அன்புள்ள சிநேகிதியே, எனக்கு உங்களிடம் ஒரு கேள்வி இருக்கிறது. அதற்கு பதிலை தென்றலில் 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியில் தெளிவுபடுத்தலாம்.
திருமண வயதில் இருக்கும் பிள்ளைகள்/பெண்களை எப்படி கையாள்வது?
எங்களுக்கு ஒரு பெண், ஒரு பையன். இருவருக்கும் 30 வயதுக்கு மேல் ஆகிறது. நல்ல நிலையில் இருக்கிறார்கள். திருமணம் ஆகவில்லை. ஆனால், அந்தப் பேச்சை எடுப்பதற்கே நேரம், காலம், வெப்பநிலை எல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது. அவர்களும் தாங்களாகப் பார்த்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் வேலையின் அழுத்தம், வெளியில் போய்ப் பழகி தாங்களாக ஒரு வாழ்க்கைத் துணையைப் பார்த்துக்கொள்ள நேரம் கிடைப்பதில்லை. எங்களையும் செய்ய விடுவதில்லை.
எங்கள் காலத்தில் நண்பரோ, உறவினரோ இரு குடும்பங்களையும் இணைத்துப் பேச வைப்பார்கள். இப்போது அந்த வழக்கமெல்லாம் மாறிப் போய்விட்டது. யாருக்கும் நேரமும் இருப்பதில்லை, பிறர் விஷயத்தில் அதிகம் தலையிடவும் விரும்புவதில்லை. ஒரு பொறுப்புள்ள தந்தையாக இந்த விஷயத்தில் நான் எந்த அளவுக்குத் தலையிட முடியும், அதை எப்படிச் செய்யவேண்டும் என்பதில் எனக்கு ஒரு க்ளூவும் இல்லை.
உங்கள் உதவிக்கு நன்றி.
இப்படிக்கு, ...........
அன்புள்ள சிநேகிதிரே ஒரு தந்தையாக நீங்கள் இருக்கும் மனநிலை இந்தப் பகுதியைப் படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் புரியும். இதே நிலையில் இருக்கும் மற்றப் பெற்றோர்கள், இதைக் கடந்துவிட்ட பெற்றோர்கள், இன்னும் விரைவில் இந்த நிலையை வந்தடையப் போகிறவர்கள் என்று எல்லாருக்குமே ஒரு புரிதல் இருக்கும்.
மத, இன, நாடு, மொழி, கலாசாரத்திற்கு அப்பாற்பட்டு குடும்பக் கலாசாரம், தனிமனித கலாசாரம் என்றும் இருக்கிறது. நாம் சொல்படி கேட்டு பயம், மரியாதை, அன்பு, பாசம் என்று நம்மையே சுற்றி வாழ்ந்த குழந்தைகளாக நாம் இன்றும் அவர்களை நினைக்கத்தான் ஆசைப்படுகிறோம். ஒவ்வொரு பருவக் கட்டத்திலும் அவர்கள் சிந்தனைப் போக்கும், நம்மைச் சார்ந்திருக்கும் நிலைமையும் விலகிப் போவதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். கலாசாரச் சூழலில் இருந்து தனிமனித கலாசாரத்தின் ஆளுமைக்குள் அவர்கள் சென்றுவிட்டார்கள். நாம் இப்போது அவர்களுடைய சிந்தனைக்கு மரியாதை கொடுக்கும் நிலையில் இருக்கிறோம்.
அதுவும் திருமணம் என்பது ஒருவர் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான சிந்தனை நோக்கு. திருமண வயதிலிருக்கும் ஒவ்வொரு மகனும்/மகளும் தனது கலாசாரத்தை முன்வைத்து வாழ்க்கைத் துணையாக ஓர் உருவத்தைக் கற்பனை செய்து கொள்வார்கள். அவர்களுக்காகப் பெற்றோர்களாகிய நாம் வேறு எதையெதையோ சிந்தித்து வைத்துக் கொண்டிருப்போம். அது நேர்மாறாக இருக்கும். நிறையக் குடும்பங்களில் பெற்றோரைவிட அந்த மகன், மகள் நண்பர்களின் பெற்றோர்களுக்குத்தான் அவர்கள் யாருடன் நட்பாக இருக்கிறார்கள் என்று தெரியும். காரணம், நம்மில் பலர் நம்மைப் பெற்றோராகத்தான் நினைவுபடுத்திக் கொள்கிறோம். நம் கடமை அவர்களுக்குத் திருமணம் செய்துவைப்பது என்று அதைப் பெரிய பொறுப்பாக எடுத்துக்கொள்கிறோம். அதற்கு அவசியம் இல்லை என்பதுதான் என் கருத்து. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைவில் இருத்தியே, பெற்றோர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையைச் செலவிட்டிருக்கிறோம். அவர்களை வளர்த்தோம்; படிக்க வைத்தோம்; எவ்வளவோ செய்திருக்கிறோம். பட்டியலே போடமுடியாது. முக்கியமாக கிழக்கு/மேற்கு கலாசாரச் சூழலில் அவர்கள் வளரும்போது, அவர்கள் சிந்தனைப்போக்கை ஒரு சிறிதுதான் நாம் கட்டுப்படுத்த முடியும். அதுவும் அவர்கள் வயது ஏற ஏற நம் பிடி கொஞ்சம் கொஞ்சமாகத் தளரும். அவர்களுடைய சுதந்திரச் சிந்தனையில் நம்முடைய கருத்துக்கள் எந்த அளவுக்கு எடுபடுகின்றன என்பது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் நடுவிலிருக்கும் தோழமையைப் பொறுத்துத்தான் உள்ளது.
இந்தியாவிலும் இதே நிலைமைதான். சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது ஒரு அருமையான குடும்பத்தைப் பார்த்தேன். இரண்டு பையன்கள். பெரியவனுக்குத் திருமண வயது. தன் விருப்பப்படி தொழில் செய்கிறான். இன்னும் நிலையான வருமானம் இல்லை. மத்தியதரக் குடும்பம். ஆனால் அந்தத் தாயும், தந்தையும் தன் மகனுடைய விருப்பத்தைத்தான் முதலில் வைத்தார்கள். அவன் செய்யும் தொழிலில் அப்படி ஓர் ஆர்வத்தைக் காட்டினார்கள். பையனுக்கும் தாய், தந்தைக்கும் அருமையான உறவு. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இயல்பாகக் கேட்டேன், "என்னடா கண்ணா? எப்படியிருக்கிறது உன் சோஷியல் லைஃப்?" என்று. அவன் பதில், "ஆன்ட்டி, நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று புரிகிறது. நிறையப் பெண் தோழிகள் உண்டு. எதுவும் சீரியஸாக செட் ஆகலை. அப்படியிருந்தால் அம்மாவிடந்தான் முதலில் சொல்வேன். அப்புறந்தான் ஃப்ரெண்ட்ஸ்" என்றான். அதுதான் தோழமை. எனக்கு அந்த வளர்ப்பு மிகவும் பிடித்திருந்தது. இந்தத் தோழமை ஒரு பையனுக்கோ/பெண்ணுக்கோ தன் பெற்றோரிடம் ஒரு நம்பிக்கையை வளர்க்கிறது. "அம்மாவைப் போல் ஒரு பெண்ணைப் பார்த்துக் கொடுங்கள். நான் அவளுடன் பேச ஆரம்பிக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறான் ஒரு பையன்.
"உங்களிடம் பொறுப்பு கொடுக்க மாட்டேன். அப்பாவிடம் நீ மாட்டிக் கொண்டதுபோல, எனக்கும் அவரைப்போல ஒருவரைத் தேர்ந்தெடுத்து வருவாய்" என்று ஜோக் அடித்தாள் இன்னொரு பெண். ஆகவே, கீழே சில புல்லட் பாயின்ட்டுகளில் என்னுடைய கருத்துக்களைக் கொடுக்கிறேன். இது என்னுடைய அனுபவம். நீங்கள் இருக்கும் பாதையை நான் கடந்து வந்துவிட்டேன், அந்த அனுபவம்:
* நீங்கள் எழுதியதுபோல நேரம் காலம் பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது. தப்பில்லை. அந்தக்காலத்தில் ஜாதகத்தைக் கையில் எடுத்தார்கள். அவர்கள்கூட நல்ல நாள் பார்த்துக் கொண்டேதான் இருந்தார்கள். அப்போது கிரகங்களின் ஒற்றுமையைப் பற்றி ஆராய்ந்தோம். இப்போது மன ஒற்றுமையைச் சிந்திக்கிறோம். அவ்வளவுதான்.
* அவர்கள் பேச்சுவாக்கில் உங்கள் உதவியை நாடினால்! (நாட மாட்டார்கள்) உடனே எக்ஸைடட் ஆகிவிடாதீர்கள். மறுநாளேகூட அவர்கள் பின்வாங்கி விடலாம். கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்து, மறுமுறை உறுதி செய்துகொண்டு உங்கள் முயற்சியை ஆரம்பிக்கலாம்.
* அப்படியே அவர்கள் சம்மதத்துடன் யாரையாவது அறிமுகம் செய்து வைத்தாலும், அடிக்கடி கேட்டுத் துளைத்தால் கோபம் அல்லது வெறுப்புதான் பதிலாக இருக்கும். மாதங்களுக்குப் பின்னர் வேண்டுமானால் இங்கிதமாக ஒரு சின்னக் கேள்வி போதும். ஆனால், அதற்கும் நாள் நட்சத்திரம் வெப்பநிலை பார்க்கவேண்டும்.
* அவர்களே (உங்களுக்குத் தெரியாத) வேறு யாரைப்பற்றியோ ஆர்வமாகப் பேசினால், நமக்கு முதலில் தோன்றும் கேள்வி இந்தியரா? என்ன ஜாதி? அதை அவசர அவசரமாகக் கேட்டு, பேச்சை மேலே தொடராமல் செய்துவிடாதீர்கள். மிகவும் உன்னிப்பாக அவர்கள் ஆர்வத்தை ஊக்குவிப்பது போலக் கேள்வி கேளுங்கள்.
* நம் பிள்ளையோ பெண்ணோ நம் இனத்தைச் சேர்ந்தவராக இல்லாத ஒருவர்மேல் ஆசை கொண்டால், நம் மனது காற்றுப் போன பலூனைப்போலச் சுருங்கி விடுகிறது. அதையும் முகம் உடனே காட்டிக் கொடுத்துவிடும். உடனே அவர்களுக்கும் தயக்கம் ஏற்படுகிறது. நம்முடைய கருத்துக்களைக் கேட்கக்கூட விரும்ப மாட்டார்கள். அவர்களுடைய தனிமனித கலாசாரத்தில் ஜாதி, மத, மொழி என்கிற பேதம் எதுவுமில்லை. மனதில் தெரிவித்துள்ள அவனை/அவளை ஆத்மபந்துவாக (Soulmate) நினைக்கும்போது, திருமணம் என்ற பந்தத்திற்குத் தயாராகிறார்கள். ஆகவே, அவர்கள் வழியில் விடவேண்டியது தவிர வேறு வழியே இல்லை.
* சில பெண்கள்/பிள்ளைகள் திருமணம் என்ற தளைக்குள் தங்களைப் புகுத்திக்கொள்ள விரும்புவதில்லை. ஆகவே அதை நம்முடைய பொறுப்பாக எடுத்துக்கொண்டு எங்கோ தவறு செய்துவிட்டோம் நம் வளர்ப்பில் என்று வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை.
* வயதாகிப் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் பிள்ளையோ/பெண்ணோ, 'திருமணம் என்பது எனது முடிவு. இதில் பெற்றோர் தலையிட உரிமையில்லை' என்ற மனோபாவத்தில் இருப்பார்கள். இன்றைய நடைமுறையில் அது உண்மைதான். எப்போது முடிவு செய்கிறார்கள், யாரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று நாம்தான் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். கவலையும் வேண்டாம். கலக்கமும் வேண்டாம்.
* நம் குழந்தைகளுக்கும் நமக்குப் பிடிக்கும் வகையில் நாடு, மொழி, ஜாதி என்ற அடிப்படையில் அவர்களுடைய சாய்ஸ் அமைந்துவிட்டால், மிகவும் உற்சாகமாகத்தான் செயல்படுவார்கள். நம் மனதை வருத்தப்பட வைக்கவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்காது. வேறு இனத்தில் தேர்வுசெய்த பெண்ணையோ/பிள்ளையையோ பற்றி அவர்கள் நம்மிடம் சொல்லும்போது, அம்மாவுக்குப் பிடித்த அல்லது அப்பாவுக்குப் பிடித்த விஷயங்கள், எப்படி அவர்களுடைய ஆத்மபந்துவுக்கும் பிடிக்கும் என்பதை கவனமாக எடுத்துச் சொல்லுவார்கள். "அம்மா உன்ன மாதிரியே அவளுக்கு கார்டனிங்கில் இன்டரஸ்ட் உண்டு", "அப்பா அவனும் உங்களைப்போல் கோல்ஃப் விளையாடுகிறான்" என்பது போல. எப்படியாவது நீங்கள் அவர்கள் 'முடிவுவை' ஆதரிக்கவேண்டும். பெற்றோர்களின் அங்கீகாரம் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. They decide. We endorse.
* வயதில் முதிர்ச்சிyaடைந்து இன்னும் செட்டில் ஆகாத பெண்கள்/பிள்ளைகள் - அவர்களுக்குள் எத்தனையோ ஏமாற்றம், கசப்பு உணர்ச்சி இருக்கலாம். அவர்களுக்கேற்ற வாழ்க்கைத்துணை இதுவரை கிடைக்காமல் போயிருக்கலாம். இன்னும் தேடலில் இருப்பார்கள். அந்த நிலையில் நம் கவலையை வருத்தத்தைக் காட்டுவது அவர்களுக்கு எரிச்சல் உண்டாக்கும்.
* Be there for them by being away.
என்னுடைய கருத்துக்கள் புதியவையல்ல. பெரும்பான்மையான பெற்றோர்கள் நடைமுறையில் இவற்றைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தப் பகுதியின் மூலம் வளர்ந்துவிட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், "20-25 வருடங்கள் நாம் நம் குழந்தைகளுக்காக வாழ்ந்துவிட்டோம். பொறுப்புக்களைச் சுமந்துவிட்டோம். இனிமேல் பொறுப்பு என்ற பெயரில் கவலையைச் சுமக்கவேண்டாம். எல்லாமே நன்றாக நடக்கும். அந்த நாளுக்குக் காத்திருப்போம்" என்பதுதான்.
வாழ்க! வளர்க!!
|