வெறுமை நீங்கி விறுவிறுப்பு அடைய...
அன்புள்ள சிநேகிதியே,
நான் தமிழ்நாட்டில் ஒரு கல்லூரிப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவள். வயது 76. ஒரே பிள்ளை. இங்கேயே செட்டில் ஆகிவிட்டான். திருமணம் ஆகி அவனுக்கும் ஒரே பிள்ளை. வயது 14. ஐந்து வருடங்களுக்கு முன்னால் என் கணவர் காலமாகிவிட்டார் அதற்கு முன்பு இருவரும் ஒரு சீனியர் சிட்டிசன் ஹோமில் மூன்று வருடம் இருந்தோம். வாழ்க்கையில் பிரச்சனைகளை அதிகம் சந்தித்ததில்லை. எங்களுக்குள் நல்ல ஒற்றுமை. எதுவாக இருந்தாலும் ஒன்றாக ஆலோசித்துச் சேர்ந்து செய்வோம். He was my husband, friend, mentor and soulmate. அவருடைய திடீர் மறைவு என்னை மிகவும் பாதித்துவிட்டது. எங்களுக்கு உறவு, சொந்த பந்தம் என்று அதிகம் கிடையாது. அவருக்கு ஒரு அக்கா. அவரும் இப்போது உயிருடன் இல்லை. எனக்கு ஒரு தம்பி. திருமணம் ஆனதிலிருந்து அவனுக்கு நிறையப் பிரச்சனைகள். அதனால் அடிக்கடி பார்த்துக்கொள்ள முடிவதில்லை. என் கணவர் இறந்த பிறகு என் மகன் வீட்டுக்கு வந்து ஆறு மாதம் இருந்தேன். மருமகள் மிகவும் நல்ல மாதிரி. எனக்குத்தான் ஒட்டவில்லை. திரும்பி இந்தியா போனேன். அந்த சீனியர் சிட்டிசன் ஹோமில் தனியாக இருக்கப் பிடிக்கவில்லை. I missed my husband very badly. அங்கேயும் ஒட்டவில்லை. எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அதில் ஈடுபாடு இல்லை. கல்லூரியில் என்னுடன் சிநேகமாக இருந்த சிலர் இறந்து போய்விட்டார்கள். சிலர் பிள்ளை, பெண் என்று அவர்களுடன் தங்கப் போய்விட்டார்கள். போன் செய்து பேசினால், அவரவர் தங்கள் வியாதிகளையும் மருந்துகளையும் பற்றித்தான் பேசுகிறார்கள். அதுவும் போரடிக்கிறது. எனக்குப் பிடித்தது புத்தகம் படிப்பது. கண்ணாடி போட்டும் கண் மங்கியிருப்பதால், முன்போல் படிக்க முடிவதில்லை. ஒவ்வொரு நாளையும் வேதனையில் கழிக்கிறேன்.

நீங்கள் போன இதழில் என் வயதுள்ள ஒரு பெண்மணிக்கு, "நாளையை நினைத்து இந்த தினத்தைத் தொலைத்து விடாதீர்கள்" என்று அறிவுரை வழங்கி இருந்தீர்கள். எனக்குப் புரிகிறது எப்படித் தொலைத்து விடாமல் இருப்பது என்பதுதான் தெரியவில்லை. இப்போது பிள்ளை வீட்டிற்கு வந்திருக்கிறேன். இரண்டு பேரும் டயட்டில் இருக்கிறார்கள். பேரன் இந்தியச் சாப்பாடு சாப்பிடுவதில்லை. ஆகவே சமைப்பதற்கும் வழி இல்லை. நானும் சமையலில் புலி ஒன்றும் இல்லை. எவ்வளவு நேரம்தான் டி.வி., கம்ப்யூட்டர் பார்ப்பது? மனதில் எதுவும் ஒட்டவில்லை. ஐந்து வருடம் ஆகியும் என் கணவரின் நினைவு என்னை மிகவும் வாட்டுகிறது. பயம் என்று இல்லை. ஆனால் வெறுமையில் எதையும் ரசிக்க முடியவில்லை. ஏதாவது வேறு வழி இருக்கிறதா?

உங்கள் உதவிக்கும் ஆதரவுக்கு நன்றி.

இப்படிக்கு,
...........


அன்புள்ள சிநேகிதியே
நீங்கள் பேராசிரியராக எத்தனையோ மாணவர்களுக்கு வழிகாட்டி இருப்பீர்கள். கணவர் நல்லவராக இருந்தாலும், நீங்களும் அவருடைய குணத்தைப் புரிந்துகொண்டு ஒற்றுமையாக வாழ்க்கை நடத்தி இருக்கிறீர்கள். அது உங்களுடைய பண்பையும் காண்பிக்கிறது. நான் நிறைய முறை இந்தப் பகுதியில் எழுதியிருக்கிறேன், வயதாகும்போது பயம், பெருமை, சுய பச்சாதாபம் என்று எல்லாம் அதிகமாகிக் கொண்டுதான் போகும். ஆனால் முதுமை என்பது உயிர் நமக்குக் கொடுக்கும் பிரசாதம். முதுமையில் வறுமையும், கொடிய வியாதியும் வரும்போதுதான் வருத்தப்பட வேண்டும். வயது ஆக ஆக இழப்புகள் அதிகமாகி கொண்டுதான் போகும். இந்த இயற்கை மாற்றத்தில் இருந்து தப்பித்தவர்கள் யாருமே இல்லை என்பது உங்களுக்கே தெரியும். இந்த வயதில் வேதனை, வலி, வெறுமை எல்லாம் இருக்கத்தான் செய்யும். அனுபவிக்கத்தான் வேண்டும். ஆனால், அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்தக் கண்டிப்பாக நம்மால் முடியும்.

நம்முள் தோன்றும் வெறுமையோ பயமோ, அது ஒரு உணர்வு. அந்த உணர்வைத் திசைமாற்ற, நம் மனதை எதிலாவது ஈடுபடுத்திக் கொள்ளும்போது, அந்த நேரத்திற்கு அந்த வெறுமையைக் கட்டுப்படுத்த முடிகிறது.

நான் பொதுவாக எல்லாருக்கும் சொல்வது, ஒரு தினத்தை ஒன்பது பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள் உங்களுக்குப் பிடித்த விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். ஒரே செயலை பல மணி நேரம் தீவிரமாகச் செய்யாதீர்கள்.

சிலருக்குச் சமையல்கலை பிடிக்கும்; சிலருக்கு டி.வி. பார்ப்பது, சிலருக்குப் புத்தகம். சிலருக்கு வாக்கிங்; சிலருக்கு பூஜை, கடவுள். சிலருக்கு இயற்கை, செடி, கொடி, நாய், பூனை பராமரிப்பு என்று பல வகையான விருப்பங்கள். உங்களுக்கே ஒரு log book வைத்துக்கொண்டு ஒரு check list போட்டுக் கொள்ளுங்கள். இது ஒரு இன்ட்ரஸ்டிங் எக்சர்சைஸ்.

24 மணி நேரத்தில்
பகுதி 1 - உறக்கம் (ஓகே, வயதானால் உறக்கம் வராமல் போகலாம், இருந்தாலும் ஓய்வெடுங்கள்) - 8 மணி நேரம்
பகுதி 2 - தனக்கான வேலைகள் (பல் தேய்த்தல், குளியல் போன்றவை)- 2 மணி நேரம்
பகுதி 3 - தெய்வீகத்துடன் தொடர்பு (பூஜை, சுலோகம், ஆன்மீகம், பக்திப் பாடல் போன்றவை) - 2 மணி நேரம்
பகுதி 4 - அடிப்படை வேலைகள் (சமைத்தல், சுத்தம் செய்தல், அடுக்கி வைத்தல் போன்றவை) - 2 மணி நேரம்
பகுதி 5 - 'உடல்நலச் செயல்பாடுகள்' (உடற்பயிற்சி, தியானம், நடத்தல் போன்றவை) - 2 மணி நேரம்
பகுதி 6 - புதிதாகக் கற்றல் (மொழி, இசை, சமையல் குறிப்பு, கலை போன்றவை) - 2 மணி நேரம்
பகுதி 7 - மீடியா (செய்தி, சீரியல், சினிமா, இசை போன்றவை) - 2 மணி நேரம்
பகுதி 8 - எதில் மிக ஆர்வமோ அது (வாசித்தல், எழுதுதல், பாடுதல், சமைத்தல், தோட்டவேலை போன்றவை) - 2 மணி நேரம்
பகுதி 9 - குடும்பம், நண்பர்கள், அரட்டை, விளையாட்டு, மொபைல், முகநூல், இ-மெயில் போன்றவை) - 2 மணி நேரம்

மேலே நான் சொல்லியிருக்கும் பகுதிகளில், உங்கள் வசதிக்கு ஏற்றாற்போல் நேரத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். பலப்பல செயல்களைச் செய்யும்போது மூளை உற்சாகமடையும். ஒரே வேலையை மணிக்கணக்கில் செய்யும்போது கை, கால்கள் தானாகச் செயல்பட்டு மனம் வேறு சிந்தனையில் மாறி மறுபடியும் வெறுமையில் முடிய வாய்ப்பிருக்கிறது.

புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள முயலும்போது உற்சாகத்துடன் மூளையும் வலுப்படுகிறது.

நமக்குப் பிடித்த செயலில் ஈடுபடும்போது மனம் இன்பமாக இருக்கிறது.

பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபடும்போது மனம் நிம்மதி அடைகிறது.

உடற்பயிற்சியும் தியானமும் உடம்புக்கும் மனதுக்கும் மிகுந்த புத்துணர்வைக் கொடுக்கின்றன.

இப்படி ஒவ்வொரு செயலையும் மாற்றி மாற்றி ஒரு நாளில் செய்யும் போது உடலில் சோர்வும் மனதில் வெறுமையும் இருக்காது. அன்றைய நாள் அருமையாக அமையும். வயதில் முதிர்ந்து, வெளியில் அடிக்கடி போய்வர முடியாதவர்களுக்கு, இந்த 'தினசரி அட்டவணை' மிக உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நீங்களும் முயன்று பாருங்கள். உங்கள் வெறுமை நீங்கி நிம்மதி பெற வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com

© TamilOnline.com