சுவாமி விவேகானந்தர்
குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் புனிதத் திருவடியின்கீழ் நரேந்திரர் ஆன்மிகப் பயிற்சியைத் தொடர்ந்தார். புதுப்புது அனுபவங்கள், தரிசனங்கள், தத்துவங்கள் கிடைத்து வந்தன. குருதேவரின் அருள் மெல்ல மெல்ல நரேந்திரரின் வாழ்வில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கியது.

நரேந்திரர், சுவாமி விவேகானந்தர் ஆனார்
குருதேவர் காசிப்பூரில் இருந்த சமயம். ஒருநாள் சீடர் மூத்தகோபால் சில காவி உடைகளையும், ருத்ராட்ச மாலைகளையும் ஒரு மூட்டையாகக் கொண்டு வந்தார். அவற்றை ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பாதத்தில் சமர்ப்பித்து, அந்தக் காவி உடைகளை சந்யாசிகளுக்குத் தானமாக அளிப்பதற்குக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினார்.

அதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர், "இங்குள்ள இளைஞர்களைவிடச் சிறந்த சந்யாசிகள் வேறு யார் இருக்கிறார்கள்?" என்று சொல்லி, அவற்றை ஆசிர்வதித்து, அங்கிருந்த நரேந்திரர் உள்ளிட்ட இளைஞர்களிடம் கையளித்தார். இவ்வாறு ராக்கால், லாட்டு, யோகின், சசி, சரத், காளி, கிரீஷ் உள்ளிட்ட பல சீடர்கள் குருதேவரின் கையாலேயே சந்யாச தீட்சை பெற்றனர். காஷாய உடை அணிந்த அவர்களுக்கு தீட்சா நாமமும் அளிக்கப்பட்டது. அதன்படி நரேந்திரர், காவியுடை அணிந்து, சுவாமி விவேகானந்தர் என்ற தீட்சா நாமம் பெற்றார்.

குருதேவரின் இந்த ஆசிர்வாதமே எதிர்காலத்தில் ராமகிருஷ்ண மடம் நிறுவிச் செயல்பட அடித்தளமானது. சீடர்கள் அனைவருக்கும் நரேந்திரரே தலைமை தாங்கி வழிநடத்த வேண்டுமென்றும், அவர்கள் இல்லறம் போன்றவற்றில் மீண்டும் திரும்பாதவாறு அவர்கள் மனத்தைப் பக்குவப்படுத்த வேண்டும் என்றும் குருதேவர் விவேகானந்தருக்குக் கட்டளையிட்டார். அதன்படியே பிற்காலத்தில் விவேகானந்தர் அவர்கள் அனைவருக்கும் நாயகராக இருந்து வழிநடத்தினார்.

அவதார புருஷரின் அறிவிப்பு
மானுடகுலத்தை உய்விக்க மண்ணுலகில் அவதரித்து நல்ல பல சீடர்களை உருவாக்கி வழிநடத்தி வந்தார் பரமஹம்சர். மகா புருஷருக்குப் புற்று நோய் கண்டது. ஓயாமல் நல்ல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த மகாஞானிக்குத் தொண்டையில் வந்தது புற்று. அவரைப் பேசாமல் இருக்கும்படியும், ஓய்வு எடுக்கும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். குருதேவர் அவற்றை லட்சியம் செய்யவில்லை. சீடர்களைக் கண்டால் பேசாமல் அவரால் இருக்க முடியவில்லை.

சிலகாலம் ஓய்வில் இருக்க வேண்டி காசிப்பூர் தோட்டப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விவேகானந்தர் உள்ளிட்ட சீடர்கள் அங்கு அவருக்கு உதவியாக இருந்தனர். வேதனையால் அவர் படும் துன்பம் அவர்களுக்கு அளவற்ற வருத்தத்தைத் தந்தது. காளியிடம் வேண்டி ஏன் இந்த நோயைக் போக்கிக்கொள்ளக் கூடாது என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். விவேகானந்தர் மட்டும் மனதுள், "இவர் உண்மையிலேயே ஒரு அவதார புருடர்தான் என்றால் ஏன் இந்த நோயைத் தாமே தீர்த்துக் கொள்ளக்கூடாது, அந்த அளவுக்கு இவருக்கு சக்தி இல்லையா என்ன?" என்று மனதுக்குள் நினைத்தார்.

சகலமும் அறிந்த குருதேவருக்கு, விவேகானந்தரின் உள்ளத்தில் எழுந்த கேள்வியா தெரியாது! அவர் சிரித்துக்கொண்டே, "நரேந்திரா! சந்தேகமே வேண்டாம். ராமனாகவும் கிருஷ்ணனாகவும் வந்தவன் எவனோ, அவனே இன்று ராமகிருஷ்ணனாக வந்திருக்கிறான். அது உண்மை!" என்று கூறினார்.

விவேகானந்தரின் உள்ளத்தில் சிறிதளவே ஒட்டியிருந்த ஐயமும் அறவே அகன்றது. குருநாதர் அவதார புருஷர்தான் என்பதையும், பிறரது கர்மவினைகளை ஏற்றுக்கொண்டதன் காரணமாகவே அவர் இவ்வாறு துன்பப்பட நேர்ந்துள்ளது என்பதையும் உணர்ந்தார். குருதேவரின் பாதத்தில் விழுந்தார்.

"எனது சக்தி அனைத்தும் பிறருக்குப் பயன்படத்தானே அன்றி சுயநலமாக எனக்கே பயன்படுத்திக்கொள்ள அல்ல" என்று சீடர்களுக்குத் தெளிவுபடுத்தினார் பரமஹம்சர்.

குருதேவரின் ஆசி
பரமஹம்சரின் அந்திம காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒருநாள்... தனியாக வந்து தன்னைச் சந்திக்குமாறு விவேகானந்தருக்குச் சொல்லியனுப்பினார். அதன்படி வந்தார் விவேகானந்தர்.

அந்த அறையில் குருதேவரும், உத்தம சீடர் விவேகானந்தரும் மட்டுமே இருந்தனர். இருவரும் தியானத்தில் மூழ்கினர்.

சற்று நேரத்தில் விவேகானந்தரைத் தம்மருகே அழைத்த குருதேவர், பரவச நிலையில் தன் கைகளை அவர் தலைமீது வைத்தார். அற்புதப் பேரொளி ஒன்று தன்னைச் சூழ்வதையும், மின்சக்தி போன்ற ஆற்றல் தன்னுள் புகுவதையும் விவேகானந்தர் உணர்ந்தார். வெகுநேரம் கழித்தே அந்தப் பரவச உணர்விலிருந்து அவரால் விடுபட முடிந்தது. அவர்முன் கண்ணீர் சொரிந்தவராய் நின்ற ராமகிருஷ்ணர், "அப்பா, இந்தப் புவியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்கென நான் பெற்றிருந்த அனைத்துச் சக்திகளையும் உனக்குக் கொடுத்துவிட்டேன். இன்று முதல் நான் ஒன்றுமே இல்லாத வெறும் பக்கிரி. இந்தச் சக்தியைக் கொண்டு, இந்த உலகம் தழைக்க நீ பாடுபடுவாயாக!" என்று கூறி ஆசிர்வதித்தார்.

அதைக் கேட்டு, கலங்கிய கண்களுடன் குருவின் பாதம் பணிந்தார் விவேகானந்தர்.



பிரம்மத்தில் கலந்தார்
அன்று ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் நாள். காலைப்பொழுது. எழுந்தது முதலே குருதேவர் சற்று பரபரப்பாக இருப்பதுபோல் சீடர்கள் உணர்ந்தனர். திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பின்னர் சரியானது. அவர் சமாதியில் மூழ்கியிருந்தார். நள்ளிரவாயிற்று. சமாதி நிலையிலிருந்து மீண்டார். அவர் "மிகவும் பசிக்கிறது!" என்றார், ஒரு கோப்பை கஞ்சியைக் கொடுத்தனர். மிகவும் சிரமப்பட்டு அருந்தினார். பின் மிகவும் களைப்பாக இருப்பதாகச் சொன்னார். "ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள், உறங்குங்கள்" என்று சொன்னார் விவேகானந்தர். குருதேவரும் 'அம்மா காளி' என்று சிலமுறை உச்சரித்த பின் படுத்துக்கொண்டார்.

நள்ளிரவு ஒரு மணி இருக்கும். குருதேவருக்கு அதிகம் வியர்த்துக் கொட்டியது. உடல் சிலிர்த்தது. பரவச நிலைக்குச் செல்வதுபோல் காணப்பட்டார். அவருடைய கண்கள் இமைக்காமல் மூக்கு நுனியையே நோக்கின. அவ்வளவுதான் மகாசமாதி அடைந்துவிட்டார். அதன்பின் உடலில் எந்தவித அசைவுமில்லை. இந்த உலகத்துக்குத் தெய்வீக அமுதூட்ட வந்த ஞானசூரியன், எங்கிருந்து உதயமானதோ அதே பேரொளியில் கலந்துவிட்டது!

ஆகஸ்டு 16ம் தேதி மாலை ஐந்து மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த குருதேவரின் உடல், சீடர்கள் புடைசூழ ஊர்வலமாக காசிப்பூர் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. சீடர்களால் பக்திப் பாடல்கள் பாடியபடி, சந்யாசிக்குரிய முறைப்படியான சடங்கு செய்யப்பட்டு எரியூட்டப்பட்டது.

இளம் சந்யாசிகள் அனைவரையும் விவேகானந்தரை நம்பியே தாம் விட்டுச் செல்வதாகவும், தனக்குப் பின் அவர்தான் சீடர்களை வழிநடத்த வேண்டும் என்றும் ராமகிருஷ்ணர் ஏற்கனவே விவேகானந்தருக்கு ஆணையிட்டிருந்தார். விவேகானந்தரும் தளராத மன உறுதியுடன் குருநாதர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்தார்.

ராமகிருஷ்ண மடம்
குருதேவரின் மறைவினால் சீடர்கள் மிகவும் வாட்டமுற்றிருந்தனர். இருக்க இடமில்லை, உண்ணச் சரியான உணவில்லை. வெறும் தரையிலும், மரத்தடியிலும் படுத்து உறங்கினர். அப்போதும் அவர்கள் மனம் இல்லறத்திற்குத் திரும்பாதவாறும், அவர்கள் ஆன்மிக சாதனைகளைத் தொடர்ந்து செய்யவும் விவேகானந்தர் பல விதங்களில் உதவியாக இருந்தார்.

குருதேவரின் சீடர்களில் ஒருவரான சுரேந்திரர், துறவிகள் தங்குவதற்காக, வராக நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார். அங்கே அவர்கள் தங்கி, தமது பணிகளைச் செய்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அது ஒரு மடம்போல் திகழ்ந்தது. அது மிகவும் பழைய கட்டடம் என்பதால், பின்னர் ஆலம் பஜாருக்கு இடம் மாறினர். அதுவே ராமகிருஷ்ண மடத்தின் தொடக்கத்திற்கு வித்திட்டது.

தேசத்தை வலம்வந்த தெய்வமகன்
விவேகானந்தர் ஒரு உண்மையான துறவியாக இருக்க விரும்பினார். காஷாய உடையுடன், இந்தியா முழுவதும் சுற்றிவர முடிவு செய்தார். பல தரப்பட்ட மக்களைச் சந்தித்து, அவர்களின் அடிப்படைப் பிரச்னைகளைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார். அதன்படி, அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் ஆசியுடன் பயணத்தைத் தொடங்கினார்.

அநேகமாகக் கால்நடையாக நடந்தும், சில சமயம் ரயிலில், வண்டிகளில் ஏறிச்சென்றும் பயணப்பட்டார் வீரத்துறவி. அவர் இவ்வாறு பயணம் மேற்கொள்ளுவதற்கு முன் சக சீடர்களிடம், "அடுத்தமுறை இங்கு நான் வரும்போது ஒரு சக்தி வாய்ந்த வெடிகுண்டைப் போல வருவேன்!" என்று கூறியிருந்தார். அது பலித்தது.

கையில் நீண்ட கோல், காவிநிறக் காஷாய ஆடை, பிக்ஷை ஏற்றுக் கொள்ள ஒரு சிறிய பாத்திரம் இவையே விவேகானந்தரின் உடைமைகள். பயணத்தில் பல மகான்களையும், யோகிகளையும், சித்த புருஷர்களையும் சந்தித்தார். அவர்களது ஆசி பெற்றார். அவர் சந்தித்த மகான்களில் மிக முக்கியமானவராக பாவ்ஹாரி பாபாவையும், மகான் த்ரைலிங்க சுவாமிகளையும் கூறலாம்.

சில அனுபவங்கள்
விவேகானந்தர் தனது யாத்திரையில் பல சமஸ்தானங்களுக்குச் சென்றார். வடநாடு மட்டுமல்லாமல் தென்னாட்டிலும் சென்னை, ராமேஸ்வரம், திருவிதாங்கூர் எல்லாம் பயணித்தார்.

இந்தியாவில் நிலவிய கொடுமைகளான ஏழைகளை ஏய்த்தல், சாதிக் கொடுமை, சுரண்டல், வறுமை, செல்வந்தரின் ஆதிக்கம், அதிகார வெறி அனைத்தும் அவருக்கு மிகுந்த மன வேதனையைத் தந்தன. இந்தியா அறியாமை, மூடநம்பிக்கை, ஏழைமை என்னும் மூன்று அரக்கர்களின் கோரப்பிடியில் சிக்கித் தவிப்பதை உணர்ந்தார். இந்த மக்களுக்குத் தத்துவங்களைப் போதிப்பதைவிட வாழ்வியல் ஆதாரங்களைச் செம்மைப்படுத்தித் தருவதே உடனடித் தேவை என்பதாக அறிந்தார். "மதம் என்பது வெறும் காலி வயிற்றிற்கு இல்லை" என்று குருதேவரின் கூற்றை அனுபவரீதியாக உணர்ந்தார். அது மட்டுமல்ல, அதுவரை தான் பார்த்த வாழ்க்கைக்கும் யதார்த்த வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாட்டை அவரால் நன்கு உணர்ந்துகொள்ள முடிந்தது. தான் கற்ற கல்வி, தனது பரந்துபட்ட அறிவு, தனது அனுபவம் எல்ல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றியது.

துன்பத்தில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்குச் சேவை செய்வதும், அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்த முயற்சிப்பதும்தான், உண்மையான மதமாகவும் ஆன்மிகமாகவும் இருக்கமுடியுமே அன்றி, தத்துவ உபதேசங்களாலோ, சடங்குகளாலோ எந்தப் பயனும் விளைந்துவிடாது என்பது புரிந்தது. "மதம் என்பதன் ரகசியம் நூல்களில் உள்ள தத்துவங்களில் அல்ல. மாறாக, தீவிரமான செயலாற்றலில்தான் உள்ளது. நல்லவராய் இருப்பது. நல்லது செய்வது. நல்லதே நினைப்பது. மதம் பற்றிய எல்லாமே இதுதான்!" என்ற உண்மையை அவர் உணர்ந்தார்.

தென்னாட்டுக்கு வந்தவர், கன்யாகுமரி சென்று குமரி அம்மனை வணங்கினார். கடற்கரைக்குச் சென்றார். சற்றுத் தொலைவில் இருந்த இரண்டு கூர்மையான அழகிய பாறைகளைக் கண்டதும் அவருக்கு அங்கு சென்று தியானம் செய்யும் ஆவல் ஏற்பட்டது. கடலில் குதித்து நீந்தி அந்த இடத்தை அடைந்தார். அங்கு அமர்ந்து தியானித்தார். அது அவருக்கு ஓர் அற்புத அனுபவமாக இருந்தது. சொல்லொணாப் பரவசநிலை ஏற்பட்டது.

தியானத்தில் அவருக்குப் பல்வேறு உண்மைகள் உணர்த்தப்பட்டன. இந்தியாவின் தாழ்வுற்ற நிலைமைக்கு மக்களின் அறியாமை, அதிகாரங்களில் உள்ளவர்களின் சுரண்டல், தேசப்பற்றின்மை, சுயநலம் போன்ற பல காரணிகள் இருப்பதை உணர்ந்தார். அதனைப் போக்குவதற்கு ஒருமித்த தன்னலமற்ற சேவை உணர்வும், உழைப்பும் அவசியம் என்பதையும், அப்போதுதான் இந்தியா இழந்த ஈடு இணையற்ற பெருமையை மீண்டும் அடையும் என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார்.

"ஆயாது வரதாதேவி த்ரியக்ஷரே பிரம்மவாதினி..." என்று தொடங்கும் காயத்ரி தோத்திரம் அவர் செவியில் ஒரு ரிஷியின் குரலாக ஒலித்தது. தான் யார், இந்தியாவிற்காகச் செய்ய வேண்டிய பணி என்ன என்பதன் உட்காட்சி தியானத்தில் கிடைத்தது. அதற்காகவே உழைப்பது, வாழ்வையே இந்தியாவின் உயர்வுக்காக அர்ப்பணிப்பது என்று சங்கல்பித்துக் கொண்டார்.

(தொடரும்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com