டிசம்பர் 7, 2019 அன்று மைத்ரி நாட்யாலயா, சான் ஹோசே சனாதன தர்ம கேந்திரத்தில் 'நாயிகா' என்ற நாட்டிய நிகழ்ச்சியை வழங்கியது. இதில் திருமதி அனுபமா ஸ்ரீவஸ்தவா அவர்களின் சிஷ்யை ரேவா ஸ்ரீவஸ்தவா, கதக் நடனப்பாணியில் தும்ரி மாலிகாவுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார். பின்னர் திருமதி ஸ்ரீலதா பாலாஜியின் சிஷ்யை அனன்யா பாலாஜி பரதநாட்டியத்தில் 'மொகுடொச்சி பிலிச்சே' என்ற கீர்த்தனைக்கு பரகீய நாயிகாவைச் சித்திரித்தார். திருமதி ஷிர்ணி காந்த் அவர்களின் சிஷ்யை தன்வி காமத், குச்சிபுடி நடனத்தில், ஸ்வீய மத்யம நாயிகாவை கமாஸ் ராகத்திலமைந்த 'ஏரா ராரா' ஜாவளிக்கு அபிநயித்தார். திருமதி ஸ்ரீலதா சுரேஷின் சிஷ்யை வர்ஷா தல்லடி பரதநாட்டியத்தில் கண்டித நாயிகாவை 'இந்தெந்து விசிதிவிரா' என்ற பதத்தில் படம்பிடித்தார். திருமதி ஜோதி லக்கராஜுவின் சிஷ்யை மனஸ்வினி அவ்வரி குச்சிபுடியில் ஸ்வீய மத்யம நாயிகாவை 'அபருதுகு லோனையிதினே' என்ற கமாஸ் ராக ஜாவளிக்குக் கண்முன் கொணர்ந்தார்.
திரு ஹரி தேவநாத் அவர்களின் சிஷ்யைகளான மான்யா ஸ்ரீராமும் மஹதி சங்கர்ராமும் குரலிசை கொடுத்தனர். அமோக் குச்சிபோட்லா (குரு: திரு பத்ரி சதீஷ்) மிருதங்கம் வாசித்தார்.
மூத்தோர் பகுதியில் குரு நிஹாரிகா மொஹந்தி குரு கேலுசரண் மொஹாபாத்ரா நடனம் அமைத்த 'யாஹி மாதவா' என்ற அஷ்டபதிக்குச் சிறப்பாக ஆடியதோடு, குருவின் நடன வடிவமைப்பின் பின்னணியை விளக்கினார். குரு நிருபமா வைத்யநாதன் தமது குரு கலாநிதி மாமியின் (அவரது 90வது பிறந்ததினம் நினைவாக) வாழ்க்கை மற்றும் அவர் எப்படி அபிநயத்தை வகுப்பில் கற்பித்தார் என்பவற்றை நினைவு கூர்ந்தார். அவர் நடனம் வடிவமைத்த 'சூடரே', 'சகி ஹே', 'மய்யா மோரி' ஆகியவற்றையும் அழகுற வழங்கினார்.
குரு ஷிர்ணி காந்த், லாஸ் ஆல்டோஸ், கலிஃபோர்னியா |