அப்பா, ட்ரான்சிஸ்டர், இளையராஜா...
அப்பா இருக்குமிடத்தில் எப்போதும் இசை இருக்கும். அவருக்கு அருகே ஒரு குட்டி டிரான்சிஸ்டர். அதில் வரும் பாட்டுக்கு அவர் கையிலே எது அகப்படுகிறதோ அதில் தாளம் போட்டுக்கொண்டே ரசிப்பார். அவர் சமைக்கும்போது கரண்டியைத் தட்டித் தாளம் போட்டபடி சமைப்பார். அருகில் யாராவது அகப்பட்டால் அவர் தலையில் தாளம் தட்ட ஆரம்பித்து விடுவார். சனிக்கிழமையானால் காலையில் தலையில் எண்ணெய் வைத்துக் கொள்வதற்காக அவரெதிரே அணிவகுப்போம். நறுக்கென்று எண்ணெய் தேய்த்து விட்டபின் ஒரு குட்டித் தாளம் போட்டுவிட்டுத்தான் எங்களைக் குளிக்க அனுப்புவார். நாங்கள் நழுவி அவருக்கு டிமிக்கி கொடுப்போம்.

என் சிறுவயதில் நாங்கள் கோயம்புத்தூரில் இருந்தோம். அங்கு வருடந்தோறும் பின்னி சுப்பாராவ் நடத்தும் ராமநவமி கச்சேரித்தொடர் மிகப்பிரசித்தம். அப்பா அலுவலகம் முடிந்து 6 கி.மீ. சைக்கிள் ஓட்டி வீடுவந்து, உடனே கிளம்பி, எனக்கும் கையில் கிடைத்ததை ஊட்டிவிட்டு, பின்னால் உட்கார வைத்து, மறுபடியும் ஐந்து கிலோமீட்டர் தூரம் மிதித்து ஆர்.எஸ்.புரம் போய்ச் சேர்வார். அந்தக் காலத்தின் பிரபல வித்வான்கள் எல்லோரும் அங்கே ஆஜர். தொடக்கத்தில் நான் அங்கே இசைக்காகப் போகவில்லை. போவது இடைவேளையில் கிடைக்கும் பொங்கல் சுண்டலுக்காக மட்டுமே! கச்சேரிக்கு இடையில் திடீரென்று போரடித்தால் உடனே வீட்டுக்கு கிளம்பியாக வேண்டுமென்று அடம் பிடிப்பேன். தாளப் பிரியரான அப்பா, மிருதங்கம் தனி ஆவர்த்தனம்வரை இருந்துவிட்டுப் போகலாமே என்று கெஞ்சுவார். நான் பொதுவாக இடம் கொடுக்கமாட்டேன்.

ஒருநாள் லால்குடி ஜெயராமன், உமையாள்புரம் சிவராமன் என்ற உன்னத ஜோடியின் கச்சேரி. "நீ என்ன அழுதாலும் சரி. 'தனி' க்கப்புறம்தான் கிளம்புவோம்" என்று சொல்லிவிட்டார்! அழுதுகொண்டே இருந்தவன், உமையாள்புரம் கணீர், கணீரென்று சாப்பு என்ற சொல்கொண்டு, தனியை ஒரு அசாதாரண அழகுடன் ஆரம்பித்தார். அப்படியே மயங்கிப்போய் நாற்பது நிமிடம் நின்றுவிட்டேன். நேரம் போனது தெரியவில்லை. அதற்குப் பின்னர் நான் தனி ஆவர்த்தனம் முடிந்துதான் கிளம்புவேன் என்று படுத்துவேன். சில சமயம் குறட்டைவிட்டுத் தூங்கிவிடுவேன். தூங்கும் என்னை அப்பா எப்படி சைக்கிளின் முன்கம்பியில் உட்காரவைத்து, கீழே விழாமல் 5 கி.மீ. கடந்தார் என்பது பெருவியப்பு! அப்படியொரு தனிப் பிரியனான நான் பலமுறை சென்னை சபாக்களில் கச்சேரி கேட்கும்போது, தனி ஆரம்பித்ததும் பாதிக் கூட்டம் கேன்டீனில் இன்றைய ஸ்பெஷல் என்ன என்று பார்க்க கிளம்பிவிடுவதைப் பார்த்து ஒருதுளி கண்ணீர் விட்டு, அவர்கள் தலையில் சூடான ஒரு போண்டாவை விட்டெறிந்தால் என்ன என்று யோசிப்பதுண்டு. போகட்டும், ரசிப்பதற்கு சுருதியைவிட லயத்துக்கு அதிகப் பரிச்சயம் தேவை என்பதால் ஆறிய போண்டா என்றாலும் சரியே.

என் பெற்றோர் அமெரிக்காவில் எங்களுடன் நிரந்தரமாகக் குடியேறி வாழ ஆரம்பித்தபின், எனக்கு இந்த இசைச் சேவையை அப்பாவுக்குத் திரும்பிச் செய்ய வாய்ப்பு கிட்டியது. இங்கு பல அமைப்புகள் நடத்தும் கச்சேரிகளுக்குச் சென்றாலும், சில வீட்டுக் கச்சேரிகள் அவற்றைவிட மிகச்சிறப்பு. அதில் முதலாவதாக ஃப்ரீமான்ட் நகரிலுள்ள மதி அவர்களின் இல்லம். அவர் மார்கழியில் நடத்தும் வீட்டளவுக் கச்சேரிகள் அமர்க்களம். அவர், கீழே உட்கார முடியாத அப்பாவை உபசரித்து நாற்காலியில் அமரச் செய்வதும், கச்சேரி முடிந்தவுடன் கையோடு டின்னர் ஒரு பையில் கொண்டுவந்து தருவதும் அப்பாவை நெகிழவைக்கும். ஒருமுறை அப்பா எல்லோர் எதிரிலும் "பணமும், குணமும் ஒன்றாக ஒரே இடத்தில் சேர்ந்தால் அது ஒரு அழகுதான்" என்று சொல்லி மதியை வெட்கப்படச் செய்தார். அதேபோல் சன்னிவேல் சிவம் வீட்டுக் கச்சேரிகளுக்கு விரிகுடாப்பகுதியின் எல்லா பெரிய வித்வான்களும் வந்து சிறப்பிப்பர். அங்கும் படை எடுப்போம்.



அப்பாவுடன் காரில் போனால் எப்போதும் இளையராஜாதான். கார் நின்றபிறகும் பாடிக்கொண்டிருக்கிற பாட்டைக் கேட்டுவிட்டுத்தான் இறங்குவார். அதுவே எனக்கும் பழக்கம் ஆகிவிட்டது.

கடைசிக் காலத்தில், உடல் உபாதைகளால் தள்ளாமல் போனபின், பொழுதுபோக்குக்கு ஒரு சின்ன ட்ரான்ஸிஸ்டர் ரேடியோ மட்டுமே. பெரிதாக இன்னொன்று வாங்கிக் கொடுத்தேன். அதைச் சீந்தவே இல்லை. ஏனெனில், சின்னதை அவர் மார்மேல் வைத்துக்கொண்டு மிகச் சன்னமாக ஒலி வரும்வகையில் கேட்டுக்கொண்டே தூங்குவார். நாளடைவில் ஆண்டெனா உடைந்துபோய் அதற்கு மின்கம்பி ஒன்றை இணைத்து, இன்னொரு முனையில் ஒரு துணி க்ளிப்பை மாட்டி, அதை ஜன்னலில் சொருகி, பாட்டிகாலத்து டெக்னாலஜியில் பாடும். அதைக் கேட்டுக்கொண்டே தூங்கிவிடுவார். ஆனால் யாராவது வந்து அதை அணைத்தால் உடனே எழுந்துவிடுவார். "நான் ஒண்ணும் தூங்கலை. பாட்டு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்" என்பார்.

"ஆமாம் இவர் விட்ட குறட்டையைக் கேட்டு அடுத்த தெரு ஆட்களுக்கு தூக்கம் போச்சு. நிறுத்தினால் எப்படித்தான் தெரிகிறதோ இந்த மனுஷனுக்கு" என்று முனகுவாள் அம்மா.

அப்பாவின் கடைசி மருத்துவமனை விஜயத்தில், அவரின் அனைத்து உள்ளுறுப்புகளும் ஒவ்வொன்றாக அவருக்குப் பணியாமல் போக, பல பெரிய ஊசிகள் குத்தப்பட்டு பாவமாகக் கிடந்தார். அப்போது அவர் பேரனுக்கு திடீரென ஞாபகம் வர "தாத்தாவுக்குப் பாட்டு போடலாமே" என்றான். உடனே நான் ICU வுக்கு ஓடிப்போய், டாக்டரிடம் மன்றாடி அனுமதி வாங்கி அவருடைய நேசமான ட்ரான்சிஸ்டரை நெஞ்சின்மேல் நிறுத்தி அவருக்குப் பிடித்த இளையராஜா பாடல்களை அவருக்கு மட்டும் கேட்கும்படி வைத்தேன். அவர் கேட்டு முறுவலித்ததுபோல் ஒரு பிரமை.



அதுவரை அப்பாவுக்கு வாழ்நாள் நீடிக்கவேண்டாம். அவர் வலியில்லாமல் போனால் போதும் என்று அறிவுபூர்வமாக யோசித்து வந்த நான், அந்தப் பாடல் கேட்டதும் கலங்கிப் போனேன். தொண்டை அடைக்கத் தள்ளாடி வெளியேறினேன். மனித உணர்வுகளில், காட்சிக்கு இல்லாத அபரிமிதமான தாக்கம் ஒலிக்கு உண்டு என்று கேள்வி. அதனால்தான் திகில் காட்சிகளில், நாம் காதைப் பொத்திக்கொள்கிறோம். இன்னும் மிகச் சிறப்பான தாக்கம் இசைக்கு. இமயமலைக் காட்சியில் அழாத நாம், இளையராஜா பாடலைக் கேட்டு கண் கலங்குகிறோம். கோமாவில் இருக்கும் பக்கத்துக்கு வீட்டுப் பாட்டி, தன் பேத்தியின் பாடலைக் கேட்டு தன்னிச்சையாகக் காலாட்டுகிறாள்.

அந்த மாலையே, நான் பயந்த அந்த ஃபோன் அழைப்பு வந்துவிட்டது. ஓடிப்போனேன். ஒரு இளம் டாக்டர், பொறுமையாக "தாத்தாவுக்கு கார்டியாக் அர்ரெஸ்ட். நாங்கள் CPR செய்தோம். ஆனால் அவர் உடம்பில் தெம்பில்லை" என்று உணர்ச்சி காட்டாமல் ஏதோவொரு பந்தயத்தில் தோற்றதுபோல் பதவிசாகச் சொன்னார். நான் உடனே உள்ளே நுழைந்து பார்த்தேன். அப்பாவின் உடலில் முரட்டுத்தனமான CPR சேதாரங்கள் இருந்தாலும், தோளுக்குமேல் அவர் அபரிமிதமான சாந்தமாக இருந்தார். உதட்டில் மோனலிசா. அவர் நெஞ்சிலமர்ந்த ட்ரான்சிஸ்டரில் அவரது இஷ்டதேவதை ஸ்வர்ணலதா மிகச் சன்னமாக ஒரு தாலாட்டுப்போல் இன்னமும் பாடிக் கொண்டிருந்தாள். அதற்காகவே காத்திருந்ததுபோல இசையுடன் இசையாகி விட்டிருந்தார் அப்பா!

கீமூ,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com