இனிப்பு நீரின் மர்மம்
மதிய உணவு மணி அடித்தது. சில மாணவர்கள் தடதடவென்று வகுப்பறையிலிருந்து ஓடி வந்தார்கள். சிலர் மெதுவாகப் பேசிக்கொண்டே வந்தார்கள். சிலர் தமது சாமான்களை அழகாக எடுத்து வைத்துக்கொண்டார்கள். அந்த வேளையில் அதைப் பார்க்கவே அழகாக இருந்தது.

அருணின் வகுப்பறை மூடியே இருந்தது. யாரும் வெளியே வரவில்லை. மிஸ் டிம்பர் தனது வகுப்பு மாணவர்களை உயர்மட்டத்தில் வைத்திருந்தார். அவர்களை ஒழுக்கத்தோடு நடக்குமாறு கேட்டுக்கொள்வார்.

மெதுவாக அருணின் வகுப்பறைக் கதவு திறந்தது. மிஸ் டிம்பர் கதவைத் திறந்தபடி வெளியே வரும் மாணவர்களோடு பேசினார். சிலர் அவர் சொல்வதைக் கேட்டனர். சிலர் கேட்டும் கேட்காதது போல கடந்து போனார்கள். பெரும்பாலான மாணவர்களுக்குப் பசி வேகம். எப்படா சாப்பாட்டு டப்பாவைத் திறக்கலாம் என்ற அவசரம்.

அருண் வெளியே வரும்போது அவனோடு நண்பன் சாமும் வந்தான்.

"அருண், நம்ம டீச்சர் மிஸ் டிம்பர் ரொம்ப மோசம். பாரேன் மதிய உணவு மணி அடிச்சப்புறமும் வெளியே விடலை பாரு. எனக்கு வயத்துல எலி குடையுறமாதிரி இருக்கு. எப்படா சாப்பிடப் போறோம்னு இருக்கேன்" என்று சொல்லிக்கொண்டே சாம் நடந்தான்.

"என்ன... வயத்துல எலி குடையுதா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டான் அருண்.

"ஆமாம், பெரிய எலி. பெருச்சாளி."

"நல்லா ஜோக் அடிக்கிற சாம்."

"சாப்பிடற எடத்துல பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு சாம் தனது சாப்பாட்டுப் பையோடு விரைந்தான்.

அருண் கொக்கியில் மாட்டியிருந்த தனது பைக்கட்டிலிருந்து சாப்பாட்டுப் பையை எடுத்தான். உள்ளே எதையோ தேடினான். அவன் தேடியது புத்தம் புதிய தண்ணீர் பாட்டிலை. அதைக் காணோம். பையைப் புரட்டிப் புரட்டி தேடினான். தண்ணீர் பாட்டில் அகப்படவில்லை. அதை வீட்டில் விட்டுவிட்டு வந்ததை உணர்ந்தான். அருண் புதிய தண்ணீர் பாட்டிலைக் காட்டிப் பெருமை அடித்துக்கொள்ள நினைத்திருந்தான். அது லேட்டஸ்ட் டிசைன் தண்ணீர் பாட்டில்.

ஏமாற்றத்தோடு அருண் சாப்பாட்டு டப்பாவை எடுத்துக்கொண்டு டைனிங் ஏரியாவுக்கு நடந்தான். அங்கே மாணவர்கள் பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அருணைப் பார்த்ததும் சாம் தன்னருகே வருமாறு சைகை காட்டினான். அருண் சாரா எங்கே என்று நோட்டம் விட்டான். அவளருகில் போய் உட்கார நினைத்தான். அவளோ, வழக்கம்போல ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு புத்தகத்தில் மூழ்கி இருந்தாள். அதுவுமன்றி, எங்கே சாரா தனது தண்ணீர் பாட்டில் பற்றிக் கேட்பாளோ என்று பயம் வேறு. பேசாமல் சாம் அருகிலேயே போய் உட்கார்ந்தான் அருண்.

அருணைப் பார்த்ததும் சாம் உற்சாகமானான். அருணிடம் தண்ணீர் பாட்டில் இல்லாததைப் பார்த்து சாம் "அருண், எங்கடா உன்னோட தண்ணி பாட்டில்? அது இல்லாம சாப்பிட மாட்டயே. என்னாச்சு இன்னைக்கு?" என்றான்.

"வீட்டுல விட்டுட்டு வந்திட்டேன்" என்றான் அருண்.

"என்ன! தண்ணீர் பாட்டில் கொண்டு வரலையா? உங்கம்மாவுக்குத் தெரியுமா? தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமில்லை" என்று அருணைச் சீண்டினான் சாம். நண்பர்கள் அனைவருக்கும் அருணின் அம்மா கீதாவைப்பற்றி நன்றாகத் தெரியும்.

சாம் அதோடு சும்மா இல்லாமல், சத்தமாக, "நண்பர்களே! நம்ம அருண் மிகவும் தைரியசாலிதான். இன்னிக்கு அவன் தண்ணீர் பாட்டில் கொண்டுவரலை. இது அவங்க அம்மாவுக்கு இன்னும் தெரியாது" என்று அறிவித்தான்.

மற்ற மாணவர்களும் கிண்டலில் சேர்ந்துகொண்டார்கள்.

"உண்மையாவா?"

"நம்ப அருணா?"

விதவிதமான ஆச்சரியக் கேள்விகள். அதைக் கேட்டதும் சாரா புத்தகத்தை விட்டுவிட்டு அருணருகே வந்தாள். அருணுக்கு சாராவும் அங்கு வந்தவுடன், அவ்வளவுதான் தன்னை ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்று எண்ணினான்.

"சாம், உண்மையாவா சொல்ற?" என்று கேட்டதோடு சாரா. "Really a brave kid!" என்று கிண்டலடித்தாள். "அதான், பாட்டிலைக் காட்டச் சொன்னப்ப ஓடிப் போயிட்டயோ?"

"Big deal. நான் இன்னிக்கு நம்ப பள்ளிக்கூட ஃபவுண்டன்ல இருந்து தண்ணி குடிச்சுக்கறேன். இதுல என்ன இருக்கு!" என்றான் அருண்.

"என்ன! மிஸஸ் மேகநாத் பையன், வாட்டர் ஃபவுண்டன்லயா? அது எப்படி?" என்று சாம் உசுப்பேத்தினான்.

அருணுக்கு நண்பர்களின் கிண்டல் நன்றாகவே புரிந்தது. அவர்கள் அனைவரும் அம்மாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துதான் நக்கலடிக்கிறார்கள். அருண் ஒன்றுமே சொல்லவில்லை. அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவை நினைத்து பயம் வந்தது.

"டேய், என் அம்மா என்னை ஒரு வழி பண்ணிடப் போறாங்க நான் வீட்டுக்கு போன உடனேயே" என்றான் அருண்.

சாம் "அருண், எதுக்கு, தண்ணீர் பாட்டில் கொண்டு வராததாலயா? அச்சச்சோ!" என்று கவலைப் படுவது போல பாவலா செய்தான்.

சுற்றியிருந்த மாணவர்கள் கொல்லென்று சிரித்தனர்.

"சாம், நாளைக்கு அருணோட அம்மா அவனை ஒரு பெரிய தண்ணீர் பாட்டிலை முதுகுல கட்டி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப் போறாங்க பாரு" என்று சாராவும் சேர்ந்து கேலி செய்தாள்.

அருண் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மதிய உணவு நேரம் முடிய சில நிமிடங்களே பாக்கி இருந்தது. அவன் சாப்பிட்டு முடிக்கும் முன்னரே மணி அடித்தது. வீட்டில் இன்றைக்கு அம்மாவிடமிருந்து செம டோஸ்தான் என்று நினைத்தான். அது அவன் பயத்தைக் கூட்டியது.

ஒன்றும் ஓடவில்லை. அரக்கப்பரக்க வாயில் சாப்பாட்டை மென்றபடியே, பையை எடுத்துக்கொண்டு வகுப்பறையைப் பார்த்து ஓடினான். ஓடும்பொழுது விக்கல் எடுத்தது.

பட்டென்று வழியிலிருந்த வாட்டர் ஃபவுண்டனில் தண்ணீர் குடித்தான். விக்கல் நின்றது, தாகமும் தீர்ந்தது. உதட்டை நாக்கால் நக்கிக்கொண்டே, "வாவ், தண்ணி திகட்டுதே!’ என்று அதிசயப்பட்டு, சொல்லிக்கொண்டே ஓடினான்.

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com