சு. வெங்கடேசனுக்கு இயல்விருது - 2019
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2019ம் வருடத்திற்கான இயல் விருது எனப்படும் தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது சு. வெங்கடேசனுக்கு அளிக்கிறது. 1989ல் இருந்து இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கிவரும் கவிஞரும், எழுத்தாளரும் அரசியல்வாதியுமான வெங்கடேசன், விருதுக் கேடயமும் 2500 டொலர் பணப்பரிசும் அடங்கிய இந்தப் பரிசைப் பெறுகிறார்.

இவர் மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தவர். பன்னிரெண்டாம் வகுப்பு விடுமுறையில் தனது முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். இளங்கலை வணிகவியல் படித்தவர். இதுவரை 4 கவிதைத் தொகுப்புகள், 5 கட்டுரைத் தொகுப்புகள், 2 புதினங்கள், ஒரு கிராஃபிக் நாவல் ஆகியவற்றை எழுதியிருக்கிறார்.

இவர் எழுதிய முதல் நாவலான 'காவல் கோட்டம்' நூலுக்கு 2011ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற எழுத்தாளர்களில் ஆக இளம்வயதினரும், முதல் நாவலுக்கே இவ்விருதைப் பெற்ற முதல் எழுத்தாளரும் இவரே ஆவார்.

வசந்தபாலன் இயக்கத்தில் 2012ல் வெளிவந்த 'அரவான்' திரைப்படம் இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டது. 'காவல் கோட்டம்' பற்றி வெங்கடேசன், "நாவல் எழுதத் தொடங்கியபோது என் மூத்தமகள் யாழினி பிறந்தார். எழுதி முடித்தபோது அவர் என் தோளுக்கு இணையாக வளர்ந்திருந்தார். நாவலுக்காக 10 ஆண்டுகள் உழைத்தேன். இதற்காக நான் இழந்ததவை அதிகம்" என்கிறார்.

இவர் ஆனந்த விகடனில் 111 வாரங்கள் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி தொடரை வாசகர்கள் இதுவரை காணாத வகையில் வரவேற்றார்கள். இவருடைய புகழ் தமிழ் உலக அளவில் பரவ இந்த நாவல் காரணமாக இருந்தது. சங்க இலக்கியத்தில் சில வரிகளில் அறியப்பட்ட வள்ளலும், வேளிர்குலத் தலைவனுமான பாரியைச் சேர சோழ பாண்டியர் மூவரும் ஒன்றிணைந்து போர்தொடுத்தும் தோற்கடிக்க முடியாவில்லை எனச் சொல்கிறது இந்த நாவல்.

இவர் மார்க்ஸிய பொதுவுடமைக் கட்சியின் முழுநேர ஊழியர்; தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர். 2019ல் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மதுரைத் தொகுதியில் இந்தக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு பெருத்த வெற்றி ஈட்டியவர். மக்களைக் கவர்ந்திழுக்கும் பேச்சாற்றல் கொண்டவர். தமிழ் நாட்டிலும், வெளிநாடுகளிலும் மேடைகளில் தமிழின் மேன்மையைப் பரப்பி வருகிறார். தன் மனைவி பி.ஆர். கமலாவுடனும், பிள்ளைகள் யாழினி, தமிழினி ஆகியோருடனும் இவர் மதுரையில் வசிக்கிறார். 'இயல் விருது' வழங்கும் விழா டொராண்டோவில் 2020 ஜூன் மாதம் வழமைபோல நடைபெறும்.

'தமிழ் இலக்கியத் தோட்டம்' செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com