தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழா
ஃபிப்ரவரி 19, 2020 நாளன்று தமிழ் நாடு அறக்கட்டளையின் ஆண்டு விழா, மதுரையில் உள்ள தியாகராசர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரியின் செயலாளர் திரு கருமுத்து க. ஹரி தியாகராஜன் அவர்கள் வந்திருந்து வாழ்த்துரை வழங்கினார்.

அவர் ஒரு நெஞ்சைத் தொடும் சம்பவத்தைக் கூறினார். தியாகராசர் பொறியியல் கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம் இது. ஒரு மாணவர் கல்லூரி நேரம் முடிந்த பிறகும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்தார் அங்கு சென்ற கல்லூரி காவலாளி அவரைப் பார்த்து இங்கே என்ன செய்கிறாய் என்று கேட்டிருக்கிறார். தான் அங்கே இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் எஞ்சினீயரிங் படிப்பதாகக் கூறினார். உங்கள் வகுப்பு மாணவர்கள் எல்லாம் தொழிற்சாலை கல்விச்சுற்றுலா சென்றிருக்கிறார்கள், நீ ஏன் செல்லவில்லை என்று காவலாளி கேட்டார். என்னால் பணம் கட்ட முடியாததால் போகமுடியவில்லை என்று மாணவர் கூறி இருக்கிறார்.,

மீண்டும் காவலாளி அவரிடம் மணி ஏழு ஆகிறது, அனைவரும் வீட்டுக்குப் போய்விட்டார்கள், நீ ஏன் போகவில்லை என்று கேட்டார் , அதற்கு அந்த மாணவர் கடந்த பருவத்திற்கே என்னால் விடுதிக் கட்டணம் செலுத்தமுடியவில்லை, அதனால் சில நாட்களாகவே கல்லூரி மரத்தடியிலேயே தூங்கிவிட்டுக் காலையில் வகுப்புக்குச் சென்றுவிடுவேன் என்று கூறினார்.

அடுத்த நாள் காலை அந்த மாணவர் கல்லூரி முதல்வர்முன் நிறுத்தப்பட்டார். அவருக்கு அறக்கட்டளை மூலம் கட்டணம் செலுத்தப்பட்டது. பின் அந்த விடுதியிலேயே அவர் தங்கியிருந்து கல்லூரி படிப்பை முடித்தார்.

அவர் XLRI-யில் படித்துமுடித்து, ஒரு கொரியக் கப்பல் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். சிங்கப்பூரில் பல வருடம் வேலை செய்து, அந்தக் கம்பெனியின் துணைத்தலைவர் அளவுக்கு உயர்ந்தார். தற்பொழுது அவர் துபாயில் சொந்தமாகக் கப்பல் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இதைச் சொல்வதில் மிகவும் பெருமையாக இருக்கிறது. அவர் ஒவ்வொரு வருடமும் இங்குள்ள முன்னாள் மாணவர் அறக்கட்டளைக்கு மிகப்பெரிய நன்கொடை தருகிறார். எமது மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை கொடுத்து மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்கிறார் என்று கூறினார்.

இதுபோன்ற விழாக்களைத் தமிழ் நாடு அறக்கட்டளை மதுரையில் செய்ய அவர்களுக்குத் தியாகராசர் அறக்கட்டளை துணை நிற்கும் என அவர் உறுதிகூறினார்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com