இன்னிசை இளவரசி சூர்யகாயத்ரி
விடியலின் சூரியக்கதிர்கள் விரிவது போல, பல வீடுகளில் சூரியோதயத்தின் அடையாளமே சூர்யகாயத்ரியின் அமுதக் குரல்தான். கணேச பஞ்சரத்னம், ஹனுமான் சாலீஸா, பஜகோவிந்தம், விஷ்ணு சஹஸ்ரநாமம், மைத்ரீம் பஜத, பாக்யதா லக்ஷ்மி பாரம்மா, ஸ்ரீராமச்சந்திர க்ருபாளு, ஹரே ராம, ப்ரம்மம் ஒகடே - பாடல் வேறுபடலாம், குரல் அவருடையதுதான். அவரது கந்தர்வ கானம் நம்மை வேறோர் உலகுக்கே கடத்திச் சென்றுவிடுகிறது.

இசையை வரமாகப் பெற்று வந்துள்ள சூர்யகாயத்ரிக்கு வயது 14. உலக அளவில் இவரது யூட்யூப் வீடியோக்களைக் காண்போரின் எண்ணிக்கை கோடிகளில். பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கையோ நமக்கு அறியக் கூடுவதில்லை. அப்படி உலகையே தனது இசையரங்கமாக மாற்றியுள்ளார் இந்த கான சரஸ்வதி.

வடகேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் வடகராவைச் சேர்ந்த பரமேரியில் ஜனவரி 24, 2006 அன்று பிறந்தார் சூர்யகாயத்ரி. தந்தை பி.வி. அனில்குமார் மிருதங்கக் கலைஞர். காரைக்குடி மணி அவர்களின் சீடர். தாய் பி.கே. திவ்யா இல்லத்தரசி. பாடல் எழுதும் திறமையும் உண்டு. தந்தை இசைத்துறை என்பதால் இசையிலேயே சூர்யகாயத்ரியின் குழந்தைப்பருவம் அமிழ்ந்திருந்தது. மூன்று வயதிலேயே இசையார்வம் வந்துவிட்டது. ஒரு பாடலைக் கேட்டால் அப்படியே திரும்பப் பாடுவார். இதைக் கவனித்த தந்தையார் தானே அவருக்கு இசை கற்பிக்க ஆரம்பித்தார். தாயும் மகளின் ஆர்வம் அறிந்து உற்சாகமானார். பல புதிய பாடல்களைக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுத்தார்.

'பாரத் கலாசார்' விருது மேடையில்



ஐந்து வயதில் தொடங்கியது சூர்யகாயத்ரியின் குருகுலவாசம். வடகராவின் இசைக்கலைஞர் திரு நிஷாந்த், சூர்யாவின் குருவானார். மற்றொரு குருவான திருமதி ஆனந்தியிடமும் கற்றுக்கொண்டார். சிறு சிறு கச்சேரிகள் செய்ததுடன், போட்டிகளிலும் பங்கேற்று வென்றார்.

பிரபல இசைக் கலைஞரான குல்தீப் எம். பாய் (Kuldeep M. Pai), தந்தை அனில்குமாரின் நண்பர். அவர், 'ஹனுமான் சாலீஸா' ஆல்பத்துக்காகப் புதிய குரலைத் தேடிக்கொண்டிருந்தார். பல குரல்களைக் கேட்டும் திருப்தியில்லாத நிலையில், சூர்யகாயத்ரியின் பாடல் ஒன்றைக் கேட்டார். உச்சரிப்புச் சுத்தம், தாளம், பாவம், ஸ்ருதி இவற்றைக் கண்டு வியந்த குல்தீப், தான் தேடிக்கொண்டிருந்தது இந்தக் குரலைத்தான் என உணர்ந்தார். பதிவுக்கு முன்னர், தினந்தோறும் 'ஹனுமான் சாலீஸா'வை 108 நாள் பாராயணம் செய்யப் பணித்தார். 109வது நாள் சூர்யகாயத்ரி பாடி அது பதிவானது. ஆஞ்சநேயரில் தொடங்கி பிள்ளையாருக்குப் போனாள் காயத்ரி! அடுத்து 'கணேச பஞ்சரத்னம்' பதிவு செய்யப்பட்டது. 'விநாயகர் வணக்கம்' என முதலில் அந்தப் பாடல் யூட்யூபில் வெளியானது. ரசிகர்கள் அதைப் பருகித் திளைத்தனர்.

"யார் இந்த சூர்யகாயத்ரி?" என்று தேட ஆரம்பித்தனர். அடுத்து, முதலில் பாடிப் பதிவான 'ஹனுமான் சாலீஸா'வும் யூட்யூபில் வெளியானது. அது சூர்யகாயத்ரியின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. உலகின் மூலை முடுக்கெல்லாம் ரசிகர்களை அதுபோய்த் தொட்டது. அதைப் பார்த்தனர், கேட்டனர், தன்வசமிழந்தனர். இதுவரை கிட்டத்தட்ட 4.9 கோடிப் பேர் அதைப் பார்த்து ரசித்துள்ளனர்.

பெற்றோர், தம்பியுடன்



தொடர்ந்து வெளியான "அயிகிரி நந்தினி" பல வீடுகளில் அன்றாடம் ஒலிக்கும் பாராயணப் பாடல் ஆனது.

சூர்யகாயத்ரியின் திறமையை முற்றிலும் அறிந்த குல்தீப் அவருக்குப் பலவிதத்திலும் பயிற்சியளித்து மெருகேற்றினார். தனது 'வந்தே குரு பரம்பராம்' என்னும் யூட்யூப் தொடரில் சூர்யகாயத்ரியை நிறையப் பாட வைத்தார். கிட்டத்தட்ட ஒரு தவம்போல சூர்யகாயத்ரி அந்தப் பாடல்களைப் பயின்று, பாராயணம் செய்த பின்னர்தான் பதியப்பட்டன. அந்த இசைத்தொடரும் யூட்யூபில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைப் பெற்றது. சூர்யகாயத்ரியின் புகழ் உலகெங்கும் பரவியது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் கச்சேரி வாய்ப்புகள் வரத்தொடங்கின.

சூர்யாவுக்கு ஆசானாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார் குல்தீப் பாய். சென்னையின் புகழ்பெற்ற இசைக்கலைஞரும், சிறந்த குரலிசைப் பயிற்சியாளருமான டாக்டர் சியாமளா வினோதிடம் குரல் மேம்பாட்டுப் பயிற்சி எடுத்துக்கொண்டார் சூர்யகாயத்ரி. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளில் அந்தந்த மொழிக்கேற்றவாறு, சரியான உச்சரிப்புடனும் பாவத்துடனும் பாடுவது சூர்யகாயத்ரியின் சிறப்பு. அதனால் இவருக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் பெருகினர். சென்னை, மும்பை, கல்கத்தா, தில்லி, அஸ்ஸாம், காசி, பெங்களூரு, மைசூரு என்று இந்தியா மட்டுமல்லாமல், லண்டன், துபாய், தாய்லாந்து, தென்னாப்பிரிகா, சிங்கப்பூர் உட்படப் பல வெளிநாடுகளுக்கும் சென்று கச்சேரிகள் செய்திருக்கிறார்.

ஜேசுதாசின் குரலிலேயே கேட்டுப் பழகிய ஹரிவராசனம் பாடலை இவரது குரலில் கேட்டாலும் மெய் சிலிர்க்கிறது.

ராஜஸ்தானத்தில் ஒரு பள்ளியில்



பாரதியின் சின்னஞ்சிறு கிளியேவைக் கேட்கக் கேட்க அலுக்காது.

ஸ்ரீராமச்சந்திர க்ருபாளுவைக் கேட்டால் தெய்வீகக் குரல் என்பதன் பொருள் புரியும்.

எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அம்மாவை காயத்ரிக்கு மிகவும் பிடிக்கும். அவரைப் போலவே இசைத்துறையில் சாதனை படைப்பது இவரது லட்சியம். அதை நோக்கிப் பீடுநடை போட்டுவரும் இவருக்கு, அதே எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பெயரிலான விருது தேடிவந்தது. 'பாலகான கலாபாரதி', 'சங்கீதரத்ன புரஸ்கார்', 'பாரத் கலாசார் விருது' உட்படப் பல்வேறு விருதுகளை இப்போதே பெற்றுவிட்டார். சினிமா, ஊர் சுற்றுதல், தீம் பார்க் போன்றவற்றில் காயத்ரிக்கு ஆர்வமில்லை. இசை சார்ந்த சில படங்களை எப்போதாவது பார்ப்பாராம். சில சமயம் திரையிசை கேட்பதுண்டு.

சென்னை பள்ளியில் அனுபவப் பகிர்வு



தன் பள்ளி கேட்டுக்கொள்ளவே, தன் தாய் எழுதிய பாடலுக்கு இசையமைத்துள்ளார் சூர்யகாயத்ரி என்பது குறிப்பிடத்தக்கது. தாய் எழுதிய பாடல்களுக்குத் தந்தை இசையமைப்பதைப் பார்த்துத் தனக்கும் அந்த ஆர்வம் வந்ததாகச் சொல்கிறார். தினந்தோறும் 5 முதல் 8 மணி நேரம்வரை சாதகம் செய்துவரும் இவர், திருப்பதியில் பாடியதும், திருவண்ணாமலையில் ரமண சன்னதியில் பாடியதும் மிகுந்த மனநிறைவைத் தந்தது என்கிறார். மதுரை சோமு, ஜி.என்.பி., ரஞ்சனி-காயத்ரி, அபிஷேக் ரகுராம் போன்றவர்கள் காயத்ரியை மிகவும் கவர்ந்த பாடகர்கள்.

இதுவரை பள்ளிக்குச் சென்று படித்தவர், கச்சேரி வாய்ப்புகள் மற்றும் இசைப் பயணங்கள் காரணமாக வீட்டிலிருந்தபடியே கற்கப்போகிறார். காயத்ரிக்கு ஒரு தம்பி. பள்ளியில் படிக்கிறார். அவருக்கும் இசையார்வம் உண்டு.

இன்னிசை இளவரசி சூர்யகாயத்ரி



www.sooryagayathri.in இது இவரது வலைத்தளம். தனது 14வது பிறந்த நாளான 24-01-2020 அன்று தனக்கென்று தனியாக ஒரு யூட்யூப் சேனலை ஆரம்பித்திருக்கிறார். (பார்க்க: https://www.youtube.com/channel/UCWswWu9xqJ4cCYToA3zXrrg)

"எம்.எஸ்.அம்மாவின் மறுபிறவி சூர்யகாயத்ரி" என்பது பல ரசிகர்களின் கருத்து. ஓய்வின்றிப் பரபரப்பாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது சூர்யகாயத்ரியின் இசைப்பயணம்.

ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com