இந்திய அரசு வழங்கும் 2020ம் ஆண்டிற்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 141 பேர் இவ்விருதைப் பெறுகின்றனர்.
118 பேர் பத்மஸ்ரீ, 7 பேர் பத்மவிபூஷண், 16 பேர் பத்மபூஷண் விருதுகளைப் பெறுகின்றனர். இவர்களில் 33 பேர் பெண்கள். 18 பேர் வெளிநாட்டினர். 12 பேருக்கு மரணத்துக்குப் பின்னர் இந்த விருது வழங்கப்படுகின்றன.
மணிப்பூரைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பத்மவிபூஷண் விருது பெறுகிறார். அருண்ஜேட்லி, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், சுஷ்மா சுவராஜ் உடுப்பி பெஜாவர் மடாதிபதியாக இருந்த ஸ்ரீவிஸ்வேச தீர்த்த சுவாமிஜி ஆகியோர் மறைவிற்குப் பின் பத்மவிபூஷண் பெறுகின்றனர். உலக அளவில் புகழ்பெற்ற ஆன்மீக குருவான ஸ்ரீ எம் எனப்படும் மும்தாஜ் அலிகான் பத்மபூஷண் பெறுகிறார். கஜல் பாடகர் அஜய் சக்ரபோர்த்தி, தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா, புதுச்சேரியைச் சேர்ந்த கல்வியாளர் மனோஜ் தாஸ், கோவா மாநில முன்னாள் முதல்வர் அமரர் மனோஹர் பாரிக்கர், காந்தியவழிச் சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், பேட்மின்டன் வீரர் பி.வி. சிந்து, டி.வி.எஸ். நிறுவன அதிபர் வேணு சீனிவாசன் ஆகியோரும் பத்மபூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஜக்தீஷ் சேத் அவர்களும் இவ்விருது பெறுகிறார்.
பத்மஸ்ரீ விருதினை பாம்பே சகோதரிகள் லலிதா, சரோஜா; ஓவியர், எழுத்தாளர் மனோகர் தேவதாஸ்; சுடுமண் சிற்பக் கலைஞர் வி.கே. முனுசாமி, சமூகசேவகர் அமர்சேவா சங்கம் எஸ். ராமகிருஷ்ணன்; கங்கனா ராவத், ஏக்தா கபூர், கரன் ஜோஹர்; நாகஸ்வரக் கலைஞர்கள் திருமதி காலிஷா பீ மெகபூப், திரு ஷேக் மகபூப் சுபானி (மறைவு); ஆராய்ச்சியாளர் ஐ.ஐ.டி. பேராசிரியர் ப்ரதீப் தலப்பில் போன்றோர் பெறுகின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் வரிசையில் அமெரிக்காவின் பிரசாந்தகுமார் பட்நாயக், ராபர்ட் துர்மன், டாக்டர் ரொமேஷ் டேக்சந்த் வாத்வானி உள்ளிட்டோர் இவ்விருது பெறுகின்றனர்.
விருதுகள் வரும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட இருக்கிறது. |