சுவாமி விவேகானந்தர்
பகுதி - 3 (மார்ச் மாதத் தொடர்ச்சி)

மன்னருடன் சந்திப்பு
கன்யாகுமரி அம்மனைத் தரிசித்தபின் ராமநாதபுரம் சென்றார் சுவாமி விவேகானந்தர். ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தருக்குச் சிறப்பான வரவேற்பை அளித்தார். சேதுபதி மன்னரும் மைசூர் மன்னர் சாமராஜேந்திர உடையார் போன்றவர்களும், சுவாமி விவேகாந்தர் அமெரிக்காவில் விரைவில் நடைபெற இருக்கும் சர்வசமய மாநாட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினர். சுவாமிகளும் அதற்கு "இறைவன் சித்தப்படியே அனைத்தும் நடக்கும்" என்று பதில் கூறினார். ராமநாதபுரத்தில் மாணவர்கள், இளைஞர்களிடையே எழுச்சியுரை ஆற்றியபின் சென்னை திரும்பினார்.

அமெரிக்கப் பயணம்
சென்னையில் அவருக்கு அளசிங்கர், பாலாஜி, சிங்காரவேலு முதலியார், டாக்டர் நஞ்சுண்டராவ் போன்றோர் சிறப்பான வரவேற்பை அளித்தனர். அமெரிக்காவில் நடக்கும் பல்சமய மாநாட்டிற்கு விவேகானந்தர் அவசியம் செல்லவேண்டும் என்றும், இந்து மதத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்க வேண்டும் என்றும் சென்னை அன்பர்கள் பலரும் வற்புறுத்தினர். ஆரம்பத்தில் சுவாமி விவேகானந்தர் இதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அன்பர்கள் தொடர்ந்து வலியுறுத்தவே இசைந்தார். அவரது சகோதரச் சீடர்களான துரியானந்தரிடமும், பிரம்மானந்தரிடமும் தனது பயணம்பற்றிக் கூறும்போது, "என் இனிய அன்பர்களே, நான் இந்தியா முழுவதும் பயணம் செய்தேன். ஆனால் நான் கண்டது எல்லாவிடத்தும் ஏழ்மையையும் வறுமையையும்தான். மக்கள் படும் துயரினைப் பார்த்து என் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. மக்களின் வறுமையையும் துயரத்தினையும் போக்குவதுதான் முதல் பணியேயன்றி, அவர்களிடம் மதத்தினையும் அதன் கொள்கைகளையும் போதிப்பது பயனற்றது என்பதை உணர்ந்தேன். இந்தியாவில் ஏழைகளின் மீட்சிக்காக ஒரு வழியைக் காண வேண்டும் என்ற தீவிர எண்ணத்தினால்தான் நான் இந்த அமெரிக்கப் பயணத்திற்கு ஒப்புக்கொண்டேன்" என்று கண்கலங்கக் கூறினார்.

சிகாகோ மாநாட்டு மேடைஅது மட்டுமல்ல, விவேகானந்தரின் மனத்தில் வேறு பல திட்டங்களும் இருந்தன. அவை
1. பாரத தேசத்தின் வலிமையை, பழமையை, அதன் ஆன்மீக பலத்தை அகில உலகத்திற்கும் அறிமுகப்படுத்துவது.
2. பழம்பெரும் தேசமான பாரதத்தின் ஆன்மீகப் பொக்கிஷமான வேத, வேதாந்தக் கருத்துக்களையும், அதன் கொள்கைகளையும் அயல்நாட்டவர்களுக்கு அறிவுறுத்தி அதன்மூலம் அவர்களது கவனத்தை இந்தியாவின்மீது திருப்புவது.
3. இந்தியாவைப் பற்றிய தவறான எண்ணங்கள் கொண்டிருந்த மேலைநாட்டவர்களுக்கு அதன் உண்மையான பெருமையை அறிமுகப்படுத்துவது.
4. வெளிநாடுகள் பெற்ற செல்வவளம், அறிவியல் பலம், தொழில்நுட்பம், அவற்றின் பயன்பாடு போன்றவற்றை அறிந்துகொண்டு அம்முறைகளை இந்தியாவிலும் உருவாக்கி உயர்வடையச் செய்வது.

இவற்றையே சுவாமி விவேகானந்தர் தமது முக்கியக் கொள்கைகளாகக் கொண்டிருந்தார். ஆனாலும் வெளிநாட்டுக்குச் செல்வது எளிதாக இருக்கவில்லை. அதற்குப் பல்வேறு தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது

தடையும் விடையும்
இந்துமதத்தின் பிரதிநிதியாக அவர் கலந்துகொள்வதை இந்தியாவில் உள்ள மதக்குழுவினர் சிலரும், சில சங்கங்களும் ஒப்புக்கொள்ளவில்லை. அவை தாங்களே பிரதிநிதிகளை அனுப்பப் போவதாகக் கூறி விவேகானந்தருக்கு அனுமதிக் கடிதம் கொடுக்க மறுத்தன. ஓர் இந்து, கடல் கடந்து செல்லக்கூடாது என்ற கடுமையான மதக்கட்டுப்பாடு அக்காலத்தில் நிலவியது. அதனை சுவாமிகள் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டிவந்தது. மேலும் பயணச் செலவுகளுக்காக நிதி வேண்டியிருந்தது. முதல் வகுப்புப் பயணச்சீட்டுக்கும், இதர செலவினங்களுக்கும் கேத்ரி மன்னர் அஜீத் சிங் பொறுப்பேற்றிருந்தார். ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதியும், மைசூர் மன்னரும் நிதி அளித்திருந்தனர். சுவாமிகளின் மீது அளவற்ற அன்பு பூண்ட அளசிங்கர் போன்ற அன்பர்களும் சென்னையிலிருந்து நிதி திரட்டிக் கொடுத்தனர்.

அனைவரும் அன்புடன் வழியனுப்ப, விவேகானந்தருடைய முதல் வெளிநாட்டுப் பயணம் துவங்கியது. எல்லாத் தடைகளையும் எதிர்கொண்டு, தன் குருநாதர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் அருளால், அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் ஆசியுடன், சக சீடர்கள் மனமுவந்து விடைகொடுக்க 1893ம் ஆண்டு, மே மாதம் 31ம் தேதி சுவாமி விவேகானந்தர், பம்பாய்த் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட எஸ்.எஸ். பெனின்சுலார் என்ற கப்பலில் அமெரிக்காவுக்குப் புறப்பட்டார். அந்தப் பயணம் அவரது ஆன்மீக வாழ்வின் மற்றுமொரு திருப்புமுனைக்கும், இந்தியாவின் புதிய மறுமலர்ச்சிக்கும் வித்திட்டது.

சுவாமி விவேகானந்தர் புறப்பட்ட கப்பல் முதலில் கொழும்பு சென்றடைந்தது. அங்குள்ள புத்தர் ஆலயத்திற்குச் சென்று வணங்கினார். அங்கு தியானம் செய்தார். மாலையில் மீண்டும் புறப்பட்ட கப்பலில் தனது பயணத்தைத் தொடர்ந்தார். அந்தப் பயணம் அவருக்குப் பல்வேறு புதிய அனுபவங்களைத் தந்தது. பலரது நட்பு, அறிமுகங்கள் கிடைத்தன. கப்பல் சிங்கப்பூர், ஹாங்காங், யோகோஹாமா, கியோடோ, டோக்கியோ நகரங்களைக் கடந்து ஜப்பான் சென்றது. அதன்பின் வேறொரு கப்பலில் ஏற, அக்கப்பல் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள வான் கூவர் துறைமுகத்தை அடைந்தது. அங்கிருந்து மின்னசோட்டா, விஸ்கான்சின் வழியாக ரயிலில் பயணித்து 1893 ஜூலை 30ம் நாள் இரவு சிகாகோவை அடைந்தார்.அமெரிக்காவில்...
தன்னந்ததனி ஆள். புத்தம் புதிய இடம். ஆதரவு காட்டவோ, அரவணைத்துச் செல்லவோ யாருமில்லாத பிரதேசம். முதலில் சற்றுத் திகைத்தார் விவேகானந்தர். ஏனெனில் அவர் சர்வமதப் பாராளுமன்றம் பற்றியோ, அதன் அமைப்பாளர் பற்றியோ, அது எப்போது கூடப்போகிறது, பங்கேற்க யாரைப் பார்க்கவேண்டும் என்பதெல்லாம் பற்றி அறிந்திருக்கவில்லை. மாநாட்டின் தலைவரிடமிருந்து எந்தவிதமான அழைப்பையோ அனுமதியையோ பெற்றிருக்கவில்லை. இந்து மதத்தின் பிரதிநிதி என்று கூறும் எந்தவிதமான சான்றிதழும் வைத்திருக்கவில்லை. அதனால் அவரை வரவேற்க அங்கு யாரும் வரவில்லை. மேலும் அவரது தோற்றமும் அவர் அணிந்திருந்த மாறுபட்ட உடைகளும் அங்கிருந்தவர்களுக்கு வியப்பைத் தந்தன. அவரையே வித்தியாசமாகப் பார்த்தனர்.

சுவாமிகள் அருகிலிருந்த விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கினார். மறுநாள் காலையில் அவருக்கு அந்த அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. 'சர்வசமய மாநாடு நடக்கப்போவது செப்டம்பர் 11ம் தேதிதான்' என்பதே அது. அதுவோ ஜூலை மாதம். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தங்கியாக வேண்டும். கையிருப்போ மிகக்குறைவு. அதற்குள் தங்குமிடம், உணவு, உடை எல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையைக் கைவிடாமல் சமாளிக்க உறுதி பூண்டார். அருகில் ஓரிடத்தில் உலகக் கண்காட்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அங்கு தினந்தோறும் சென்று பொழுதுபோக்குவார். ஆனால், உணவின்றியும், தங்க இடமின்றியும் கடுங்குளிரில் துன்பப்பட்டார். கிட்டத்தட்ட 12 நாட்கள் அங்கு தங்கினார்.

கையிருப்பு வெகுவாகக் கரைந்தது. என்ன செய்வதென்று அவர் திகைத்திருந்தபோது, தன்னுடன் கப்பலில் பயணம் செய்த கேட் சேன்பார்னின் நினைவு அவருக்கு வந்தது. அவரைத் தொடர்பு கொண்டார். அவர் விவேகானந்தருக்கு உதவ முன்வந்தார். அவரைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று மாநாடு கூடும் நாள்வரை தங்க வைத்தார்.

சுவாமி விவேகானந்தரை தனது நண்பர்களுக்கும், தனது நெருங்கிய உறவினரான பெஞ்சமின் சேன்பார்ன் போன்ற பிறருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்கள் முன் விவேகானந்தர் சிறு சொற்பொழிவாற்றினார். பின் சாரடோகா என்ற இடத்தில் உள்ள அமெரிக்க சமூக அறிவியல் கழகத்திலும் சொற்பொழிவாற்றினார். பெஞ்சமின் சேன்பார்ன் வழியே சர்வசமயப் பேரவை அமைப்பாளர்களின் அறிமுகமும் கிடைத்தது. குறிப்பாக ஹார்வார்டு பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜான் ஹென்றி ரைட் என்பவரின் அறிமுகம் விவேகானந்தருக்கு மிகவும் உதவியாக இருந்தது.

"நன்கு கற்றறிந்த நமது பேராசிரியர்களை விட இந்த இந்துத்துறவி மிகமேலானவர்" என்ற பரிந்துரைக் கடிதத்தை ரைட்டிடமிருந்து பெற்றுக்கொண்ட விவேகானந்தர், மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மீண்டும் சிகாகோ நகரை அடைந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாநாட்டு அமைப்பாளர்களின் அலுவலக முகவரியை அவர் தொலைத்துவிட்டிருந்தார். அங்கிருந்த பலரிடமும் விசாரித்தார், பயனில்லை. மாறாக சுவாமிகளின் உடையையும் தோற்றத்தையும் கண்டு பலர் அவரிடமிருந்து விலகிச் சென்றனர். அந்த மாபெரும் நகரில், தன்னந்தனியாக விடப்பட்டு, ஒரு ரயில் பாதையின் ஓரமாக நின்றிருந்த காலிச் சரக்கு ரயில்பெட்டி ஒன்றில், மிகக் கடுமையான குளிரில், உடல் நடுங்கியவாறே, முழுதும் உறக்கமின்றி அந்த இரவுப் பொழுதைக் கழித்தார் அவர்.

மறுநாள் அங்குமிங்கும் சுற்றிச் சோர்ந்து ஒரு தெரு ஓரத்தில் அமர்ந்திருந்த சுவாமிகளை ஜார்ஜ் ஹேல் என்னும் பெண்மணி கண்டார். அவர் விவேகானந்தருக்கு உதவியதுடன், சர்வசமய மாநாட்டில் உரையாற்றுவதற்கான வாய்ப்பையும் பெற்றுத் தந்தார். மாநாட்டின் அமைப்பாளர்கள், இந்து சமயத்தின் சார்பாக உரையாற்ற விவேகானந்தருக்கு அனுமதி கொடுத்தனர். பிற கீழைநாட்டுப் பிரதிநிதிகள் தங்கியிருந்த ஒரு விடுதியில் சுவாமி விவேகானந்தர் தங்க வைக்கப்பட்டார்.

மாநாட்டு மேடையில் சுவாமிசிகாகோ உரை
அவர் எழுச்சி உரையாற்ற வேண்டிய அந்தப் பொன்னாளும் வந்தது. சர்வசமய மாநாட்டு அரங்கம் முழுவதும் மனிதத் தலைகளால் நிரம்பி இருந்தது. பேச்சாளர்கள்முதல் பார்வையாளர்கள்வரை அனைவருமே நன்கு கற்றறிந்த சான்றோர்கள். ஆனாலும் காலை முதல் ஒருவர் மாற்றி ஒருவர் எழுதி வைத்துப் படித்த உரைகளைக் கேட்டுப் பார்வையாளர்கள் சற்று சலிப்புற்றனர்.

பேச்சாளர்களோடு பேச்சாளர்களாக விவேகானந்தரும் உட்கார்ந்திருந்தார். அடுத்துப் பேச வேண்டியது அவர்தான். உள்ளூரச் சற்று நடுக்கமாக இருந்தது சின்னத் தடுமாற்றம் வேறு. அதற்கு முன் பல கூட்டங்களில் பலபேருக்கு முன் அவர் பேசியிருக்கிறார்தான். ஒரு வெளிநாட்டில், அதுவும் கற்றறிந்தோர் நிரம்பிய அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தின் முன் பேசுவது அதுதான் முதல்முறை. பேச்சாளர் பலரும் முன்னரே எழுதி வைத்திருந்த உரையை மேடையில் வாசித்துவிட்டுச் சென்றனர்.

விவேகானந்தர் அப்படி எதுவும் எழுதித் தயாரித்துக்கொண்டு வரவில்லை. அதுதான் அங்கே வழக்கம் என்று யாரும் அவருக்குச் சொல்லவும் இல்லை. சற்று நடுக்கமாகவே உணர்ந்தார். மெல்ல அந்த அவையை நோட்டமிட்டார். கிட்டத்தட்ட ஏழாயிரம் பேர் அங்கு கூடியிருந்தனர். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் அங்கு கூடியிருந்தனர்.

அவர் பேச அழைக்கப்பட்டார். சபையின் பிரதிநிதி டாக்டர் பரோஸ் எழுந்து விவேகானந்தரை அவையினருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

உடலெங்கும் போர்த்தப்பட்ட காவி உடை. தலையில் முண்டாசு போன்ற அழகான தலைப்பாகை. கண்களில் ஓர் ஒளி. முகத்தில் பொலிவு. கம்பீரமான தோற்றம், இளமை பொங்கும் உருவம் என்று தனது தோற்றப் பொலிவினால் விவேகானந்தர் அனைவரையும் கவர்ந்தார். அவரது மாறுபட்ட உடையும், முகத்தில் வீசிய ஒளியும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன. விவேகானந்தர் பேச எழுந்தார். மனதுக்குள் கலைவாணியைத் தொழுதார். தன் குருநாதரை உள்ளத்துள் தியானித்தார். ஓர் சக்தி தன் தலைமுதல் கால்வரை ஊடுருவும் உணர்வு அவருக்கு ஏற்பட்டது.

பேச ஆரம்பித்தார்.
'சீமான்களே, சீமாட்டிகளே' என அதுவரை பேசியவர்கள் தொடங்கிப் பேசினர். விவேகானந்தரோ "அமெரிக்க நாட்டின் சகோதர, சகோதரிகளே!" என்று விளித்துப் பேச ஆரம்பித்தார். அந்தக் குரலில் இருந்த குழைவு, அன்பு, கம்பீரம், தெளிவு, உறுதி என அனைத்தும் அக்கூட்டத்தினரிடையே ஏதோ மின்சாரம் தாக்கிய உணர்வைத் தோற்றுவித்தன. அந்த உள்ளத்தை உருக்கும் குரல், அதில் தெரிந்த அசாத்திய உறுதி, கம்பீரம், தெளிவு என அனைத்துமே ஒருவிதப் பரவசத்தைத் தோற்றுவித்தது. ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் போல அனைவரும் எழுந்து ஒருமித்துக் கைதட்ட ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட இரண்டு நிமிடம்.

கைதட்டல் முடிந்த பின்தான் விவேகானந்தரால் பேச்சைத் தொடரமுடிந்தது. சிங்கம் ஒன்று கர்ஜிப்பது போல முழங்க ஆரம்பித்தார் அவர். அவரது அங்க அசைவுகள், அவர் குரல் வெளிப்படுத்தும் பாங்கு, அருவியெனப் பொழியும் கருத்துக்கள், அதன் ஆழமான உட்பொருள், அதில் வெளிப்பட்ட தத்துவங்கள்என எல்லாமே அவர்கள் கண்டிராதது.

இந்துமத்தின் பெருமை, அது வலியுறுத்தும் சகோதரத்துவம், அது காட்டும் சகமனிதன் மீதான நேசம், அதன் பழமை, பெருமை என எல்லாவற்றையும் அழகாக, தெளிவுபட விளக்கிக் கூறினார் வீரத்துறவி. தன் முதல் பேச்சிலேயே அனைவரது உள்ளங்களையும் கவர்ந்துவிட்டார். அனைவருக்கும் தன் மதத்தின் பெயரால் நன்றி கூறி உரையை முடித்தார் சுவாமி விவேகானந்தர். வந்திருந்தோர் இதய சிம்மாசனங்களில் குடியேறிவிட்டார் அவர்.

மறுநாள், "இந்தியாவின் சூரியன்", "இந்து மதத்தின் சிங்கம் போன்ற பிரதிநிதி", "குழந்தையைப் போன்ற இளைஞர்", "புயல் போன்ற இந்து" என்றெல்லாம் அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகைகளான 'பாஸ்டன் ஈவினிங் ட்ரான்ஸ்கிரிப்ட்', 'நியூயார்க் கிரிடிக்', 'இன்டர் ஓஷன்', 'சிகாகோ டிரிப்யூன்', 'பிரஸ் ஆஃப் அமெரிக்கா' போன்றவை அவரை வர்ணித்திருந்தன. கம்பீரமான அவரது புகைப்படத்தை வெளியிட்டன. அதுவரை இந்தியா என்பது ஏழைகளின் நாடு, படிக்காதவர் தேசம், பழமையான கருத்துக்களைக் கொண்ட பிற்போக்கான நாடு என்றுதான் அவர்கள் நினைத்திருந்தனர். ஆனால் விவேகானந்தரின் ஒரே ஒரு பேச்சு, இந்தியா எந்த ஒரு நாட்டுக்கும் குறைந்ததல்ல; பழக்கவழக்கங்களிலும், செயல்பாடுகளிலும் எந்த மேற்கு நாட்டுக்கும் எவ்விதத்திலும் தாழ்வானதல்ல; உலகிலேயே பழைமையும் பெருமையும் வாய்ந்த ஒரே தேசம் அதுதான் என்பதை தெள்ளெனக் காட்டியது. புதியதோர் அத்தியாயத்தை அவர்கள் மனதில் எழுதியது. புதிய ஆன்மீக உலகிற்கு வழிகாட்டும் ஜோதியாய் ஜொலித்த சுவாமி விவேகானந்தரால், பாரதமே புத்தெழுச்சி பெற்றது. அதன்மீது உலகத்தின் பார்வை திரும்பியது.

(தொடரும்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com