ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளி: 'இருமொழி எழுத்தறிவு முத்திரை' பெற்றார் ஸ்ரீஜா வேணுகோபால் ராஜா
அமெரிக்காவில் பல தமிழ்ப் பள்ளிகள் குழந்தைகளுக்கு மழலையர் வகுப்பிலிருந்து உயர்நிலைப் பள்ளிவரை தமிழ் கற்றுக் கொடுக்கிறார்கள். அப்படிப் படித்தவர்கள், ஆங்கிலத்தோடு தமிழையும் சரளமாக பேச, எழுத முடியும் என்ற நிலையை அடையும்போது அவர்கள் மாநில அரசின் கல்வித்துறையிடம் இருந்து தமிழுக்கான 'இருமொழி எழுத்தறிவு' முத்திரைக்கான தகுதியைப் பெறுகின்றார்கள்.
ஜார்ஜியாவின் கம்மிங் நகரில் இயங்கிவரும் ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளி இம்முத்திரை பெறத் தேர்வெழுதும் மையமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. உலகத் தமிழ் கல்விக்கழகப் பாடத்திட்டத்தின் கீழ், 900 மாணவர்களுக்கு வாராந்திரத் தமிழ் வகுப்புடன், 'இருமொழி எழுத்தறிவு முத்திரை'க்கான வகுப்பையும் நடத்துகின்றது. கலிஃபோர்னியா தவிர்த்த மாநிலங்களில் இயங்கும் தமிழ்ப் பள்ளிகளில், அதிகமான மாணவர்கள் படிக்கும் பள்ளியாக, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, தமிழுக்காக மதிப்பெண் பெற்றுத்தரும் பள்ளியாக திகழ்கின்றது ஆல்ஃபரெட்டா பள்ளி. இப்பள்ளி 18 வருடங்களாகத் தன்னார்வத் தொண்டர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
டென்மார்க் உயர்நிலைப்பள்ளியின் முதுநிலை மாணவி ஸ்ரீஜா வேணுகோபால் ராஜா, இம்முத்திரைத் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் ஜார்ஜியா மாநிலத்தில் தமிழுக்கான முத்திரை பெரும் முதல் மாணவியாக இருப்பார். வகுப்பை வழி நடத்திய ஆசிரியர் அன்பரசன் வின்சென்ட் மற்றும் ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளிக்கு நன்றி கலந்த வணக்கங்கள்.
ரம்யா ராஜ்குமார், அட்லாண்டா, ஜார்ஜியா |