என் கணவர் அவரது பெற்றோர்களுக்கு ஒரே மகன். மற்ற இருவரும் பெண்கள். சமீபத்தில் என் மாமியார் இறந்துவிட்டார். அவர்கள் மிகவும் அன்னியோன்ய தம்பதிகளாக இருந்து வந்தார்கள். மனைவியின் திடீர் இழப்பை என் மாமனாரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருக்கு ஏற்கெனவே இரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததனால் அவரை நாங்கள் இங்கு எங்களிடம் வந்து இருக்கும்படி கேட்டு கொண்டோம். முதலில் மறுத்தார். பிறகு எப்படியோ சம்மதிக்க வைத்து இங்கே அழைத்து வந்துவிட்டோம். அவருக்கு வயது 75.
போன வாரம் மார்பு வலி என்று சொல்லி மிகவும் பயந்து போய்விட்டோம். அவருக்கு உடல்நலக் காப்பீடு (health insurance) எதுவும் இல்லை. நாங்களே ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. மூன்று நாள் மருத்துவமனையில் இருந்தார். நல்ல வேளை பெரியதாக எதுவும் இல்லை என்றாலும் $15000 -த்தைத் தாண்டிவிட்டது. எப்படியோ சமாளித்துவிட்டோம்.
இப்போது மறுபடியும் அதேபோல் சோதனை வந்தால், எங்களால் அந்தப் பொருளாதாரச் சுமையைத் தாங்க முடியுமா என்று தெரியவில்லை. என் மாமனாரோ இப்போதுதான் மூன்று மாதங்களுக்குப் பிறகு சிறிது மனம் தெளிவடைந்து, என் குழந்தைகளுடன் நேரத்தைக் கழித்து, சிறிது மகிழ்ச்சியாக இருக்கிறார்.
இந்தச் சமயத்தில் அவரை எப்படி இந்தியாவுக்கு அனுப்புவது? எங்கே தங்கியிருக்கச் சொல்வது? எனது நாத்தனார்கள் இருவரும் இந்தியாவில் இல்லை. ஒருவர் ஆஸ்திரேலியா மற்றொருவர் மஸ்கட்டில் இருக்கிறார்கள்.
என் மாமனார் மிகவும் நல்லவர். என்னை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பிவிடுங்கள். நான் ஒரு முதியோர் இல்லத்தில் தங்கி இருக்கிறேன் என்றுதான் சொல்கிறார். ஆனால் எங்களுக்கு மனசாட்சி உறுத்துகிறது. மிகவும் குழப்பத்தில் இருக்கிறோம். எங்கள் குழப்பத்திற்கு விடை தாருங்கள்?
அன்புள்ள சிநேகிதியே...
மிகவும் சிக்கலான கேள்வி. இக்கட்டான நிலை. ஆனால் இந்த அமெரிக்க மண்ணில் உள்ள ஒவ்வொரு இந்தியனுக்கும் ஏற்பட்ட, ஏற்படுகிற, ஏற்படப் போகிற நிலை.
மருத்துவ வசதிக்குப் பொருளாதார நிலைமை இடம் கொடுக்காத போது, உங்கள் விசாவில் அவரை இந்த நாட்டுக் குடிமகனாக மாற்ற, மெடிகேர் வசதிகளுக்கு இடம் கொடுக்காத நிலையில், இந்தியாவில் ஒரு வசதியான முதியோர் இல்லத்தில் சேர்ப்பதுதான் நடைமுறை சாத்தியமான விஷயம். மனசாட்சி உறுத்திக்கொண்டுதான் இருக்கும் வாழ்நாள் வரை.
இருந்தாலும், அதற்கு ஈடுசெய்வது போல் அவரிடம் அடிக்கடி தொலை பேசியில் தொடர்பு கொள்வது, குடும்பத்தினர் எல்லாரும் ஒன்றாகச் செல்லாமல், வெவ்வேறு சமயத்தில் ஒவ்வொருவராகச் செல்வது - இப்படிச் செய்தால் அவருக்கு அவ்வப்போது தன் மனிதர்களைப் பார்த்த திருப்தி ஏற்படும்.
முதிய வயதில் துணையை இழப்பது மிகவும் சோகமானது, ஆனால் தடுக்க முடியாதது. எல்லோரும் தங்களை இதுபோன்ற நிலைக்குத் தயார் செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை. சோகத்தை மறந்து சமூக சேவையில் அல்லது ஆன்மிகத்தில் ஈடுபடும் வாய்ப்புகளை நாம் வலியத் தேடிப் போகவேண்டும்.
வயதானவர்கள் தனியாக இருப்பது நம் மனசாட்சியை உறுத்த வேண்டாம். அவர்களைப் பராமரிக்கும் போது விரும்பப்படுபவர்களாக அவர்கள் உணரவேண்டும். தன் மகன், மருமகள் நம்மை ஆத்மார்த்தமாக நேசிக்கிறார்கள், நாம் அவர்களுக்கு எந்தவிதத்திலும் சுமையாக இல்லை என்ற நினைப்பு மிகவும் முக்கியம். நீங்கள் ஒரு நல்ல மருமகளாக, அதை அவர் உணரும் விதமாக காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உங்கள் கடிதத்தின் மூலம் தெரிய வருகிறது.
வாழ்த்துக்கள்
மீண்டும் சந்திப்போம் சித்ரா வைத்தீஸ்வரன் |