தனிமை வேறு, வெறுமை வேறு!
அன்புள்ள சிநேகிதியே,
(இந்த lock-down நேரத்தில் என்ன செய்தாலும் தனிமையைப் போக்க முடியவில்லை என்று சிலர் விரக்தியுடன் எழுதியிருந்தனர். அவர்களுக்காக...)

இந்தச் சோதனையான காலகட்டத்தில் கணவன், மனைவி, குழந்தைகளெல்லோரும் ஒன்றாக உணவருந்தி, .விளையாடி, பொழுதுபோக்கும் அருமையான வாய்ப்பு என்று நினைக்கிறோம். ஆனால், எத்தனையோ பேர் தனியாக ஒரு தனி வீட்டிலோ, அபார்ட்மென்ட்டிலோ மாட்டிக்கொண்டு வெறும் தொலைபேசியையும், தொலைக்காட்சியையும், கணினியையும் பார்த்தபடியே வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் முதியவர்களாக இருந்தால் கேட்கவே வேண்டாம். "கேட்பதற்கு ஆள் இல்லாமல் நானே பாதிநேரம் உரக்கப் பேசிக் கொண்டிருக்கிறேன். எனக்கென்று உறவு யாரும் இல்லை" என்று ஒருவர் எழுதியிருந்தார். இன்னொருவர், "என் அம்மா தினம் என்னிடம் ஒரு மணிக்கு ஒருமுறை ஃபோன் செய்கிறார். நான் மிகவும் பிஸியாக இருக்கிறேன். அதனால் கோபித்துக் கொள்கிறேன். பிறகு வருத்தப்படுகிறேன். போன வாரம், ஒருநாள் ஃபோன் வரவில்லை. நான் மிகவும் பயந்து போய்விட்டேன். எத்தனை முறை செய்தாலும் பதில் இல்லை. I imagined the worst. 911 கூப்பிட முடிவெடுத்தேன். எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு கடைசியாக ஒருமுறை முயற்சித்தேன். நல்ல காலம் அம்மா எடுத்தார். முதல் நாள் இரவு தவறுதலாக ஃபோனை லாண்டரி ரூமில் வைத்திருக்கிறார். டி.வி. ரிமோட்டை ஃபோன் என்று பத்திரமாகப் பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்கியிருக்கிறார். மறுநாள் அவரும் தேடித்தேடி அலுத்து விட்டார். நல்லவேளை, அந்தச் சமயம் லாண்டரிப் பக்கம் வந்தபோது துணிகளுக்கிடையில் இந்தச் சப்தம் கேட்டது" என்று ஒரு பெரிய மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

ஆகவே, வரும் மூன்று மாதங்களுக்கு நான் ஒரு வழி வகுத்து இருக்கிறேன். தனிமை விரும்புவர்களுக்கே இந்த லாக்-டௌன் ஒரு விரக்தியை உண்டுபண்ணலாம். அதுவும் வயதானவர்கள் வெளியிலும் போகமுடியாமல், நெருங்கியவர்கூட உள்ளேயும் வரமுடியாமல், உடலாலும், உள்ளத்தாலும் ஒரு சோர்வை எதிர்கொள்வார்கள். யாராவது ஃபோன் செய்யமாட்டார்களா, பேச மாட்டார்களா என்று தோன்றும். தயவுசெய்து drcv.listens2u@gmail.com (அவரோ அல்லது அவரைச் சேர்ந்தவர்களோ) தங்கள் விருப்பத்தைப் பதிவுசெய்து, சௌகரியமான நேரத்தையும் எழுதவும். ஒருவருக்கு ஒருநாள் 15 நிமிடங்கள் என்னால் ஒதுக்கமுடியும். இதைப் பலருக்குச் செய்துகொண்டு வருகிறேன். என்னால் முடிந்தவரை அவர்களது தனிமையைப் போக்க உதவுகிறேன்.

தனிமை வேறு. வெறுமை வேறு. மனிதர்கள் இயல்பான வாழ்க்கையில் தனித்திருக்கும் நிலைமை வேறு. இப்போதைய நிலைமை வேறு. அந்த வெறுமையை உணரும்போது வெறுப்பு, விரக்தி, சுயபச்சாதாபம், கலக்கம் என்று எல்லாம் வெளிப்பட்டு உடலும், மனமும் குழம்பிப் போய்விடுகின்றன. தயவுசெய்து நண்பரோ, உறவினரோ, சிறியவரோ, பெரியவரோ ஆணோ, பெண்ணோ, எந்த நாட்டவரோ பரவாயில்லை. அவ்வப்போது ஒரு ஃபோன் செய்து உற்சாகப்படுத்துவோம்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com

© TamilOnline.com