தென்றல் மார்ச் 2020. இதழ் ஓர் ஒளிவீசும் உலகமகளிர் சிறப்பிதழ். பல துறைகளில் அமைதியாகப் பிரமிக்க வைக்கும் அற்புத சாதனைகள் படைத்த மாதர்குல மாணிக்கங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வியத்தகு சாதனைகளை வாசகர்களுக்குக் கொண்டுவந்து தென்றல் பெருமையடைகிறது. கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் ஏழை விவசாயிகளுக்கு ஆற்றிய தொண்டு மெய்சிலிர்க்க வைக்கிறது.
கோ. ராமன், 128, செஸ்ட்நட் லேன், சான் மாட்டியோ
உலக மகளிர்தினச் சிறப்பிதழில் மாதர்குல மாணிக்கங்களின் தியாகங்களை, அவர்கள் மேற்கொண்ட சிரமங்களை, அதையும் மீறித் திடமான தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேறியிருக்கும் அவர்களின் திறமைகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
ஹரிமொழியில் 'வாயு புத்திரர்கள் சந்தித்தபோது' படித்தேன். மகாபாரதத்தையும் ராமாயணத்தையும் இத்தனை துல்லியமாக இதுவரை யாரும் ஆராய்ந்ததில்லை என்று நினைக்கிறேன். 'பொறுப்பு என்ற பெயரில் கவலையைச் சுமக்காதீர்கள்' என்னும் டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் அவர்களின் வித்தியாசமான பார்வை வரவேற்கத் தக்கது.
உலகம் முழுவதும் எதோவொரு பயமும் பீதியும் பெருகிப்போய், வீடுகளே அலுவலகங்களாகவும், தெருக்கள், நகரங்கள் எல்லாம் வெறிச்சோடி உள்ளன. இதைப் பார்க்கும்போது கொரோனா நம்மை எவ்வளவு தூரம் கலங்கவைத்துள்ளது என்பது புரிகிறது. முன்னோர்களின் வழிமுறைகளை மறுபடியும் நாம் பின்பற்றுவோம்.
தென்றலின் அனைத்துப் பகுதிகளும் சிறப்பாக உள்ளன. நன்றி.
சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா |