தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது காரமடை ரங்கநாதர் ஆலயம். இறைவன் திருநாமம் ரங்கநாதசுவாமி. இறைவி ரங்கநாயகி. உற்சவர் வெங்கடேசப் பெருமாள். தலவிருட்சம் காரை மரம். தீர்த்தங்கள், பிரம்ம, கருட, அஷ்ட தீர்த்தங்கள். பாஞ்சராத்ர முறைப்படி பூஜை நடைபெறுகிறது. ஸ்ரீராமானுஜர் மேலக்கோட்டை செல்லும் வழியில் ஸ்ரீரங்கநாதரைத் தரிசனம் செய்து சென்றதாகக் கூறப்படுகிறது.
கோவில் 11வது நூற்றாண்டில் சோழ மன்னரால் கட்டப்பட்டது. திருமலை நாயக்கர் காலத்தில் கோவில் விஸ்தரிக்கப்பட்டது. ஜெயசாமராஜ உடையார் காலத்தில் உள்மண்டபங்கள் கட்டப்பட்டன. பிற்காலத்தில் பிரிட்டிஷ் ஜெனரல் ஒருவர் கோவிலைப் பிரித்து ரயில் பாதை அமைக்க முயற்சித்தார். கிராமத்து மக்கள் இதற்குத் தெய்வத்தின் தலையீட்டை வேண்டினர். விஷ்ணு, பிரிட்டிஷ் ஜெனரலின் கனவில் தோன்றவே அவர் முடிவை மாற்றிக்கொண்டு கோவில் உற்சவத்தின்போது வாகனமாக உபயோகிக்கக் குதிரையைப் பரிசாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. ராமானுஜர் பதினோராம் நூற்றாண்டில் இத்தலம் சென்று பெருமாளைத் தரிசித்ததாகச் சொல்லப்படுகிறது.
ஒருசமயம் கருடாழ்வார், திருமால்-மகாலட்சுமியின் திருமணக்கோலம் காண விரும்பியதால், அவரது ஆசையைப் பூர்த்திசெய்யப் பெருமாள் பூலோகத்தில், இத்தலத்தில் திருமணக் கோலம் காட்டியருளினாராம். இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றினார். பிற்காலத்தில் இப்பகுதி காரை மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அவ்வூர் இடையன் ஒருவன் பசுக்களை மேய்த்து வந்தான். ஒரு பசு மட்டும் பால் கொடுக்காமல் இருந்தது. அதனைக் கண்காணித்த போது, ஒருநாள் அப்பசு காரை மரத்தின் அடியில் பால் சொரிந்ததைக் கண்டான். அங்கு சென்று புதரை வெட்டியபோது ரத்தம் பீறிட்டது. தகவல் தெரிந்த ஊர் மக்கள் அங்கு வந்தனர். அசரீரி எழுந்து, சுவாமி சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளதாகக் கூறியது. பின்னர் அங்கு கோவில் கட்டப்பட்டது. மூலஸ்தானத்தில் சுவாமி சதுரவடிவில் சுயம்பு மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். மேனியில் வெட்டுப்பட்ட தழும்பு உள்ளது.
இத்தலத்தில் சுவாமி கீழேயும், மேலே மலையில் ரங்கநாயகித் நாயாரும் காட்சி தருகின்றனர். தாயாரை 'பெட்டத்தம்மன்' என்று இங்குள்ளோர் அழைக்கின்றனர். இக்கோவிலிலிருந்து அர்ச்சகர் மலைக்கோவிலுக்குச் சென்று கும்பத்தில் தாயாரை ஆவாஹனம் செய்து கோவிலுக்குக் கொண்டு வருகிறார். அவ்வமயம் பெருமாள் சன்னிதியிலிருந்து ராமபாணத்தை வெளியில் கொண்டுசென்று தாயாரை வரவேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் கலசத்தை மூலஸ்தானத்தில் வைத்துப் பூஜிக்கின்றனர். மறுநாள் அதிகாலையில் திருக்கல்யாணம் நடக்கிறது. ரங்கநாதருக்கு வலப்புறத்தில் ரங்கநாயகிக்குப் பிற்காலத்தில் தனிச்சன்னிதி கட்டப்பட்டது.
திருமணக்கோலம் காட்டியருளல்
கோவில் ஏழு ஏக்கர் பரப்பளவில் சுற்றிலும் சலவைக்கல் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. ராஜகோபுரம் ஏழடுக்கு விமானத்தை உடையது. நுழைவாயில் கோபுரம் ஏழு கலசங்களைக் கொண்டது. 1944ல் வடக்குக் கோபுரமும், 2013ல் கிழக்குக் கோபுரமும் கட்டப்பட்டன. துவாரபாலகர்கள் அர்த்தமண்டபத்தின் இருபுறமும் காட்சி தருகின்றனர். சௌந்தரவல்லித் தாயார் சன்னிதி கிழக்கு வாயிலில் உள்ளது. கோயிலின் முன்புறம் மகாமண்டபத்தில் வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள், ராமானுஜர் காட்சியளிக்கின்றனர். ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோர் தனிச் சன்னிதிகளில் உள்ளனர். பிரகாரத்தில் சந்தான கிருஷ்ணர், பரவாசுதேவர், நாகர், ராமானுஜர் சன்னிதிகள் உள்ளன. சுவாமி கோஷ்டத்தில் உள்ள வேணுகோபாலர், ராமர் மற்றும் கோபிகைப்பெண் சிலைகள் பார்க்க வெகு அழகு. சுவாமி சன்னிதியின் இடப்புறம் ஆஞ்சநேயர் சிலை பெரிய சதுரக்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் உற்சவர் மூலஸ்தானத்திற்குச் செல்வதில்லை. மூலவரான சுயம்பு ரங்கநாதர் சிறிய மூர்த்தியாக இருக்கிறார். உற்சவரோ அளவில் பெரியவர். இவரை மூலஸ்தானத்தில் வைத்தால் மூலவரைத் தரிசிக்க முடியாது என்பதால் உற்சவரை முன்மண்டபத்திலேயே வைக்கின்றனர். இங்கே வழக்கமான சடாரி சேவைக்குப் பதிலாக ராம பாணத்தால் ஆசீர்வாதம் செய்யப்படுகிறது. ஆயுதபூஜையன்று மட்டும் இந்த ராமபாணத்திற்கு விசேஷமாகப் பூஜை செய்யப்படுகிறது.
மாசி மாதம் பிரம்மோற்சவம், ராமானுஜர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி விழா யாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பிரம்மோற்சவதின்போது மக நட்சத்திரத்தில் சுவாமி தேரில் எழுந்தருளுகின்றார். சுவாமி நிலைக்கு வந்ததும் பக்தர்கள் தேன், பழம், சர்க்கரை, கற்கண்டு, தேங்காய் கலந்த பிரசாதத்தை 'ரங்கன் வருகிறான்', 'கோவிந்தன் வருகிறான்' எனச் சொல்லிக்கொண்டு ஒருவருக்கொருவர் கொடுக்கின்றனர். இதனை 'கவாள சேவை' என்கிறார்கள். அப்போது சுவாமியை வணங்கும் 'பந்தசேவை' என்பதும் நடைபெறுகிறது.
குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க, செல்வம் பெருக பக்தர்கள் ரங்கநாதரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறிய பின் சுவாமிக்குப் பாலபிஷேகம் செய்கின்றனர். கோயிலுக்குச் சிலர் பசுவைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
சீதா துரைராஜ், சான் ஹோஸே, கலிஃபோர்னியா |