நவம்பர் 24, 2019 அன்று, பெண்களுக்காக பெண்களால் உருவாக்கப்பட்ட 'பெண்-USA' அமைப்பின் பண்டிகைக்கால விழா 2019, இல்லினாய், அரோரா ஶ்ரீபாலாஜி திருக்கோயில் வளாகத்தில் உள்ள பஞ்சவடியில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
அறுசுவை உணவு, ரங்கோலிப் போட்டி, கடைகள், மகளிர் திறனை வெளிக்காட்டும் நிகழ்ச்சிகள், பரிசுப் போட்டிகள் எல்லாம் அதில் இடம்பெற்றன. ஆடல், பாடல், கருவியிசை எனக் களைகட்டியது. திருமணமானவர்கள் மற்றும் இளைய தலைமுறையினருக்கு உறவுமுறைகளால் ஏற்படும் தாக்கம், அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைத் திருமதி ரோஷிதா மிஷ்ரா விளக்கினார். ஒரு இலக்கை அடைவதற்கான உழைப்பு, மனம் தளராமை, விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை 'மிஸ் இல்லினாய் - அமெரிக்கா' செல்வி மோனிகா பட்டன்கரின் செயல்நோக்க உரை உணர்த்தியது. வீடு, அலுவலகம் என்று ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள், தமக்காகவும் சிறிது நேரத்தைச் செலவிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது திருமதி பிரியா காந்தியின் யோகப் பயிற்சி முறைகள்.
மங்கையர் திறம் பேசும் 'பூவிதழ்' தொகுப்பின் நவம்பர் இதழ் வெளியிடப்பட்டது. மொத்தத்தில் இதுவோர் இனிய மாலைப்பொழுதாக அமைந்திருந்தது.
ஹேமலதா பிரபாகர் |