டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ்
அறைக்குள் நுழைந்ததுமே கேலண்டரில்' 'அருணாசல மலை' நம்மை வரவேற்கிறது. அருகிலுள்ள படத்தின் பின்னணியில் ரமணர் இருக்க, மற்றொருவர் நின்று கொண்டிருக்கிறார். "அவர் என் தந்தை சந்திரசேகர். புதுவை ரமண கேந்திரத்தைத் தொடங்கியவர்" என்று கூறியபடி வரவேற்கிறார் டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ். படித்துவிட்டு ஏதோவொரு காரணத்தால் பணிக்குச் செல்லாத பெண்களுக்கும், பிற்பட்ட குடும்பப் பின்னணியிலிருந்து வரும் மாணவிகளுக்கும் ஊக்கமும் பயிற்சியும் கொடுத்துக் கார்ப்பரேட் துறையில் நுழையத் தனது 'அவதார்', 'புத்ரி' அமைப்புகளின் மூலம் வழிகாட்டி வருபவர் இவர். தமிழக அரசு 1000 பள்ளிகளில் 'புத்ரி' திட்டத்தை அமல்படுத்த அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர். தனது சாதனைகளுக்காகப் பல்வேறு கௌரவங்களைப் பெற்றவர் (பார்க்க: பெட்டிச் செய்தி). இந்தியாவில் மாற்றத்தை உண்டாக்கும் 25 சிறந்த பெண்மணிகளுள் ஒருவரென ஐ.நா.வின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். சௌந்தர்யா எப்படி இவற்றைச் சாதித்தார்? அவரே சொல்லட்டும்...

கே: 'அவதார்' ஆரம்பித்ததன் நோக்கம் என்ன?
ப: எனது ஊர் பாண்டிச்சேரி. கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தேன். எம்.பி.ஏ. முடித்ததும் சென்னையில் வேலை கிடைத்தது. அங்கிருந்து சென்னை வந்ததே ஒரு கலாச்சார மாற்றம்தான். வேலை பார்த்துக்கொண்டிருந்த போது திருமணமாகிக் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்த்துக்கொண்டு வேலைக்குச் செல்வது கடினமாக இருந்தது. நான் என் மேலதிகாரியிடம் (அது 1993. அப்போது வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற வார்த்தையே கிடையாது) அலுவலகத்தில் முடிக்க முடியாத வேலையை வீட்டுக்குக் கொண்டுபோய் முடித்துக் கொண்டு வரலாமா என்று கேட்டேன்.

அவர் ஒப்புக் கொள்ளவில்லை. "வேலை என்பது ஆஃபீஸில் செய்வதுதான். அதை எப்படி வீட்டில் செய்யமுடியும்? சாத்தியமே இல்லை" என்று சொல்லிவிட்டார். நான் வேலையை விட்டுவிட்டேன். எனக்கு அது மிகவும் கடினமாக இருந்தது.

திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சூழல்களால் வேலையை விட்டுவிடும் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் கொடுமையானது. படிக்கவேண்டும், வேலைக்குப் போகவேண்டும், சாதிக்க வேண்டும் என்று உழைத்தவர்களுக்கு இந்த நிலைமை ஒரு பெரிய வேதனை. 'நான் எதற்காகப் படித்தேன்? படித்தும் ஏன் பலன் இல்லாமல் போனது?' என்று ஒரு அடையாளச் சிக்கல் (identy crisis) வரும். இவர்கள் மிகப்பெரியதொரு சோகத்தை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் உண்மையில் கவுன்சலிங் தேவை. ஏனென்றால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. அன்றுவரை சொந்த சம்பாத்தியத்தில் எல்லாம் செய்தவள், திடீரென்று ஒரு நேப்கின் வாங்க வேண்டுமென்றால் கூடக் கணவரையோ குடும்பத்தில் வேறொருவரையோ கேட்கவேண்டிய நிலைமை! எது வாங்க வேண்டுமென்றாலும் பத்துக் கேள்விகள் வரும்.

முதலில் அவளுக்கிருந்த அடையாளம் போனது. இப்போது எல்லாவற்றிற்கும் மற்றவரைச் சார்ந்திருக்கும் நிலைமை. மூன்றாவது அவளது குழந்தைக்கு, தன் அம்மாவின் அறிவு மற்றும் திறன் என்ன என்ற சிந்தனை இல்லாமலேயே போய்விடும். ஏனென்றால் அந்தக் குழந்தை, அம்மா வீட்டு வேலைகளையும், தனக்குச் செய்வதையும் பார்த்துத்தான் வளரும். அம்மாவுக்கென்று ஒரு தனி வாழ்க்கை இருக்கிறது என்ற எண்ணமே இல்லாமல் போய்விடும். எப்போதும் அம்மாவைச் சார்ந்தே இருக்கும்படி ஆகிவிடுகிறது. தனக்குத்தானே எதையும் செய்துகொள்ளும் எண்ணம் போய்விடும்.

தாய் என்னதான் பார்த்துப் பார்த்து வளர்த்தாலும் மழலையர் பள்ளியில், காப்பகத்தில் கிடைக்கும் அனுபவங்களுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. ஒரு குழந்தை தன் காரியங்களைத் தானே பார்த்துக் கொள்வதற்கான வாய்ப்பை இந்த இடங்கள் அளிக்கின்றன. கணவரின் வருமானமே போதும் என்று மனதைத் தயார்படுத்திக் கொண்டாலும். 'பணம்' என்கிற விஷயத்தை, ஒரு பெண்ணால் அந்தக் குடும்பத்துக்குக் கொண்டுவர முடிந்தால், அவளுக்குக் கிடைக்கும் மரியாதையே வேறுதான்.

CEO குழு உரையாடலை வழிநடத்தும் சௌந்தர்யா



நான் மூன்று வருடம் கழித்துத் திரும்ப வேலைக்குப் போக முயற்சித்தபோது சில விஷயங்கள் புரியவந்தன. கார்ப்பரேட் நிறுவனங்கள் அதை மிகப்பெரிய குற்றமாகப் பார்த்தன. இவள் நான்கு வருடம் கழித்து வேலைக்கு வந்திருக்கிறாளே, பழையபடி வேலை செய்வாளா? இவளுக்கு முதலிலிருந்து பயிற்சி தரும்படி இருக்குமே, இவள் நான்கு வருடம் முன்பு படித்தவள், அந்த பேட்ச்சுக்குத் தருவதுபோலக் காசு கொடுக்கவேண்டுமா? இவளிடம் ரிப்போர்ட் செய்கிறவன், இவளைவிட வயதில் சின்னவனாக இருந்தால் என்ன ஆகும்? இப்படிப் பல கேள்விகள்.

அதனால் எல்லாத் தகுதியும் இருந்தாலும் வேலைக்குத் எடுக்க மாட்டார்கள். உங்களால் ஏற்கவே முடியாத ஒரு சம்பளத்தைச் சொல்லி, சம்மதம் என்றால் வாருங்கள் என்பார்கள். இது பலருக்கும் நடப்பது. எனக்கும் நடந்தது. இப்போதும் விவசாய வேலைகளில் குழந்தைபெற்ற பின்பும் பெண்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களை ஒதுக்குவதில்லை. கார்ப்பரேட் துறையில் அப்படியில்லை.

ஆக, இப்படிப்பட்ட புறக்கணிப்புதான் 'அவதார்' ஆரம்பிப்பதற்கான உந்துதல்.

நாம் ஏன் கார்ப்பரேட்டுகளுக்கே இதுபற்றிச் சொல்லித் தரக்கூடாது என்று நினைத்தேன். இங்கே இவ்வளவு பெரிய திறமைக் குவியல் (talent pool) இருக்கிறதே! ஒரு பெண்ணுக்குத் திருமணமாகிவிட்டது என்பதற்காக, உங்கள் சட்டம் இந்தப் பொக்கிஷத்தைப் பயன்படுத்த முடியாமல் தடுக்கிறதே. இவர்களுடைய கல்வியும், அறிவும், அனுபவமும் வீணாகிவிடுமே என்று தோன்றியது. அதற்காகவே 'அவதார்' அமைப்பை 2000த்தில் ஆரம்பித்தோம்.

அடையாளத்தை மாற்றிய ஐ.டி. கார்டு
அந்தப் பெண் ஒரு இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்பா டெய்லர். இவர் அப்பாவுக்கு உதவியாக கடைக்குச் சென்று காஜா அடிப்பது போன்ற வெலைகளைச் செய்வாராம். ஒருநாள் ஒரு பெண் இவரது கடைக்குத் துணி தைக்கக் கொடுக்க வந்திருக்கிறார். துணி கொடுக்கும்போது அந்தப் பெண்ணின் கழுத்தில் ஒன்று தொங்குகிறது.

இந்தப் பெண் அவரிடம் "ரொம்ப அழகா இருக்கே. அக்கா, இது என்ன?" என்று கேட்டிருக்கிறார்.

"ஓ. இதுவாம்மா... இது ஐ.டி. கார்டு" என்று அந்தப் பெண் காண்பிக்கிறார். அதைத் திருப்பிப் திருப்பிப் பார்த்துவிட்டு, "உங்க போட்டோ ரொம்ப அழகா இருக்கே அக்கா. இந்த அட்டை எங்க கொடுக்கறாங்க?" என்று கேட்கிறார்.

"அதோ தெரியுதே, பெரிய பில்டிங். அங்கதான் நான் வேலை பார்க்கிறேன்" என்கிறார் அந்தப் பெண். கேட்டதும் இந்தப் பெண்ணுக்குள் ஏதோ ஒரு வேகம் வர, மனதிற்குள் 'நானும் அந்த பில்டிங்கில் இதே மாதிரி ஐ.டி. கார்டு போட்டுக்கொண்டு ஒருநாள் வேலைக்குப் போவேன்' என்று நினைக்கிறாள்.

பின் அந்தப் பெண்ணே இவளுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறாள். தையற்கடையில் அப்பாவுக்கு உதவியாக இருக்கும் இஸ்லாமியப் பெண்ணின் உலகம் வேறு. ஐ.டி யில் வேலை பார்ப்பவர்களின் உலகம் வேறு. அந்தப் பெண் இரண்டுக்கும் இடையில் பாலமாக இருந்திருக்கிறாள்.

இந்த இஸ்லாமியப் பெண், அந்தப் பெண்ணின் வழிகாட்டலில் நன்கு படித்து, அதே ஐ.டி. அலுவலகத்தில் பின்னால் வேலைக்கும் போயிருக்கிறாள்.
டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ்


கே: 'அவதார்' என்ற பெயருக்கான காரணம்?
ப: திரும்ப வேலைக்கு வரும் பெண், தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைச் சொல்லி 'கன்வின்ஸ்' செய்ய வேண்டி இருக்கிறது. ஒரு பெண் பிறந்தது முதல், திருமணமாகிக் குழந்தை பெறும்வரை, ஏன், அதற்குப் பின்னும்கூடப் பல அவதாரங்களை எடுக்க வேண்டியுள்ளது. ஆணும்கூடத்தான். அதனால்தான் 'அவதார்' என்று பெயர் வைத்தேன்.

கே: ஆரம்ப காலகட்டம் எப்படி இருந்தது?
ப: தொடங்கி நன்றாகப் போனது. நாங்கள் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொண்டோம். நாளுக்கு நாள் புதிது புதிதாகத் தொழில்நுட்பம் வருகிறது. ஆனால், வேலைக்கு வரும் பெண்களில் சிலர் தங்கள் திறனை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. குடும்பத்துக்குள் நல்ல உறவை வளர்த்துக் கொள்பவர்கள், வெளியுலகில் அவ்வாறு இருப்பதில்லை. யாரிடமிருந்து புதிதாகக் கற்கலாம், யார் தனது உயர்வுக்கு உதவுவார்கள், யாருடன் தொடர்பில் இருந்தால் நமக்கு விஷயம் தெரியவரும் என்பது போன்ற 'நெட்வொர்க்கிங்' சிந்தனை அவர்களுக்கு இருப்பதில்லை. மணமானதும் ஒரு கூட்டுக்குள் குறுக்கிக்கொண்டு இது போதும் என்று இருந்து விடுகிறார்கள்.

இதனால் தன்னைச்சுற்றி நடக்கும் பெரிய விஷயங்கள்கூட அவருக்குக் கடைசியாகத்தான் தெரியவரும். இன்றைக்கு ஃபேஸ்புக், வாட்ஸப் என்று சோஷியல் மீடியா வந்துவிட்டது. அவற்றில் வரும் எல்லாச் செய்திகளையும் நம்பிவிட முடியாது. அது உண்மைதானா என்று உறுதிப்படுத்திக் கொள்ள நம்பகமான சிலர் வேண்டியிருக்கிறது. ஆனால், அந்த 'நெட்வொர்க்கிங்' கூடப் பெண்கள் செய்யமாட்டேன் என்கிறார்கள்.

உத்யோக் உத்சவ் மேடையில்



மூன்றாவதாக, ஒரு குடும்பத்தில் ஆண்களைப் பெண்கள் எந்த வேலையும் செய்ய விடுவதில்லை. மகனுக்கான எல்லாவற்றையும் பார்த்து ஒரு தாயே செய்துவிடுகிறார். திருமணமான பின்பு அந்த ஆண், மனைவியும் அதுபோலவே செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதனால் பெண்களுக்கு வீட்டில் வேலை மிக அதிகமாக இருக்கிறது. ஆண்கள் மிகக்குறைவாகவே செய்கிறார்கள். 'அடடா... நாம் வேலைக்கும் போய்க்கொண்டு இதையும் செய்ய வேண்டியிருக்கிறதே" என்று யோசித்து, கடைசியில் பெண் வேலையை விட்டுவிடுகிறாள். இருவரும் சேர்ந்து செய்வோம் என்று கலந்து பேசித் தீர்மானிக்கக்கூட அவள் முனைவதில்லை. இது அவர்களுக்குத் தெரியவில்லை என்பது எங்கள் ஆய்வின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக இருந்தது.

ஆக, இந்தப் பயிற்சிகளைப் பெண்களுக்குக் கொடுத்தால் அவர்கள் முன்னேறுவார்கள் என்று நினைத்தோம். கார்ப்பரேட்டுகளுக்கும் இதைப் புரியவைத்தோம். அது நல்ல பலன்களைத் தந்து கொண்டிருக்கிறது.

நீங்களும் உதவலாம்
இதைத் தமிழகத்தில் இன்னமும் பெரிய அளவில் எடுத்துச் செல்லவேண்டும். அதற்கு அமெரிக்கத் தமிழர்கள் தோள் கொடுக்கலாம். புத்ரிக்கு நிதி உதவ நினைப்பவர்கள் இந்தச் சுட்டியைப் பார்க்கவும்: www.puthri.org
தொடர்புகொள்ள: eswarbala@puthri.org


★★★★★


கே: அவதார் மூலம் இதுவரை எவ்வளவு பெண்கள் பலன் பெற்றிருப்பார்கள்?
ப: அன்று என்னை வேண்டாம் என்றது ஒரு நிறுவனம். இன்று நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான சௌந்தர்யாக்களுக்குப் பணி வாய்ப்பை வழங்கியிருக்கின்றன. வழங்கி வருகின்றன. அவதார் மூலம் சுமார் 50,000 பேரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறோம். அதில் 30,000-35000 பேர் என்னைப்போல பிரேக் எடுத்தவர்கள். 300க்கும் மேற்பட்ட கம்பெனிகளில் எங்களோடு கைகோத்திருக்கிறார்கள். 'அவதார்' என்று சொன்னாலே, second career women என்ற பதில் வரும். Diversity, Inclusion இவை எங்கள் தாரகமந்திரங்கள்.

கே: பிரேக் எடுத்த பெண்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்வதால் நிறுவனத்திற்கு என்ன பலன்?
ப: ஒரு நிறுவனத்திற்கு Diversity & Inclusion மிக முக்கியம். எங்கே இதுபோலப் பன்முகத்தன்மை இருக்கிறதோ அங்கே புத்தாக்கம் அதிகம் இருக்கும். விதவிதமான எண்ணங்கள் பலதரப்பில் இருந்தும் வருவதால் நன்றாக யோசிப்பார்கள். ஒருவர் நான்கு, ஐந்து வருடம் பிரேக் எடுத்துக்கொண்டு பின் வேலைக்கு வரும்போது, ஒரு சிக்கல் பற்றி யோசிப்பதில் நல்ல வித்தியாசம் இருக்கும். அது அந்த நிறுவனத்துக்கு பலம். பத்துப் பேர் ஒரே மாதிரி யோசித்தால் பிரச்சனை இருப்பதே தெரியாது.

கே: அவதாரின் கிளை நிறுவனங்கள் பற்றி..
ப: மூன்று நிறுவனங்கள் இருக்கின்றன.
1) Flexi careers India: பிரேக் எடுத்து மீள விரும்பும் பெண்களுக்கான சேவைகளை இது செய்கிறது. பெண்களுக்கு, வீட்டிலிருந்தே பகுதிநேரப் பணி செய்ய வாய்ப்பை உருவாக்குகிறது. (பார்க்க: www.avtarwomen.com)

2) Bruhat Insights Global: இது ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் கம்பெனி. ஒரு நிறுவனத்துக்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்து அனுப்பவேண்டும் என்றால் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? வேலையைச் சிறப்பாகச் செய்வார்களா என்றுதான். அந்தக் கேள்விக்கான பதிலைக் கொடுக்கும் நிறுவனம் இது. 'செயற்கை அறி'வைப் பயன்படுத்தி, விண்ணப்பதாரரின் தகுதியை, அவர்கள் கொடுக்கும் தகவலை அலசி, நிர்ணயிக்கிறோம். அதைப் பார்த்து இவரிடம் இன்ன திறமை இருக்கிறது, இதைச் செய்யமுடியும், இவர் நமக்குத் தகுதியானவர் என்பதை அந்த அந்த கம்பெனி முடிவு செய்யலாம். ஒதுக்கப்பட்டவர்களான மாற்றுப் பாலினத்தவர், இரண்டாம் முறை வேலை தேடுவோர், உடற்குறை உள்ளவர்கள் போன்றவர்களை இதன் உதவியால் அதிகம் வேலையில் எடுக்கமுடியும். எங்களது தகுதிக் கணிப்புக்குக் கார்ப்பரேட்டுகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

3) AVTAR Human Capital Trust: அவதார் பல பணிகளைச் செய்தாலும், நாம் நல்ல ஒரு இன்றியமையாத பணியைச் செய்கிறோம் என்கிற திருப்தியைக் கொடுப்பது 'ப்ராஜெக்ட் புத்ரி' அது அவதார் ஹ்யூமன் கேபிடல் ட்ரஸ்ட்டின் ஒரு திட்டப்பணி.

கே: 'புத்ரி' என்ன செய்கிறது?
ப: 'புத்ரி'யை 2008ல் ஆரம்பித்தோம். வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும் பெண்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்வி எங்களுக்குள் எழுந்தது. எங்கள் குழு அதைப்பற்றி ஓர் ஆய்வு செய்தது. அதில் தெரிய வந்த விஷயங்கள் அதிர்ச்சியாக இருந்தன.

'புத்ரி'க்குத் தமிழக அரசின் அங்கீகாரக் கடிதம்



கே: ஓ.. அவை என்ன?
ப: வறுமைக்கோட்டுக்குக் கீழே, அதாவது குடும்ப வருமானமே 10,000 ரூபாய்க்கும் கீழே கொண்ட குடும்பங்களில் பார்த்தால், பெண்களுக்கு மிகவும் சீக்கிரமே திருமணம் செய்துவிடுகிறார்கள். கணவன்மாரில் 90% பேர் மதுவுக்கு அடிமைகள். இவர்களுக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள். குடும்பக்கட்டுப்பாடு பற்றி அவர்களுக்குத் தெரிவதில்லை. யாரும் சொல்லித் தருவதில்லை. சொல்லித் தந்தாலும் பின்பற்றுவதில்லை.

இந்த மூன்று காரணங்களினால், அந்தப் பெண்களின் உடல்நலம் மோசமாக இருக்கும். சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், மாதவிடாய்ப் பிரச்சனைகள் இருக்கும். 40 வயதிலேயே 60 வயதுபோலத் தோற்றமளிப்பார்கள். அதைவிடச் சோகம் என்னவென்றால் அடுத்தடுத்த தலைமுறைகளும் அதே பிரச்சனைகளுடன் வாழ்க்கையைத் தொடரும்.

பாட்டி வீட்டுப் பணிப்பெண் வேலை செய்வார். பிறகு அம்மா, பிறகு மகளும் பணிப்பெண் என இப்படியே தொடரும். எத்தனையோ வளர்ச்சியும் வளங்களும் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும்போது இவர்களுடைய வாழ்க்கை வளர வேண்டாமா? இந்த அடித்தள மக்கள் மீள்வதுதான் எப்போது? எப்படி? இந்தச் சிந்தனை எங்களை உலுக்கியது.

அவதாரைப் பொறுத்தவரையில் அப்படியே பேசி முடிவெடுத்துவிட மாட்டோம். களத்தில் ஆராய்வோம். கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு மேல் நாங்கள் தொடர்புகொண்டு இம்மாதிரி அடிமட்டக் குடும்பத்துப் பெண்களிலிருந்து யாராவது மேலே வந்திருக்கிறார்களா என்று விசாரித்தோம். ஆம் என்றால் எத்தனை சதவிகிதம், மேலே வந்தது எப்படி, அவர்களுக்கு வழிகாட்டியது யார் என்றெல்லாம் ஆராய்ந்தோம். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள்! அப்படி முன்னேறியவர்கள் 1250 பேரைக் கண்டறிந்தோம்.

கே: சுவாரசியமாக இருக்கிறதே. பிறகு?
ப: அந்த 1250 பேரோடு பேசினோம். தற்போது எந்த நிலைமையில் இருக்கிறீர்கள் என்று விசாரித்தோம். பலர் சொந்த வீடுகளில், நல்ல வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, மிக மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினர். ஆனால், சிலர் மட்டும் இன்னமும் சாதாரணச் சூழலில் இருப்பதாகத் தெரிவித்தனர். பெரும்பாலானோர் தங்கள் சூழலில் இருந்து வெளி வந்திருந்தனர்.

அவர்கள் எப்படி அதிலிருந்து வெளியே வந்தனர் கேட்டதற்குப் பலர் பலவிதக் காரணங்களைச் சொன்னார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மூன்று விஷயங்கள் எல்லாப் பெண்களுக்குமே பொதுவானவையாக இருந்தன:
1. அவர்கள் எல்லாருக்குமே ஒரு வழிகாட்டி (Mentor) இருந்தார்.

2. திறமைகண்டு வழிகாட்ட Career coach ஒருவர் இருந்தார். ஒருவருக்குக் கணக்கு நன்றாக வருகிறது என்றால் அதைச் சார்ந்து என்ன இருக்கிறது, என்ன கோர்ஸ் படிக்கலாம், அதில் புதிதாக என்ன வந்திருக்கின்றது, அதைப் படிக்க என்ன செய்யவேண்டும் என்பது போல அவர் வழிகாட்டினார்.

நம் வீட்டுக் குழந்தைகளை எடுத்துக் கொண்டாலும் ஓரளவுதான் நாம் வழிகாட்ட முடியும். நமக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கும் என்பதில்லை. பள்ளியிலோ அல்லது பிற இடத்திலோ யாராவது உதவவேண்டும். நமக்கே இப்படி என்றால், அன்றாடம் காய்ச்சியான கிராமத்தினர் அல்லது நகர்ப்புறச் சேரிகளில் வசிப்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன வழிகாட்ட முடியும்? அங்கேதான் Career coach வருகிறார்.

3. பின்பற்றத்தக்க முன்மாதிரி அல்லது ரோல் மாடல். இந்தப் பெண்களுக்கு யாரோ ஒருவர் அப்படி இருந்திருக்கிறார். அவரைப் போல ஆகவேண்டும் என்று நினைக்கும் வகையில் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்.

எங்கள் ஆய்வில் இவை தெரிந்தன. வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் பெண் குழந்தைகளுக்கு Mentor, Career coach, Role model ஆகிய மூவரையும் தொடர்ந்து கொடுத்தால் அவர்கள் நிச்சயம் மேன்மை அடைவார்கள் என்பது புரிந்தது. அதைச் செய்யத் துணிந்தோம். இதுதான் 'ப்ராஜெக்ட் புத்ரி'.

கே: "ப்ராஜெக்ட் புத்ரி"க்கு அரசின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது அல்லவா?
ப: ஆமாம். 2016ல் ஆரம்பித்தோம். மூன்று வருடங்கள் முடிந்தன. கல்வியாண்டு என்று பார்த்தால் இரண்டு. ஆரம்பத்தில் அரசிடம் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இதற்கு அனுமதி வாங்கினோம்.

'உத்யோக் உத்சவ்' என்று ஆண்டுதோறும் கொண்டாடுவோம். அது பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது பற்றியது. அதில் பெண்களே வந்து பேசுவார்கள். வேலை அளிக்கும் கம்பெனியிலிருந்தும் வருவார்கள். அந்த விழாவுக்கு வந்த கல்வித்துறை இணைச்செயலர் "நீங்கள் 1000 பள்ளிகளில் ப்ராஜெக்ட் புத்ரி நடத்துங்கள்" என்று அனுமதி கொடுத்துவிட்டார். சென்னை, கோவை, பாண்டிச்சேரி என்று நாங்கள் 62 பள்ளிகளில் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டுக்கு 100 பள்ளிகள், 10,000 குழந்தைகள் என்பது எங்கள் இலக்கு.

கர்நாடகம், உ.பி., கேரளம் என்று இந்திய அளவில் பலர் கூப்பிடுகிறார்கள். ஆனால், தமிழ்நாடுதான் எங்கள் இலக்கு. தமிழ்நாட்டில் குறிப்பிட உயரம் தொடுவது எங்கள் முக்கிய இலக்கு. பிறகுதான் மற்ற மாநிலங்கள்.

அமைச்சர் பாண்டியராஜன், சுபா பாரி, 'புத்ரி'களுடன்



கே: ப்ராஜெக்ட் புத்ரியின் பயனர் யார்?
ப: 'புத்ரி ஸ்காலர்ஸ்' என்று நாங்கள் சொல்லும் பெண்கள், 13 வயதிலிருந்து 18 வயது வரையிலானவர்கள். எட்டாம் வகுப்பு படிக்கும்போது அவர்கள் புத்ரி திட்டத்திற்குள் வந்துவிட வேண்டும். கார்ப்பரேஷன் மற்றும் அரசுப் பள்ளிகள்தான் எங்கள் இலக்கு.

இப்போதைக்குப் புத்ரி குழந்தைகள் 8ஆம் வகுப்பில் தொடங்கி இரண்டரை வருடம் முடித்திருக்கிறார்கள். விதிவிலக்காக 11, 12ஆம் வகுப்புக் குழந்தைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதில் பெரிய சந்தோஷம் என்னவென்றால் புத்ரி குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை எளிதாகக் கிடைக்கிறது. கம்பெனிகளும், கல்வி நிறுவனங்களும் புத்ரி மாணவி என்றால் அவரிடம் தரம் இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டன.

கே: 'புத்ரி' மாணவிகளுக்கு என்னென்ன பயிற்சிகளை அளிக்கிறீர்கள்?
ப: முதலில், அந்த மாணவிகளுக்கு மென்டர், கெரியர் கோச், ரோல் மாடல் ஆக இருப்பவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம். உதாரணமாக, ஒருவர் மென்டர் ஆக விரும்பலாம். ஆனால் மாணவிகளுக்கு என்ன சொல்லித் தரவேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவெடுத்து, அதில் அவருக்குப் பயிற்சி தருகிறோம். கெரியர் கோச்சுக்கும் அப்படியே.

திறன்கள் என்று பார்த்தால் மொத்தம் 40 உள்ளன. 8 முதல் 12ஆம் வகுப்புவரை அவர்கள் அவற்றைக் கற்பார்கள். அடிப்படை, இடைநிலை, உயர்நிலை என்று மூன்று படித்தரம் உண்டு. இது அவர்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்று சொல்லலாம். அதற்கான பாடத்திட்டத்தை நாங்கள் வகுத்திருக்கிறோம்.

மென்டர்களுக்கும் கோச்சுகளுக்கும் அந்தப் பெண் குழந்தைகளின் வாழ்க்கை முன்னேற்றத்தில் பங்கு கொள்வதில் அவ்வளவு பெருமை, சந்தோஷம். பிரேக் எடுத்துக்கொண்டு வீட்டிலிருக்கும் பெண்களில் பலர் இதைச் செய்ய முன்வருகிறார்கள். அவர்கள் வாழ்க்கைக்கும் ஒரு பிடிப்பாக இது இருக்கிறது. இதுபோல முதுநிலைப் பட்டம் படிக்கும், சமூகசேவை ஆர்வமுடைய பலர் மென்டராக இணைகிறார்கள். பெரிய கம்பெனிகளில் பணிபுரியும் ப்ரொஃபஷனல்ஸ் வருகிறார்கள்.

கே: 'புத்ரி ஸ்காலர்ஸ்' பற்றிச் சொல்லுங்கள்...
ப: இவர்கள் 8ஆம் வகுப்பிலிருந்து 12 வரை நம்முடன் இருப்பார்கள். அவர்கள் சிந்தனைப் போக்கை மாற்றியமைத்து, அம்மா மாதிரி பணிப்பெண், சமையல்காரி என்று ஆகாமல் அவர்களைத் தொழில் ஊக்கம் கொண்டவர்களாக மாற்றுகிறோம். வீட்டுவேலை, சமையல் வேலை கூடாது என்பதல்ல. அதுவும் முக்கியம்தான். ஆனால் அதைத் தாண்டி மேலே உயரவேண்டும்.

அவள் திருமணத்துக்கு அவசரப்பட மாட்டாள். வீட்டில் கேட்டாலும் அவர்களிடம் நான் சம்பாதிக்கிறேன், மெதுவாகத்தான் கல்யாணம் என்று விளக்கிச் சொல்லி அவர்களை ஒப்புக்கொள்ள வைப்பாள். அவசரமாகக் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டாள். அவர்களுடைய கணவர்கள் குடிகாரர்களாக இருக்கும் சாத்தியம் குறைவு. அவர்களுடைய உடல்நலம் மேம்பட்டதாக இருக்கும். அடுத்த தலைமுறை அடுத்த லெவலுக்குப் போகவேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள்.

கே: இவற்றுக்கு நிதி ஆதாரம் வலுவாக இருக்க வேண்டுமே?
ப: நிதி நிறைய வேண்டும், ஆள் பலம் வேண்டும், பொதுமக்களின் உதவி வேண்டும். பள்ளிகள், அரசு இரண்டுமே நாம் செய்வதைப் புரிந்துகொண்டிருக்கின்றன. கார்ப்பரேட்டுகள் நமது மாணவிகளுக்கு வேலை கொடுத்து ஆதரிக்கின்றன. (உதவ விரும்புவோர் பெட்டிச் செய்தி பார்க்க.

விருதுகள்...



கே: உடனடி வளர்ச்சித் திட்டம் எங்கே?
ப: இந்த வருடம் மதுரை, திருச்சி, சேலத்தில் துவங்க இருக்கிறோம். செங்கல்பட்டில் செய்துகொண்டு இருக்கிறோம். தென் ஆற்காட்டில் செய்யத் திட்டமிட்டுள்ளோம். வட ஆற்காடு எல்லைவரை போயிருக்கிறோம்.

கே: 'The 99 Day Diversity Challenge' நூல் பற்றி...
ப: கம்பெனிகளிடம் போய் ஒதுக்கப்பட்டவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளுங்கள், அதனால் நன்மை விளையும் என்று சொல்கிறோம். ஆனால், அவர்களுக்குச் செயல்முறையில் அதைச் சொல்லித்தர வேண்டாமா? அதற்காக எழுதப்பட்டதுதான் '99 Day Diversity Challenge' மிக எளிய மொழியில், 99 நாட்களிலேயே உங்கள் அலுவலகத்தை நீங்கள் பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றலாம் என்ற கருத்தைச் சொல்லும் புத்தகம் இது. பல கம்பெனிகளில் அதை வாங்கி எல்லோருக்கும் படிக்கச் சொல்லி அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள்.

கே: உங்களுக்கு அதை எழுத ஏன் தோன்றியது?
ப: நான் பலருடன் பேசுகிறேன். நான் பேசுவது எல்லாரும் பேசக் கூடிய விஷயம் இல்லை. Diversity and inclusion பற்றி இந்தியாவில் இத்தனை விரிவாக முதன்முதலில் பேசத் தொடங்கியது நான்தான். ஆயிரம், ஆயிரத்தைநூறு நிறுவனங்களிடம் பேசியிருப்பேன். அதைத் திரும்பத் திரும்ப வாயால் சொல்வதற்குப் பதில் புத்தகமாகப் போடலாமே என்று நினைத்துப் போட்டதுதான் அது.

கே: இதில் Ph.D. ஆய்வு செய்திருக்கிறீர்கள் அல்லவா?
ப: ஆமாம். அவதார் தொடங்கி ஏழெட்டு வருடம் கழித்து நான் Ph.D. செய்தேன். பெண்களுக்கெனச் சில சிறப்பு வழிமுறைகளை ஏற்பாடு செய்வதன்மூலம் இந்தியக் கார்ப்பரேட் உலகில் அவர்களது பங்களிப்பை அதிகரிக்க முடியும். 'Flexible Working Methods as a Career Enabler for increasing workforce participation of women in India' என்பது என் ஆய்வுத் தலைப்பு.

நான் என் வாழ்க்கையில் Ph.D. ஆய்வு முடிவுகளைச் நன்கு செயல்படுத்தியிருக்கிறேன் என்பதில் எனக்கு மிகவும் பெருமை. ஏனென்றால் அது வெறும் ஏட்டுச் சுரைக்காயல்ல.

குட் மார்னிங் ட்விட்டர்
ட்விட்டரில் Good Morning செய்தியை ஒன்றரை வருடமாக அளித்துக் கொண்டிருக்கிறேன். நமக்கு ஏதாவது ஒரு பிரச்சனை, சந்தேகம் இருக்கும். அதற்கு நம் மனம் சொல்லும் தீர்ப்பை அதில் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்று காலையில் (11-02-2020) போட்ட செய்தி. நீங்கள் ஒரு பென்ஸ் கார் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மற்றக் கார்களைவிட அது விலை உயர்ந்தது. பென்ஸ் காரை மெயின்டெய்ன் செய்ய நிறையச் செலவாகும். நிறைய நேரம் செலவாகும். இதெல்லாம் செலவழித்தால்தான் அது அப்படி ஓடும். இதுபோல, சில மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் நம்மிடம் இருந்து நிறைய எனர்ஜியை வாங்கிக்கொள்வார்கள். நிறையப் பேச்சு, நிறைய நேரம் எல்லாம் வாங்கிக் கொள்வார்கள். அவர்களுடைய சந்தோஷத்திற்காகவும், அவர்களுடைய நலனிற்காகவும் நாம் நிறைய உழைக்கவேண்டி இருக்கும்.

இதற்கு மாறாகச் சிலர் மிகவும் low maintenace ஆக இருப்பார்கள். அவர்களுடன் பழகுவது எளிதாக இருக்கும். எதையும் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்கள். எப்போதும் சீரியஸாக இருக்க மாட்டார்கள். 'பரவாயில்லை; பாத்துக்கலாம்' என்ற மனநிலையில் இருப்பார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே மோடிவேட் செய்து கொள்வார்கள். மற்றவர்கள் வந்துதான் தங்களை உந்தித்தள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.

நான் ட்விட்டரில் இன்று என்ன செய்தி போட்டிருக்கிறேன் என்றால், "நீங்கள் high maintenance-ஆ என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள். 'ஐயோ இவர் சரியான தலைவலிப்பா. புலம்பல் கேஸ். ஏதாவது அலுப்பா, அந்தக் காலத்துல எப்படின்னா.. என்று பேசிக் கொண்டே இருப்பார். வாழ்வில் தனக்கு நடந்த கொடுமைகளைப் பட்டியல் போட்டுக்கொண்டே இருப்பார்' என்று உங்களைப் பற்றிச் சொன்னார்கள், நினைத்தார்கள் என்றால் நீங்கள் high maintenance. அதுபோல இருக்காதீர்கள்" என்று போட்டிருக்கிறேன்.

நான் இடும் செய்தி, பல நூறு பேர்களுக்குத் தினமும் வாசிக்கும் பழக்கமாகிவிட்டது. அதைப் படிக்கிறார்கள். அதனால் ஒரு பாசிடிவ் எண்ணம் அவர்களுக்கு வருகிறது. "உங்கள் காலை வணக்கத்திற்காகக் காத்திருக்கிறோம்" என்று எனக்கு நிறைய மெசேஜ் வருகிறது. 200, 300 மேசேஜ் வந்திருக்கும் இதுவரை.

சமீபத்தில் சில நாட்களுக்கு ட்விட்டர் பக்கமே போகவில்லை. எனக்கு ஏகப்பட்ட மெசேஜ்கள். "நீங்கள் காலை வணக்கம் போடவில்லை. அதைப் பார்க்காமல் எதையோ இழந்தது மாதிரி இருக்கிறது. விரைவில் 'காலை வணக்கம்' செய்திகளைத் தொடர வேண்டும்" என்று பலர் செய்தி அனுப்பியிருந்தார்கள். அறிமுகமே இல்லாத அவர்களின் அந்த அன்பு என் இதயம் தொட்டது. என்னை நெகிழ்த்திவிட்டது. இவற்றைத் தொகுத்து ஒரு புத்தகமாகப் போடும் எண்ணம் வந்திருக்கிறது.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் எனக்கு 'டிவிட்டரில்' இதற்காக ஒரு விருது கொடுத்தார்கள். மேனகா காந்தி கொடுத்தார். ட்விட்டரை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துபவர்களுக்கு, நல்ல செய்திகளைப் பகிரக்கூடிய பெண்களுக்கு வழங்கப்படுவது இது.

டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ்


கே: உங்கள் குடும்பம் பற்றி..
ப: கணவர், மகன், மகள் அடங்கிய குடும்பம் என்னுடையது. மகன் திருமணமாகி ஹைதராபாதில் வசிக்கிறார். கணவர் ரீடெய்ல் மார்க்கெடிங் எக்ஸ்பெர்ட். எனக்கு முன்னரே நான்கு புத்தகங்களை எழுதியிருக்கிறார். நான் புத்தகம் எழுத அவருடைய இன்ஸ்பிரேஷனும் இருந்தது.

மகள், மாமியார் எனக் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறோம். மாமியார் எனக்கு இன்னொரு தாய். பாண்டிச்சேரியில் அம்மா இருக்கிறார். அப்பா காலமாகி விட்டார். அப்பா, தீவிர ரமண பக்தர். வெற்றிகரமான தொழிலதிபராக இருந்து, ஒரு கட்டத்தில் எல்லாம் விட்டுவிட்டு, ரமணரைச் சரணடைந்தவர். ரமண தத்துவத்தைப் பின்பற்றியவர். சிறுவயதில் ரமணரைச் சந்தித்திருக்கிறார். 'புதுவை ரமண கேந்திரம்' ஆரம்பித்தது அப்பாதான். 15 வருடமாக இருக்கிறது. தினமும் அங்கே அன்னதானம் நடக்கிறது.

விருதுகள்...
CavinKare's Chinnikrishnan Innovation - 2011
Naturals Extraordinary Woman Award - 2014
100 Women Achievers in India - 2015
Niti Aayog and UN's Women Transforming India - 2016
Jeppiaar Icon Award - 2016
Web Wonder Women Award - 2019
Chennai Carnatic Women Empowerment Award - 2019
Minnesota Winds of Change Award - 2019
Chevening Changemaker Award - 2019


தீர்க்கமான பார்வை, சிந்தித்ததைச் செயல்படுத்தும் மனத்திடம் எல்லாம் இருந்தாலும், முகத்திலிருந்து புன்னகை அகலாமல் உரையாடுகிறார். பெண்களை முன்னேற்றுவதில் இன்னும் சிகரங்களைத் தொடுவார் என்பது புரிகிறது. தென்றலின் சார்பாக வாழ்த்தி விடைபெறுகிறோம்.

★★★★★


இந்தியா வல்லரசாக...
பெண்கள் ஆண்களுக்குச் சமமாகப் பணியிடங்களில் வேலை செய்ய ஆரம்பித்தால், இந்தியா பத்து அமெரிக்காவுக்குச் சமமாகிவிடும். ஆனால், யாருமே இதில் அக்கறை கொள்ளமாட்டேன் என்கிறார்கள். எனக்கு அதற்கான காரணம் தெரியவில்லை. நாட்டின் முன்னேற்றத்துக்கே இது தடையாக இருக்கிறது. இது நடந்தால் இந்தியாவின் GDP $2.7 ட்ரில்லியன் அளவில் இருக்கும்.

பிரதமர் மோதி இந்தியா வல்லரசாக வேண்டும், பொருளாதாரம் உயர வேண்டும் என்கிறார். அதற்காக அவர் எங்கேயும் போகவேண்டாம். ஆண்களுக்கு நிகராக வேலை செய்யும் வாய்ப்பைப் பெண்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தால் போதும், பிரதமர் எதிர்பார்ப்பது போல் பணப்புழக்கம், விற்பனை அதிகரிக்கும், உள்நாட்டு வருவாய், , முதலீடுகள் பெருகும். பெண்கள் அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்தால், நாட்டின் பொருளாதாரம் நிமிர்ந்துவிடும். இந்தியாவும் முன்னேறிவிடும்.

டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ்


★★★★★


சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com