ஈஸ்வர சங்கல்பம் நடந்தேறுவதை எதுவும் நிறுத்த முடியாது என்பதற்கு ஒரு கதை சொல்கிறேன். சிவபெருமான் கைலாயத்தில் தினந்தோறும் மாலை நேரத்தில் ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் எல்லோருக்கும் அருளுரை வழங்குவார். அவர்கள் அதனைக் கேட்கும்போது, அங்கு தொடர்ந்து பொழியும் பனிமழை மற்றும் குளிர்காற்றில் பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டாக ஓர் அரங்கைக் கட்ட வேண்டுமென்று பார்வதிதேவி கூறினார். அரங்கம் கட்டுவதற்கு ஈஸ்வர சங்கல்பம் இருக்கவில்லை. ஆனாலும் தான் கூறியபடி நடந்தாக வேண்டுமென்று பார்வதி வற்புறுத்தினார்.
அஸ்திவாரம் தோண்டுவதற்கு முன்னதாக ஒரு ஜோசியரைக் கேட்டபோது அவர், "இங்கே அரங்கம் கட்டினால் அது நெருப்பில் எரிந்துபோகும் என நட்சத்திரங்கள் சொல்கின்றன. ஏனென்றால் தொடக்கத்திலிருந்தே சனியின் பார்வை இதற்குச் சரியாக இல்லை" என்று கூறினார். ஆனாலும் அரங்கம் கட்டப்பட்டது. இப்போது ஒரு பிரச்சனை. சனி தனது கோபத்திற்கு அரங்கை உட்படுத்தக் கூடாதென்று அவனிடம் கேட்கலாம் என்று சிவன் கருதினார். சினத்துக்குப் பெயர்போன சனி அதற்கு ஒப்புக்கொள்வான் என்று அவருக்குத் தோன்றவில்லை. தான் சொல்லிக் கட்டிய அரங்கைக் குட்டிக் கொடுங்கோலன் சனி அழித்தான் என்ற பெயர் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளப் பார்வதி உறுதி பூண்டார். "நான் நெருப்பு வைத்தேன் என்று சனி மார் தட்டிக்கொள்வதற்கு முன்னால், நானே அதற்குத் தீ மூட்டிவிடுவேன்" என்று அவர் சூளுரைத்தார். "நான் போய் அவனைக் கேட்டு வருகிறேன், நீ கொஞ்சம் பொறுத்திரு" என்று கூறினார் சிவன்.
"நாம் கூறியதற்குச் சனி ஒப்புக்கொண்டால், அந்த நல்ல செய்தியை நானே வந்து உன்னிடம் கூறுவேன். அவன் பிடிவாதமாக இருந்தால், நான் கையை உயர்த்தி உடுக்கையை ஒலிப்பேன். அதைக் கேட்டதும் நீ தீ வைத்துவிடு, அவனுக்கு அந்தப் பெருமை போகவேண்டாம்" என்றார் சிவபெருமான். துஷ்டக்கிரகமான சனியின் திட்டம் நிறைவேறிவிடாமல் பார்த்துக்கொள்வதற்காக, பார்வதிதேவி தமது கையில் ஒரு தீவட்டியுடன் தயாராக நின்றிருந்தார்.
ஆனால், சிவபெருமான் கேட்டதும் சனி சரியென்று கூறிவிட்டான். அரங்கத்தை நான் எரிக்கமாட்டேன் என்று அவன் சொன்னது சிவபெருமானுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஆகவே, எனக்கு ஒரு வரம் வேண்டும் என்று அவன் கேட்டதும் மிக்க மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு, என்ன வரம் என்று கேட்டார் சிவன். "தேவலோகத்தில் இருப்பவர்கள் எல்லாம் உங்களது தாண்டவத்தைப் புகழ்கிறார்கள். ஒருமுறைகூட எனக்கு அதைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. நீங்கள் ஓரிரு அடியாவது எடுத்து வைத்து எனக்குக் காண்பிக்க வேண்டும்" என்றான் அவன். தாண்டவமாட ஒப்புக்கொண்ட சிவன், கையை உயர்த்தி உடுக்கையை அசைத்தார்!
சிவனின் சமிக்ஞைக்காகவே காத்துக்கொண்டிருந்த பார்வதி, உடுக்கை ஒலி கேட்டதும் அரங்கத்துக்குத் தீ வைத்துவிட்டார். சிவனின் திருவுள்ளப்படியே அரங்கம் சாம்பலானது. இறைவன் திருவுள்ளம் நடந்தே தீரும். சனி அந்தத் தெய்வீகத் திட்டத்தின் ஒரு கருவிமட்டுமே.
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |