சுபாவை ஆண் குழந்தைகளைப் போல நன்றாகப் படிக்க வைத்தோம். வாழ்க்கையில் வேலைக்குப் போய் முன்னேற வேண்டுவதற்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தோம். அப்பாவைப் போலவே சுபாவும் விற்பனைத்திறமையுள்ள மார்க் கெட்டியர் ஆனதில் வியப்பில்லை.
தனக்கு வந்த புற்று நோயுடன் ஐந்து வருடம் மனத்திடத்துடன் மல்லாடி வெற்றவர் சுபா. மூன்று முறை விட்டு விட்டு வந்தது. மனம் தளரவில்லை. நான் வருத்தப்பட்ட போது, அம்மா, உலகில் பல கோடி மக்களுக்கு வரும் நோய் இது. உன் பெண் மட்டும் என்ன உசத்தியா என்பார். கெமோதெரபி எடுத்துக் கொண்டு படாத பாடுபட்டாலும், ஓரளவு முடிந்தவுடன் வேலைக்குப் போவார். எதையும் தாங்கும் இதயத்துடன் வாழ்க்கையை நம்பிக்கையுடன் அணுகுவார். மிகுந்த தன்னம்பிக்கை, வாழ்க்கையை நல்ல முறையில் அணுகுவது, அவரது இயல்பு. தனக்குள்ளே ஆழமாகத் தேடிக் கொண்ட வலிமையுடன் புற்று நோயை எதிர்கொண்டார். தனக்குக் கிடைத்த ஒவ்வொரு நாளும் வரம். அதனால், வாழ்க்கையை முழுமையாக வாழ விரும்புகிறேன் என்பார். "இந்தக் கணத்தின் வலிமை"(The Power of Now: A Guide to Spiritual Enlightenment) என்ற புத்தகத்தை நாங்கள் இருவரும் படிப்போம். இந்த ஆன்மீக வலிமையைத் தவிர பூஜை, புனஸ் காரத்தில் எல்லாம் அவர் ஈடுபடவில்லை.
சுபா பேரியின் அம்மா சரோஜா விஸ்வநாதன் |