எட்டு கழுதை வயதினிலே...
அண்ணா பையனின் கல்யாணத்துக்கு இந்தியா போயிருந்த மனைவி நேற்று இரவுதான் அமெரிக்கா திரும்பியிருந்தாள். தொண்டை கரகரப்பாயிருக்கிறது என்றாள். கொஞ்சம் இருமலும் இருந்தது. பசிக்கவில்லை என்று ஒன்றும் சாப்பிடாமல் படுத்துவிட்டாள். தூங்கினால் சரியாகிவிடும் என்றாள். ஆனால் இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள்.

காலையில் காப்பியுடன் அவளை எழுப்பினேன். டாக்டரிடம் அழைத்துப் போகிறேன் என்றேன். வேண்டாமென்றாள். டோஸ்ட்டும், ஆட்விலும் கொடுத்தேன். சுரமில்லை. தொண்டை கரகரப்பு மட்டும் இருக்கிறது என்றாள். அவசர அவசரமாக மிளகு ரசம் வைத்தேன். 4, 5 அப்பளம் சுட்டேன். ரைஸ் குக்கரில் சாதம் வைத்தேன். அவளிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு, அலுவலகம் சென்றுவிட்டேன்.

இரவு வரும்பொழுது 8 மணிக்கு மேல் ஆகிவிட்டது. மாடிக்குப் போய், "எப்படி இருக்கிறாய்?" என்றேன். மனைவி பதில் ஒன்றும் சொல்லவில்லை. திருப்பி "எப்படி இருக்கிறாய்?" என்றேன். "ஆஃபீஸ் போனால் ஒலகமே மறந்துடுமா? ஏதுடா பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லையே? அவ இருக்காளா இல்ல செத்தாளானு கவலப்பட்டேளா? எப்டி இருக்கனு கூப்டுக் கேட்டா கொறஞ்சா போய்டும்?" என்று படபடத்தாள். அவள் மனோநிலையில் நான் என்ன சொன்னாலும் எடுபடாது என்று மௌனம் காத்தேன். அடுத்த சரவெடிக்குத் தயாரானேன்.

அப்பொழுது தொலைபேசி சிணுங்கியது. எடுத்தேன். மனைவியின் அக்கா. "என்ன, உங்கக்காகூட பேசறயா?" என்றேன். "உம்" என்றாள். ஃபோனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு, நான் லேப்டாப்பில் வேலை செய்ய ஆரம்பித்தேன். அக்காகாரி கல்யாணத்திற்குப் போகவில்லை. அதனால் மனவி அதைப்பற்றி விவரித்தாள்

அதன் பின்னர் உரையாடல் இப்படிப் போயிற்று...

"அம்மா, எப்படி இருக்கா"? இது அக்கா.

"ஐயோ, அதை ஏன் கேக்கறே? ஒரே தொணதொணப்பு. மாலு சாப்டியான்னு ஒரு நாளெக்குப் பத்து தடவ கேக்கறா. தெரியாத்தனமா ஒரு நா தலவலினு சொல்லிட்டேன். ஏதோ பிரெயின் ஃபீவர் வந்துட்டமாதிரி பாடுபடுத்திட்டா. அம்மா, நா ஒண்ணும் பச்சக் கொழந்தயில்ல, எனக்கும் எட்டு கழுத வயசாறது. எனக்கு, என்ன பாத்துக்கத் தெரியும். நீ ஒரேயடியா படபடக்காதனு சொன்னேன்."

இதைக் கேட்டு எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை!

லக்ஷ்மி சங்கர்,
நார்க்ராஸ், ஜார்ஜியா

© TamilOnline.com