மகாபாரதத்தில் பீமன் அனுமனைச் சந்தித்த நிகழ்ச்சியையும் அதில் ராமரைப்பற்றி அனுமன் குறிப்பிட்டதையும் பார்த்தோம். இப்போது ராமாயணத்துக்குத் திரும்புவோம். அனுமன், தான் பிறந்து வளர்ந்த, ராம காரியத்தில் உதவிய விவரங்களைச் சொல்லிக்கொண்டே வரும்போது, பீமனுக்கு ஓர் ஆவல் பெருக்கெடுக்கிறது. "நீங்கள் கடல் தாண்டிய ஒப்பற்ற பெருவடிவத்தைப் பார்க்க விரும்புகிறேன். அப்படிப் பார்ப்பதன் மூலமாக நான் திருப்தியடைவேன். உங்களுடைய வார்த்தைகளையும் என்னால் அப்போதுதான் நம்பமுடியும்" என்றான் பீமன். 'நீங்கள் கடல் தாண்டியபோது எடுத்த பேருருவைக் காட்டினால்தான் உங்களை நம்ப முடியும்' என்கிற, சற்றே தாக்கும்படியான அந்தச் சொற்களை அனுமன் பொருட்படுத்தவில்லை. புன்னகைத்தார்.
"அந்த உருவமானது உன்னாலும் மற்ற எவனாலும் பார்க்க முடியாதது. ஏனெனில் அப்போது காலநிலைமை வேறாக இருந்தது. அது இப்பொழுது இல்லை. நரஸ்ரேஷ்டனே! ஆகையால் இப்பொழுது என்னுடைய அந்த ரூபமானது பார்க்க முடியாதது. நீ திரும்பிப் போகலாம்" என்று மறுத்தார். (வன பர்வம், தீர்த்தயாத்ரா பர்வம், அத். 151, பக். 542) 'அது த்ரேதா யுகம்; இப்போது துவாபர யுகம். உன்னால் அந்த உருவத்தைப் பார்க்க முடியாது' என்று அனுமன் மறுத்தாலும், பீமன் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் அனுமன், தான் கடல் தாண்டிய அந்தப் பெருவடிவை எடுத்தார். இருக்க இருக்க விரிவடைந்துகொண்டே போன அந்த வடிவத்தை ஒரு கட்டத்துக்குமேல் பீமனால் பார்க்க முடியவில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டான். "ஹனுமான் பீமஸேனனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு, குற்றமற்றவனே! இப்பொழுது எனது ரூபத்தை இவ்வளவு மட்டுமே நீ பார்க்கச் சக்தியுள்ளவன். இதைக்காட்டிலும் அதிகமாக என் மனம் விரும்பிய அளவுக்கு நான் வளருவேன். பீம! பகைவரினிடையில் (என்னுடைய) மூர்த்தியானது சக்தியினால் அதிகமாக வளர்கிறது" என்றார். (இடம், பக்கம் மேற்படியே) (இந்தப் பகுதியைக் கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்த்திருப்பதை இங்கே காண்க. "என் உடல் பகைவர்களுக்கு நடுவிலிருக்கும்போது அளவுக்குள் அகப்படாமல் வளரும். நீயோ என் அன்புக்குரிய சகோதரன். உனக்கு எதிரில் இவ்வளவுதான் வளரும். அதற்குமேல், உன்னால் இந்த அளவையே பார்க்க முடியவில்லை" என்று அன்பின் மிகுதியால் அனுமன் சொன்னார். அதன்பிறகு, திரெளபதி விரும்பிய சௌகந்திக மலர்கள் இருக்கும் இடத்துக்கு வழி சொன்னார். "அவை குபேரனுக்குச் சொந்தமான தோட்டத்தில் மலரும் பொன்மயமான பூக்கள். அவசரப்பட்டு நீயே அவற்றைப் பறிக்கவேண்டும் என்று இறங்காதே" என்றெல்லாம் பீமனுக்கு அறிவுரை சொன்னார். குபேரனுடைய தோட்டக் காவல்காரர்கள் தடுப்பார்கள், பீமன் அவர்களோடு போரிடுவான் என்றெல்லாம் எண்ணி இப்படிச் சொன்னார்.
பிறகு, விந்திய மலையை ஒத்து வளர்ந்திருக்கிற தன் உருவத்தைச் சுருக்கிக்கொண்டார். பீமனைத் தழுவினார். பீமனுக்கு இருந்த அத்தனை சிரமங்களையும் அந்தத் தழுவல் போக்கியது. பீமனைத் தழுவிக்கொண்ட அனுமனுடைய கண்களில் அன்பின் மிகுதியால் நீர் பெருகியது. குரல் தழுதழுத்தது. "நீ திரும்பிப் போ. எப்போது தேவைப்படுகிறதோ அப்போது என்னை நினை" என்று விடைகொடுத்தார். "உன்னைத் தழுவியதால் நான் மானிட தேகத்தின் ஸ்பரிசத்தை அடைந்து, ராமபிரானைத் தீண்டுவதாக உணர்ந்தேன்" என்றார். தம்பியாக இருக்கும் உனக்கு வேண்டிய வரங்களைக் கேள். நீ எண்ணினால் நான் இப்போதே ஹஸ்தினாபுரத்துக்குச் சென்று அந்த திருதராஷ்டிர புத்திரர்களைக் கொல்கிறேன். துரியோதனனைக் கட்டித் தூக்கி வருகிறேன்" என்றார். இந்தப் பகுதிக்கான கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பை இங்கே பார்க்கலாம்.
"நாதன் இல்லாமல் இருந்த நாங்கள் உங்களைச் சரணடைந்து பெரும் பலத்தை அடைந்தோம். உங்களுடைய துணையோடு பகைவர்களை வெல்வோம்" என்று பீமன் மறுமொழி சொன்னான். "நீ போரில் சிம்மநாதம் செய்கையில், அந்தக் குரலைக் கேட்டுப் பகைவர்கள் உயிர் துறக்கும்படியாக விருத்தியடையச் செய்வேன். அர்ஜுனனுடைய தேர்க் கொடியிலே இருந்து உங்களுக்குத் துணையிருப்பேன்" என்றெல்லாம் பாண்டவர்களுக்கு வரம் தந்தார்.
அர்ஜுனன் காண்டவ தகனம் செய்த அக்னியிடம் தனக்கான வில்லையும் அம்பறாத் தூணிகளையும் தேரையும் கிருஷ்ணனுக்குச் சக்கரப் படையையும் கேட்டான். அப்போது அக்னி, வருணனை வரவழைத்து அர்ஜுனன் கேட்டவற்றையெல்லாம் கொடுக்கச் சொன்னான். அவ்வாறு கொடுத்த காலத்திலேயே அந்தத் தேரில் வானரக்கொடி பறந்துகொண்டிருந்தது. "புகையைக் கொடியாகக் கொண்ட அந்தத் தேவன் (அக்னி) நீரை ஆள்பவனை (வருணனை) மரியாதையுடன் வரவேற்றான். அந்த நான்காவது லோகபாலன் (அக்னி), அந்த நிலைத்த தேவர்களுக்குத் தேவனிடம் (வருணனிடம்) "மன்னன் சோமனிடம் பெற்ற (காண்டீவம் என்ற) வில்லையும் , அம்பறாத்தூணியையும் குரங்குக்கொடி கொண்ட ரதத்தையும் தாமதமில்லாமல் எனக்குக் கொடுப்பாயாக. (4) பார்த்தன் (அர்ஜுனன்) காண்டீவத்தைக் கொண்டும், வாசுதேவன் சக்கரத்தைக் கொண்டும் பெரிய சாதனைகளைச் சாதிப்பார்கள். ஆகவே, அவை இரண்டையும் இன்று என்னிடம் கொடுப்பாயாக" என்றான் (அக்னி)" இது ஆதி பர்வம், காண்டவதாஹ பர்வம் அத். 250ல் சொல்லப்படுவது. அந்த வானரக்கொடி, இந்த நிமிஷம் முதலாக அனுமக்கொடியாக அறியப்படுகிறது. அர்ஜுனனுடைய தேரில் ஏற்கெனவே பறந்துகொண்டிருந்த அனுமக்கொடியில் தானே பிரவேசித்து பகைவர்கள் கலங்கும்படியாகப் பெருங்குரலை எழுப்புவேன் என்கிறார் அனுமன்.
இப்படி வரங்களையெல்லாம் தந்தபின்னர் அங்கிருந்து அனுமன் மறைந்தார். பீமன், பாஞ்சாலி பறித்துக்கொண்டு வரச்சொன்ன சௌகந்திக புஷ்பங்களைத் தேடி, குபேரனுடைய நந்தவனத்துக்கு வெளியே ஓடிக்கொண்டிருக்கும் ஓடையை அடைந்தான். அங்கே பொன்னிறத்தில் மலர்ந்திருந்த ஆயிரக்கணக்கான சௌகந்திக மலர்களைக் கண்டான். கொஞ்சம் நீரருந்திவிட்டு, மலர்களைப் பறிக்கலாம் என்று அந்த ஓடையில் இறங்கினான். மான்தோல் அணிந்து, வில்லையும் வாளையும் ஏந்திக்கொண்டு ஒரு மனிதன் தங்களுடைய எல்லையை ஒட்டிய ஓடையில் நீர் அருந்துவதைக் கண்ட குபேரனின் காவல்காரர்களான குரோதவாசர்கள் ஓடிவந்து "நீ யார்" என்று பீமனை விசாரித்தார்கள்.
காற்றிலடித்துக் கொண்டுவந்த சௌகந்திக மலர் தாங்கள் இருந்த இடத்தில் வந்து விழுந்ததையும், திரெளபதி அந்த மலரின்மீது ஆசைப்பட்டதையும், தான் வாயு புத்திரனான பீமன் என்பதையும், தர்மபுத்திரரின் தம்பி என்பதையும் அவர்களுக்குப் பீமன் எடுத்துச் சொன்னான். "இது குபேரனுக்குச் சொந்தமான இடம். இங்கே மானிடர்கள் வரக்கூடாது. மலர் வேண்டுமென்றால் குபேரனிடம் அனுமதி பெறவேண்டும்" என்று கூறி குரோதவாசர்கள் அவனைத் தடுத்தார்கள்.
"குபேரனை இங்கே பார்க்க முடியவில்லை. அப்படியே பார்க்க முடிந்தாலும், நான் இந்த மலர்களுக்காக அவனை யாசிக்க மாட்டேன். நான் க்ஷத்திரியன். இந்த ஓடை குபேரனால் உண்டாக்கப்பட்டதன்று" என்று சொல்லி அந்தக் காவல்காரர்களுடன் போர் தொடுத்தான். நூற்றுக்கணக்கான காவலர்கள் அந்தப் போரில் மடிந்தனர். ஒரு மனிதன் தங்களை இப்படிக் கொன்று குவிப்பதைக் கண்டு அஞ்சிய குரோதவாசர்கள் குபேரனிடத்தில் ஓடிப்போய் நடந்தவற்றைத் தெரிவித்தார்கள். "பாஞ்சாலிக்காக இந்த மலர்களை பீமன் பறிக்க வந்திருப்பதை நான் அறிவேன். அவனுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு பறித்துக்கொள்ளட்டும். அவனைத் தடுக்காதீர்கள்" என்று குபேரன் சிரித்தபடி சொல்லிவிட்டான்.
பீமன் இங்கே மலர்களைப் பறித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் அங்கே தர்மபுத்திரருக்குப் பல துர்நிமித்தங்கள் உண்டாயின. பீமன் அங்கே இல்லாததை அப்போதுதான் கவனித்த அவர், பாஞ்சாலியிடத்தில் விசாரித்தார். பீமன் சௌகந்திக மலர்களைப் பறித்துவரச் சென்றிருப்பதைப் பாஞ்சாலி தெரிவித்தாள். உடனே யுதிஷ்டிரரும் நகுல சகதேவர்களும் கடோத்கசன் துணையோடு பீமன் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கே யட்சர்களான குரோதவாசர்கள் நூற்றுக்கணக்கில் மடிந்துகிடப்பதைப் பார்த்த தருமபுத்திரர், நடந்ததைப் பீமனிடம் விசாரித்து அறிந்துகொண்டார். "தேவர்களுடைய பகையைத் தேடிக்கொள்ளாதே. இனி இப்படிச் செய்யாதே" என்று பீமனை எச்சரித்தார். குபேரனுடைய மாளிகை அருகில்தான் இருக்கிறது என்று தெரிந்ததும், போய் குபேரனை தரிசிக்க விரும்பினார். அப்போது, "குபேரனுடைய இடத்துக்குச் செல்லமுடியாது. நீங்கள் அனைவரும் பதரிகாசிரமம் திரும்பி அங்கே ஆர்ஷ்டிஷேணருடைய ஆசிரமத்துக்குச் செல்லுங்கள்" என்று அசரீரி எழுந்தது. அதன்படி பாண்டவர் நால்வரும் மீண்டும் பதரிகாச்ரமத்துக்குத் திரும்பி, அர்ஜுனனுடைய வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
பாண்டவர்களின் வனவாசம் தொடங்கி ஆறு ஆண்டுகள் முடியப் போகின்றன. அர்ஜுனன் திரும்பி வந்ததும் அவனுடன் நான்காண்டுகள் வெகுவேகமாகக் கழியப் போகின்றன. பதினொன்று, பன்னிரண்டாம் ஆண்டுகளில் துரியோதனன் பாண்டவர்களுடைய வனவாசத்துக்கு இடையே புகுந்து பலவிதமான தொல்லைகளைக் கொடுக்க நினைத்து, பலவிதமான சிக்கல்களை உண்டாக்கிக் கொள்கிறான். எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய், மிகச் சுருக்கமாகப் பார்ப்போம். (தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |