இனிப்பு நீரின் மர்மம்
அத்தியாயம் - 2
அருண் வேகமாகப் பள்ளிக்குச் சைக்கிளைச் செலுத்தினான். நல்லவேளையாக அவனுக்கு வீட்டருகிலேயே பள்ளி இருந்ததால் அவனால் பாதசாரிகள் பாதையிலேயே (pedestrian path) போகமுடிந்தது. அவனுக்கு, பள்ளிக்கூடத்தின் எதிரேதான் தெருவின் குறுக்கே கடக்கவேண்டும். பள்ளிக்கு மிக அருகில் நெருங்கியபோது முதல் மணி அடித்தது. அடுத்த மணி அடிக்குமுன்னர் அவன் வரிசையில் நின்றாக வேண்டும்.

கடைசி நேரத்தில் பெற்றோர் அவசரத்துடன் தங்களது பிள்ளைகளை கொண்டுவிட்டுச் சென்றார்கள். அதனால் ஓரே அமளி துமளி. அன்று கிராஸிங் கார்டு ஆகத் தனது தோழி சாராவின் அம்மாவைக் கண்டான். அவர் அருணைச் சற்று நிற்குமாறு கேட்டுக்கொண்டார். அருண் அவர் சொன்னதைக் கேட்காமல் படாரென்று ரோட்டின் குறுக்கே போனான். சாராவின் தாயார் அதைப் பார்த்துவிட்டார்.

"அருண், that is not ok" என்று ஒரு அதட்டுப் போட்டார்.

"சாரி மிஸஸ் ப்ளவர்ஸ்" என்று முனகிக்கொண்டே அருண் பள்ளிக் கூட்டத்தில் மறைந்தான்.

இவனை அப்புறம் கவனிச்சுக்கறேன் என்று முணுமுணுத்தார் அவர்.

இரண்டாவது மணி அடித்தது. விளையாடிக்கொண்டிருந்த மாணவர்கள் ஓடிப்போய் தத்தம் வகுப்பு வரிசையில் நின்றனர். அருண் அதற்குள் சைக்கிளைப் பூட்டிவிட்டு, ஹெல்மெட் கீழே விழுவதைக்கூட கவனிக்காமல் தனது வகுப்பின் வரிசையில் நிற்க ஓடினான்.

காலை நேரப் பிரார்த்தனைக் கூட்டம் ஆரம்பமானது. "Good morning, Earthies" என்று தலைமை ஆசிரியை உற்சாகத்துடன் சொன்னார்.

"குட்மார்னிங் மிஸஸ் மேப்பிள்" என்று பதிலுக்கு மாணவர்கள் பதில் கொடுத்தார்கள். பெற்றோர்களும் அந்த உற்சாகத்தில் சேர்ந்து கொண்டார்கள். "எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள்?" என்று தலைமை ஆசிரியை கேட்டார்.

"கிரேட்!" மாணவர்கள் இடிபோல முழங்கினார்கள்.

"அற்புதம். எங்கே நாம் காலைப் பிரார்த்தனையை ஆரம்பிக்கலாமா?' என்று கேட்டுக்கொண்டார். மாணவர்கள் விசுவாச உறுதிமொழியைச் சொல்லத் தொடங்கினர்.

எல்லா மாணவர்களுக்கும் காலை வணக்க நேரத்தில் தங்களது தலைமை ஆசிரியையின் உற்சாகத்தைப் பார்க்க ரொம்பப் பிடிக்கும். அவர் அந்தப் பள்ளிக்கு வந்து ஒரு வருடம்கூட ஆகவில்லை. அதற்குள் மாணவர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் அவர். மாணவர்களுக்கு தங்களது முந்தைய தலைமை ஆசிரியரை அவ்வளவாகப் பிடிக்காது. மிகவும் கறாரான பேர்வழி அவர்.

தலைமை ஆசிரியை வரப்போகும் அறிவியல் கண்காட்சி பற்றித் தெரிவித்தார். "மாணவர்களே, அடுத்த வியாழக்கிழமை என்ன நடக்கவிருக்கிறது என்று தெரியுமா?" என்று கேட்டார் திருமதி மேப்பிள்.

"அறிவியல் கண்காட்சி" என்று மாணவர்கள் கூவினார்கள்.

தனது காதில் சரியாக விழாதது போல 'என்ன?' என்று விளையாட்டாக கேட்டார் மேப்பிள்.

"அறிவியல் கண்காட்சி!" மாணவர்களோடு பெற்றோரும் சேர்ந்து பதில் கோடுத்தார்கள். "எல்லோரும் உங்க சயன்ஸ் ப்ராஜெக்ட் வேலையைத் தொடங்கியாச்சா?"

"தொடங்கிட்டோம்!"

"இந்த வருஷம் நம்ம பள்ளியிலிருந்து எல்லா மாணவர்களும் பங்கு கொள்ளணும், சரியா?"

"சரி."

கூட்டத்தில் நின்ற பெற்றோர்களில் ஒருவர் தன்னருகே நின்றிருந்த மற்றொருவரிடம், "அப்பப்பா, என்ன உற்சாகம் மிஸஸ் மேப்பிளுக்கு. எனக்கே இங்க வந்திட்டுப் போனா நாள் பூராவும் சந்தோஷமா இருக்கு" என்றார். "எனக்கும்கூட" என்றார் அந்த மற்றொருவர்.

திருமதி மேப்பிள் மேலே கூறினார், "மாணவர்களே, உங்களது விஞ்ஞான மூளை வேலை செய்யட்டும். உங்களுக்குள் இருக்கும் ஐன்ஸ்டீன்களும், நியூட்டன்களும் விழிக்கட்டும். இந்த வருட அறிவியல் விழாவை மகத்தானதாகச் செய்வோம்." பள்ளி அறிவியல் ஆசிரியை திருமதி க்ளே கையாட்டினார். அவரின் புன்சிரிப்பு நிறைந்த முகம் அனைவருக்கும் பிடித்த ஒன்று.

திருமதி மேப்பிள், "எங்கே, மாணவர்களே, உங்கள் வலப்பக்கம் திரும்பி அடுத்த மாணவரைப் பார்த்து 'Have a great day, Earthie' என்று சொல்லுங்கள்" என்று முடித்தார். எல்லா மாணவர்களும் குதூகலத்தோடு அப்படியே செய்தார்கள். இடப்பக்கமும் அப்படியே செய்யவைத்தார்.

அது முடிந்து தனது வகுப்பிற்கு வரிசையில் போகும்போது, அருண் தன் முன்னால் நடந்து கொண்டிருந்த சாராவிடம், "Have a great day, Earthie," என்றான். "நீயும்தான்" என்று புன்சிரிப்போடு பதில் கொடுத்தாள் சாரா.

அருண் மற்றும் சாராவின் வகுப்பு ஆசிரியை மிஸ் டிம்பர் மாணவர்களை சீக்கிரமாக வகுப்புக்குள் போகச் சொல்லிக்கொண்டிருந்தார். அருண் தன் பைக்கட்டை வகுப்பின் வெளியே கொக்கியில் மாட்டினான். சாராவும் அதையே செய்தாள்.

"அருண், உன்னோட புது தண்ணீர் பாட்டிலைக் காட்டுரியா?" என்று கேட்டாள் சாரா. "மதிய சாப்பாட்டு வேளையில காட்டுறேன்" என்றான் அருண்.

"கொஞ்சம் காட்டேன், இப்போ."

"ஊஹூம். லஞ்ச் டயத்திலதான்."

மிஸ் டிம்பர் அவர்களை சீக்கிரம் உள்ளே போகுமாறு கேட்டுக் கொண்டார். அருணும் சாராவும் மற்ற மாணவர்களோடு தங்களது வகுப்பிற்க்குள் சென்றனர். மிஸ் டிம்பர் வகுப்பின் உள்ளே நுழைந்து கதவை சாத்தினார்.

(தொடரும்)

© TamilOnline.com