பிப்ரவரி 2020: வாசகர்கடிதம்
தென்றல் ஜனவரி இதழில் பானு ரவி அவர்கள் எழுதிய 'கதம்பமும் மல்லிகையும்' சிறுகதை படித்தோர் உள்ளத்தில் பெரும்வதை ஏற்படுத்திய அற்புதப் படைப்பு.

'அக்கா'வின் ஒரு நிலையிலான சமூகச் சிறப்புப் பண்புகளை நடைமுறை வார்த்தைகளால் விவரித்து வாசகரை அவரோடு இணைத்து, மறு நிலையில் அதனிலும் சிறந்த 'அக்கா'வின் பண்புகளை அற்புதமாகச் சித்திரித்த முடிவு வாசகர்கள் கண்களில் நீர் சுரக்க வைத்தது. எழுதிய பானு ரவிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

கோ. ராமன்,
சான் மேட்டியோ, கலிஃபோர்னியா

★★★★★


ஜனவரி இதழில் இளம் சாதனையாளர் தவில் வித்வம்சினி அமிர்தவர்ஷினி மணிசங்கர் பற்றி வாசித்தேன். மிகுந்த உடல்வலு தேவைப்படும் இப்படிப்பட்ட வாத்திய இசைத்துறையில் பெண்கள், அதிலும் இளையோர், வருவதே அரிது. இவரைப்பற்றி எழுதி, இளைய தலைமுறைக்கு இசைத்துறை மீது ஈர்ப்பு ஏற்படுத்தும் தென்றலின் தொண்டு பாராட்டுக்குரியது. அவரது ஆசைப்படி மருத்துவர் ஆவதற்கும் இறைவன் அருள் புரியட்டும்.

சிறந்த ஆன்மீகவாதியான சத்குரு அவர்கள் 'காவேரி அழைக்கிறது' பணித்திட்டத்தின் கீழ் 2.4 மில்லியன் மரங்களை நட முன்வந்திருப்பது அருமை. 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியில் டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் எழுதியிருப்பதை வரவேற்கிறோம். வயது முதிர்ந்தோர் அதிகமாகிவிட்ட இந்தக் காலத்தில் விட்டுக்கொடுத்தல், மறத்தல், மன்னித்தல் ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் அவரது அணுகுமுறை பாராட்டுக்குரியது.

ஆர். கண்ணன், கீதா கண்ணன்,
சான்ட க்ளாரா, கலிஃபோர்னியா

★★★★★


தமிழகப் பெண்குலத்தின் பேராதரவு பெற்ற கதாசிரியை ரமணி சந்திரன் பற்றிய கட்டுரை படித்து மகிழ்ந்தேன். அவருடைய அனைத்து நாவல்களையும் ரசித்துப் படித்துள்ளேன். அவருடைய கதைக்களம் பெரும்பாலும் பல்வேறு தொழில்புரியும் குடும்பங்களாகவே இருக்கும். பெண்களின் நுண்ணிய மனவுணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் பாங்கு அவருடைய தனிச்சிறப்பு. என்னை மிகவும் கவர்ந்தவை பல, அவற்றுள் சில - 'வெண்ணிலவு சுடுவதென்ன', 'தவம் பண்ணிடவில்லையடி', 'உள்ளம் கொள்ளை போகுதே', 'பாலை பசுங்கிளியே'. ரமணிச்சந்திரன் பற்றிய கட்டுரை வெளிவந்தது தாமதமானதே என்றாலும், இப்போது வெளியிட்டதற்கு மகிழ்ச்சி.

வித்யாலக்ஷ்மி டி, சிமிவேலி,
கலிஃபோர்னியா

★★★★★


ஜனவரி இதழில் திருநங்கை பொன்னி நேர்காணல் படித்தேன். பொன்னி நிறைய சிரமங்கள் அடைந்தாலும், அதையும் மீறிய தன்னம்பிக்கை, உத்வேகம் அவரிடமிருந்து வெளிப்படுகிறது. தான் முன்னேறுவது மட்டுமல்லாது தன்னைப் போன்றவர்களுக்கும் கைகொடுத்து முன்னுக்குக் கொண்டுவர முயல்வதிலும் அவரது நல்ல மனதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இளம் சாதனையாளர் அமிர்தவர்ஷினி மணிசங்கர் தவில் வாசித்து வெற்றி பெற்றுள்ளமை மிகவும் வியக்கத்தக்க விஷயம். அவர் மேன்மேலும் பலவிதங்களில் பேரும் புகழும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். எனக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர் ரமணிசந்திரன் பற்றிய கட்டுரையும் புகைப்படமும் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன்.

சசிரேகாசம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

★★★★★


ஜனவரி இதழில் பானு ரவியின் சிறுகதை படித்தேன். வெகு அழகாக எழுதப்பட்டிருந்தது. அதில் திருச்சியின் அன்றாடக் காட்சிகளையும் ஒலிகளையும் கண்முன்னே கொண்டுவந்திருந்தார். அதன் முக்கியப் பாத்திரம் அருமையாகச் சித்திரிக்கப்பட்டிருந்தது. இறுதியில் அன்புக்குரியவர் ஒருவரை இழந்ததைப் போல நான் கண்ணீர் சிந்தினேன். மேலும் பல கதைகளை அவரிடம் எதிர்பார்க்கிறேன்.

பிரேமா,
சிங்கப்பூர்

© TamilOnline.com