இந்திய அரசின், தேசியக் குழந்தைகள் விருதுத் திட்டத்தின் கீழ் இவ்வாண்டுக்கான 'பால்சக்தி புரஸ்கார்' விருது, புதுச்சேரியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர் வெங்கட சுப்பிரமணியனுக்கு வழங்கப்படுகிறது. இவருடன் நாடெங்கிலிருந்தும் மொத்தம் 49 மாணவர்கள் இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பில் வசிக்கும் வெங்கட சுப்பிரமணியன், ஜிப்மர் கேந்திரிய வித்யாலயாவின் 11ம் வகுப்பு மாணவர். பிறப்பிலேயே இடது கை குறைபாட்டுடன் பிறந்தாலும் இவர் மனம்சோராமல் வாழ்க்கையை எதிர்கொண்டார். குடும்பத்தாரின் உறுதுணையுடன் படிப்போடு நின்றுவிடாமல் இசை, கராத்தே, சமூகப்பணி, விளையாட்டு, யோகம், பிறமொழி கற்றல் எனப் பல துறைகளிலும் ஆர்வத்துடன் சாதனைகளை நிகழ்த்தினார். இவரது அரிய முயற்சிக்காகவும் சாதனைகளுக்காகவும் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விருது சான்றிதழுடன், ரூபாய் ஒரு லட்சம் பரிசு கொண்டது.
ஜனவரி 26 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் மேதகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து இவ்விருது பெற்றார் வெங்கட சுப்பிரமணியன். குடியரசு தின விழா அணிவகுப்பிலும் இவர் பங்கேற்றமை குறிப்பிடத்தகுந்தது. |