணங்களையும், உங்கள் கேள்வியின் விடைக்கான மற்ற பல அம்சங்களையும் அலசுவோம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com