ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
பாகம்-16a
முன்னுரை:ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. வடிவமைப்புக் கோவைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும், சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம்.

வாருங்கள், ஆரம்பநிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம்!

கேள்வி: நான் ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நல்ல வேலையில் உள்ளேன். என் நண்பன் ஒருவனும் அதே நிறுவனத்தில் இருந்தான். ஆனால் சமீபத்தில் திடீரென வேலையை விட்டு விலகி, ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளான். அப்போதிலிருந்து என்னையும் தன்னோடு வந்து நிறுவனனாகச் சேர்ந்துகொள், நிறுவனத்தில் சமபங்கு தருகிறேன் என்று அரித்துக்கொண்டே இருக்கிறான். நான் வேண்டாம் என்றாலும் விட்டபாடில்லை. எனக்கும் இப்போது அவனோடு சேர்ந்து, உழைத்து நிறுவனத்தை வளர்த்துச் சாதிக்கலாம் என ஆர்வம் உண்டாகியுள்ளது. ஆனால் நல்ல வேலையையும் சுளையான சம்பளத்தையும் லேசில் உதறித்தள்ள இயலவில்லை. ஒரே குழப்பமாக உள்ளது. இருதலைக் கொள்ளி எறும்பு நிலை. நான் என்ன முடிவெடுக்க வேண்டும், ஒரு தீர்ப்பு கூறுங்களேன்?

கதிரவனின் பதில்: உங்கள் தத்தளிப்பை நன்கு உணர்கிறேன். இதை முன்பு நானே அனுபவித்துள்ளேன். அது வெகுகாலம் முன்பு நடந்த கதைதான்! ஆனால் இது காலத்தால் மாறாத ஒரு பிரச்சனை.

நீங்கள் என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதை நான் கூற இயலாது. இது ஒவ்வொருவரும் தத்தமது நிலைமையைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டிய பிரச்சனை. ஆனால், எந்தெந்த அம்சங்களை ஆராய்ந்து அவற்றின் அனுகூல, பிரதிகூலங்களை அலசுவது எப்படி என்பதை விவரிக்க முடியும். அதைப் படித்து உணர்ந்த பின் உங்கள் நிலைமையைப் பொறுத்து ஆராய்ந்து உங்களுக்கேற்ற முடிவை நீங்களே எடுக்கமுடியும், நீங்களேதான் எடுக்க வேண்டும்.

ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் எடுத்த எடுப்பிலேயே கூறிவிட விரும்புகிறேன். உங்கள் நிலையில் இருக்கும் அனைவரும், ஆஹா, நான் எப்படிப்பட்ட பெருநிறுவனத்தில் மிகத் திடமான அஸ்திவாரமுள்ள நிலையில் இருக்கிறேன். இதை விட்டுவிட்டு, பல அபாயங்களுள்ள, ஒவ்வொரு நாளும் தடுமாறித் தத்தளிக்கும் ஆரம்பநிலை நிறுவனத்துக்குப் போவானேன்? இங்கேயே மாதாமாதம் சுளையாகச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு அக்கடா என்று பணிஓய்வு வரும்வரை காலம் தள்ளலாமே என்றுதான் நினைப்பார்கள்.

ஆனால் அது ஒரு மாயம்! என்னடா இது, "உலகே மாயம் வாழ்வே மாயம்"னு பழையகால தேவதாஸ் பாட்டை ஆரம்பிச்சுட்டானேன்னு நினைக்கறீங்களா? அப்படியில்லை. மாயம் என்றால் இங்கு சரியான விவரம் அறியாமல் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் நிலை என்று அர்த்தம்! அப்படி என்ன விவரம் தெரியவில்லை என்ற கேள்வி உடனே எழுமே? நியாயந்தான், விளக்குகிறேன்.

ஒரு பெரிய நிறுவனத்தில் மாதாமாதம் சுளையாகச் சம்பாதிப்பது ஒரு ஸ்திரமான நிலை என்பதுதான் தவறான உணர்வு. ஆரம்பநிலை நிறுவனப் பயணத்தில் அபாயங்கள் பல உண்டு என்பது உண்மைதான்.

அவற்றைச் சமாளித்து வெற்றி காண்பதே ஒரு பெரிய சாதனை உணர்வு என்பதை விடுங்கள். ஆனால் பெருநிறுவனங்களில் வேலைக்கு அபாயமேயில்லை ஸ்திரநிலை என்று நினைப்பதுதான் தவறு. ஏனெனில் பெருநிறுவன வேலைகளிலும் பல அபாயங்கள் உண்டு. அவை உங்களுக்குச் சாதகமாகாது போனால் நீங்கள் வேலையை இழந்து தெருவில் நிற்கும் நிலைமை உண்டாகக்கூடும்.

ஒரு வேலை போனால் என்ன, மற்றொரு வேலை கிடைக்காமலா போகும் என்று நீங்கள் அத்தகைய அபாயத்தை உதாசீனப்படுத்தக் கூடும். ஆனால் இப்படி யோசியுங்கள்: வேறு வேலை கிடைப்பது எளிது என்பதால் பெருநிறுவனத்தில் அபாயமில்லை என்றால், உங்கள் ஆரம்பநிலை நிறுவனம் கவிழ்ந்தாலும் அதேபோல் வேறு வேலை தேடிக்கொள்ளலாம் அல்லவா? அதனால் 'வேலை இழந்தால் என்ன செய்வது' என்பது இரண்டு வழிக்கும் ஓரளவாவது சமமான விஷயந்தானே. அந்தக் காரணத்துக்காக மட்டும் பெருநிறுவனத்திலேயே இருப்பது சரியான முடிவாகாது.

அதனால் முதலில் எக்காரணங்களால் பெருநிறுவன வேலையை இழக்க நேரக்கூடும் என்று இப்போது காண்போம். முதலில் அவற்றைப் பட்டியலிட்டுவிட்டு, அதன்பின் ஒவ்வொன்றாக விவரிப்போம்:
நிறுவனம் லாபக் குறைவினால் தத்தளிக்கக் கூடும்
உங்கள் வணிகக்குழுவை (business unit) அல்லது நிறுவனத்தையே கூட விற்கலாம்
உங்கள் நிறுவனம் மறுசீரமைப்புச் (reorganization) செய்யக் கூடும்.
நீங்கள் சார்ந்துள்ள செயல்பாடு (project) நிறுத்தப்படலாம்
உங்கள் மேலலுவலருடன் கருத்து வேறுபாடு இருக்கலாம்
மேலலுவலர் மாற்றப்பட்டு புதியவருக்கு உங்களைப் பிடிக்காமல் போகலாம் அல்லது தனக்குப் பிடித்த முந்தைய குழுவைத் தக்க வைத்துக்கொள்ள முயலலாம்
அலுவலக அரசியலால் உங்களை இழித்துப் பேசி நீக்க வைக்கலாம் (இது மிகவும் சாத்தியமே!)
உங்கள் வேலைக்கான எதிர்பார்ப்பு அளவை உங்களால் ஈடுகட்ட முடியாமல் போகலாம் (இதுவும் சாத்தியமே!)

முதலாவதாக, நிறுவனத்தில் லாபக்குறைவு ஏற்படுவதைப் பற்றி விவரிப்போம்.
பொதுவாக, பெருநிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் விற்க/வாங்கப் படுகின்றன.. அந்தப் பங்குகளின் விலை பெரும்பாலும் அந்நிறுவனங்களின் 'ஒரு பங்குக்கான வருவாய்' (earnings per share – EPS) எனப்படும் கணிப்பின் மடங்காக இருக்கும். ஒவ்வொரு காலாண்டிலும் அந்நிறுவனங்கள் தங்கள் வரவு செலவு, லாப நஷ்ட நிலையைப் பற்றி அறிக்கை வெளியிடும். அதைப்பற்றி நியூயார்க் பங்கு வர்த்தக நிபுணர்களோடு (stock analysts) கலந்துரையாடல் நடக்கும். இந்தக் காலாண்டு அறிக்கையும் கலந்துரையாடலும் நிறுவனத்தின் பங்கு விலையை நிர்ணயிப்பதில் மிக முக்கியமானவை.

லாபக்குறைவால் உங்கள் வேலை எப்படி பாதிக்கப்படக் கூடும், பெருநிறுவனங்களில் வேலை இழப்பதற்கான மற்றக் காரணங்களையும், தீர்வுகளையும் வரும் நாட்களில் அலசுவோம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com