விடை தருகிறோம் கோஃபி அன்னா(ன்)
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலர் கோஃபி அன்னான் (Kofi Annan) டிசம்பர் 31 ஆம் நாளுடன் விடைபெறுகிறார். தென் கொரியா நாட்டு அமைச்சர் பான் கி முன் (Ban Ki-moon) ஜனவரி முதல் நாளன்று புதிய பொதுச் செயலராகப் பொறுப்பு ஏற்கிறார்.

தொடர்ந்து 10 ஆண்டுகள் உலகின் ஆக முக்கியப் பொறுப்பு வகித்த அன்னானை உலகம் முழுவதும் இன்முகத்துடன் விடை கொடுத்து அனுப்ப உள்ளது. 68 வயதாகும் கோஃபி அன்னான் தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை, அதாவது 46 ஆண்டுகளை ஐக்கிய நாடுகள் அமைப்புடன் கழித்தவர் என்ற தகவல் நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் பதவியில் அமர்ந்த முதல் ஆப்பிரிக்கக் கறுப்பினத்தவர் என்பதுடன், ஐ.நா அமைப்பின் எழுதப்படாத மரபை மாற்றி முதல்
முறையாக தொடர்ந்து இருமுறை அப்பதவியில் நீடித்தவரும் அவரே. அதாவது, உலகில் உள்ள
ஒவ்வொரு கண்டமும் 10 ஆண்டுகள் தொடர்ந்து பொதுச் செயலர் பதவியை வகிக்கலாம் என்ற மரபின்படி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன்படி 1992 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கக் கண்டத்தின் எகிப்து நாட்டைச் சேர்ந்த பொட்ரோஸ் காலி (Boutros Boutros-Ghali) பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு 1997-ல் பொதுச் செயலராக ஆப்பிரிக்கக் கண்டத்தின் காணா (Ghana) நாட்டைச் சேர்ந்த கோஃபி அன்னான் தேர்ந்தெடுக்கப் பட்டார். 2002 இல் தேர்தல் நடைபெற்றபோது ஐ.நாவின் எழுதா மரபுப்படி ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவர் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மரபு பாராமல் அன்னான் இரண்டாம் முறையாகத் தேர்ந் தெடுக்கப்பட ஐ.நா பாதுகாப்புக் குழுவும், பொது அவையும் ஒப்புதல் அளித்தன. இது ஒரு சாதனை. ஐ.நா அமைப்பில் 40 ஆண்டுகளுக்கும் அதிகமாக அன்னான் பணியாற்றியதே இதற்குக் காரணம்.

ஆப்பிரிக்க நாட்டில் ஆகான் (Akan) மொழி பேசும் படித்த வர்க்கத் தைச் சேர்ந்த ஹென்றி ரெஜினால்டு அன்னான் (Henry Reginald), விக்டோ ரியா (Victoria) தம்பதியின் நான் காவது மகனாக, இரட்டைக் குழந்தை களில் ஒருவராக 1938 ஆகஸ்டு 8 அன்று கோஃபி அட்டா அன்னான் பிறந்தார். ஆகான் மொழியில் அட்டா என்றால் இரட்டைக் குழந்தைகள் என்று அர்த்தம். காணா பண்பாட்டில் இரட்டைக் குழந்தைகள் என்பது மிகவும் விஷேச மாகக் கருதப்படுகிறது. கோஃபி என்பது அவர் பிறந்த வெள்ளிக் கிழமையைக் குறிக்கிறது. அன்னான் என்பது குடும்பத்தில் நான்காவதாகப் பிறக்கும் குழந்தையைக் குறிக்கும் சொல் ஆகும். அதே நேரத்தில் அவரது குடும்பப் பெயராகவும் உள்ளது. தனது பெயரை கோஃபி அ(ன்)னான் என உச்சரிப்பதே சரியானது என்று ஒருமுறை அன்னான் கூறியுள்ளார்.

அன்னானின் மூதாதையர்கள் பாரம் பரியமாக அவர்களின் பழங்குடியினத்துக்குத் தலைவர்களாக
இருந்தவர்கள். அதாவது அன்னானின் தந்தை கானா நாட்டில் வாழும் அசான்டே (Asante) மற்றும் ஃபான்டே (Fante) இனக்குழுக்களின் வம்சா வழியில் வந்தவர்.

காணாவில் உள்ள எம்ஃபான்ட்சிபிம் (Mfantsipim School) பள்ளியில் படித்தார். 'உலகில் எந்த மூலையில் ஒருவர் துன்பத்தில் இருந்தாலும் அதுகுறித்து உலகில் எந்த மூலையில் இருக்கும் ஒருவரும் கவலை கொள்ளவேண்டும்' என்ற கொள்கை நெறியை இங்கிருந்துதான் கற்றுக் கொண்டதாக அன்னான் கூறினார். அன்னான் பள்ளிப் படிப்பை முடித்த அதே ஆண்டில் தான் இங்கிலாந்து காலனி ஆட்சியில் இருந்து காணா விடுதலை அடைந்தது. அடுத்த ஆண்டில் அவர் பொருளாதாரப் பட்ட வகுப்பில் சேர்ந்தார். பின்னர் ஃபோர்டு பவுன்டேசன் நிதி உதவியுடன் மினோசாட்ட செயின்ட் பால் மாகலெஸ்டர் (Macalester College) கல்லூரியில் தனது பட்டப் படிப்பை நிறைவு செய்தார். அதன்பிறகு 1961-62 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் உள்ள பன்னாட்டு ஆய்வுப் பட்டப் பள்ளியில் சேர்ந்து பன்னாட்டு உறவுகள் குறித்துப் படித்தார்.

ஆங்கில, பிரெஞ்சு, குரு ஆகிய மொழிகளிலும், ஆகான் மற்றும் இதர ஆப்பிரிக்க மொழிகளிலும்
சரளமாகப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெற்றார். 1962 இல் ஐ.நா. அமைப்பின் உலக சுகாதார நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் ஐ.நா.வில்
பணியாற்றியபோதும் இடையில் 1974 முதல் இரண்டாண்டுகள் காணா நாட்டின் சுற்றுலாத்துறை
இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து ஐ.நா. வில் மூன்று நிலைகளில் ஐ.நா. உதவிப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டார். 1987 முதல் 1990 வரை மனித வள மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகவும், 1990-92 காலகட்டத்தில் திட்டமிடுதல், நிதி மற்றும் நிதி ஒதுக்கீடு ஒருங்கிணைப்பாளராகவும் 1993-94 இல் அமைதிப்படை நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். அப்போது ருவாண்டாவில் (Rwanda) துட்சி (Tutsi) இனப் படுகொலை நடைபெற்றபோது அன்னான் மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கைகளை முன்னாள் பொதுச்செயலர் ரோமியோ டாலியர் (Romeo Dallaire) பகிரங்கமாகப் பாராட்டியுள்ளார். பின்னர் யுகோஸ்லேவியாவில் (Yugoslavia) இனக்கலவரம் ஏற்பட்டபோது ஐ.நா. பொதுச் செயலரின் நேரடிப் பிரதிநிதியாக யுகோஸ்லேவியா அனுப்பப்பட்டார். தொடர்ந்து ஐ.நா. வின் கீழ்நிலைப் பொதுச் செயலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஐ.நா. திரும்பினார். 1996 வரை அப்பொறுப்பில் நீடித்தார். இவ்வாறு தொடர்ந்து அவர் உலக மேம்பாட்டுக்கு அளித்து வந்த சேவையைப் பாராட்டும் வகையிலேயே அவர் பொதுச் செயலராகத் தேர்வுபெற்றார்.

அவர் தொடர்ந்து பொது செயலராகப் பணியாற்றிய காலம் என்பது உலக அரசியல் கால அட்டவணையில் மிகவும் கொந்தளிப் பான காலம் ஆகும். ஒருபுறம் எச்.ஐ.வி/எய்ட்ஸ் ஆட்கொல்லி அரக்கன் விசுவரூபம் எடுத்துக் கொண்டிருந்தது. மறுபுறம் போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் ஆகியவை உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உருவாகியது. மத்திய கிழக்குப் பிரச்சனை, ஆப்பிரிக்க உள் நாட்டுக் கலவரங்கள் மற்றும் இலங்கை ஈழத்தமிழர் பிரச்சனை போன்றவைகள் எரியும் தீய்க்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தன.

பொதுச் செயலராகப் பதவியேற்றவுடன் அவர் மேற்கொண்ட முதல் பெரும் நடவடிக்கை என்பது எய்ட்ஸ் அரக்கனை ஒழிக்க ஐந்து அம்சத் திட்டத்தை உருவாக்கியது ஆகும். எய்ட்ஸ் ஆட்கொல்லி நோயால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து வந்தவர் என்பதால் அன்னான் தனிப்பட்ட முறையில் மிகவும் அக்கரை கொண்டார். இவர் உருவாக்கிய ஐந்து அம்சத்திட்டமே இன்று உலகம் முழுவதும் தீவிரமான எய்ட்ஸ் ஒழிப்பு திட்டமாக வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. பன்னாட்டு எய்ட்ஸ் கட்டுப்பாடு சுகாதார நிதி ஒன்றை அன்னான் உருவாக்கியதே இந்த வெற்றிக்கு காரணம் என்பதை உலகம் நன்கறியும். இதன் மூலம் ஏழை நாடுகள் அனைத்திலும் எய்ட்ஸ் திட்டங்கள் அரசு நிதி உதவி இன்றியே வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகின்றன. அன்னான் முதல் ஐந்தாண்டு பணிக்காலம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதை அங்கிகரிக்கும் வகையில் 2001ம் ஆண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் விருது இவருக்கும் ஐ.நா அவைக்கும் வழங்கப்பட்டது.

பொதுச் செயலராக அவர் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின்னர் 2003-ல் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தது. அப்போது ஐ.நா. அவை ஒப்புதல் இல்லாமல் ஈராக் நாட்டுக்குள் அமெரிக்க, இங்கிலாந்துப் படைகள் நுழைவதற்கு அன்னான் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். லண்டன் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோதும் ஈராக் ஆக்கிரமிப்பு சட்டவிரோதம் என்று அறிவித்தார். அதே நேரத்தில் சூடான் நாட்டில் அமைதி ஏற்பட ஐ.நா அமைதிப்படை அனுப்பப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்தார். இதேபோல பாலஸ்தீனத்தில் ஏற்பட வேண்டும் எனவும், அரபு நாடுகள் இடையே ஒருபோதும் மோதல்கள் ஏற்படக் கூடாது எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தபோது உடனடியாகக் கண்டித்ததுடன், ஐ.நா. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேறச் செய்து மோதலை நிறுத்தினார். இலங்கையில் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு எதிராக சண்டை நீடிப்பதை தொடர்ந்து கண்டித்து வருகிறார். ஐ.நா. அவை சீர்திருத்தம் மேற்கொள்ளப் படவேண்டும் எனவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற வழியனுப்பு விழா நிகழ்ச்சியில் அன்னான் ஆற்றிய உரை மிகவும் நெகிழ்வூட்டக்கூடியதாக இருந்தது. ஐ.நா. அமைப்புக்கும் அவருக்குமான 45 ஆண்டுகள் உறவை அவர் நினைவூட்டினார். ஜெனிவா நகரமே அவரது வாழ்க்கையானது, இங்குதான் அவர் தனது மனைவியைச் சந்தித்தார். ஆப்பிரிக்க மனிதரான அன்னான் இங்குதான் சர்வதேச மனிதரானார். முன்னாதாக, புதிய பொதுச்செயலர் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து செப்டம்பர் 19 அன்று அவர் ஆற்றிய உரையின்போது உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள அநீதி, உலகச் சிதைவு, மனித உரிமைகள் மீறல் ஆகியமூன்று தீமைகள் அழிவதற்குப் பதில் அதிகரித்து வருகின்றன என்று நினைவூட்டியது புதிய பொதுச் செயலருக்கான பொறுப்புகளை நினைவூட்டுவதாக உள்ளது.

விடை தருகிறோம்; சென்று வாருங்கள் கோஃபி அன்னான்!

அப்பணசாமி

ஒரு சென் மாஸ்டர்

68 வயதாகும் கோஃபி அன்னான் தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை, அதாவது 46 ஆண்டுகளை ஐக்கிய நாடுகள் அமைப்புடன் கழித்திருக்கிறார். அவரது இந்த வாழ்க்கையை, முக்கியமாக ஐ.நா.வின் பொதுச் செயலராக இருந்த காலத்தை உலகம் எப்படி நோக்குகிறது? அவர் சமரசப் பேச்சுவார்த்தையில் ஒரு சென் மாஸ்டர் என்கிறார் ஜேம்ஸ் டிராப் (Jeames Traub), பி.பி.சி. மற்றும் அமெரிக்கத் தேசிய வானொலிக்கு (National Public Radio NPR) அளித்த பேட்டியில். இவர் சிறந்த நோக்கங்கள் - கோஃபி அன்னானும், ஐ.நா.வும் அமெரிக்க உலக ஆதிக்கத்தில் (The Best Intentions: Kofi Annan and the UN in the Era of American World Power) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். தனது கருத்திற்கு உதாரணமாக 1998-ல் இராக்கிய அரசு அரண்மனைகளில் ஆயுத சோதனை செய்ய சர்வாதிகாரியான சதாம் உசேனிடம் அனுமதி பெற்றதைக் குறிப்பிடுகிறார். அன்னான் இந்தப் பதவிக்குப் புதிய மரியாதையைக் கொண்டு வந்திருக்கிறார். தான் சுயநலமற்ற, உலக நன்மைக்காகச் செயல்படுபவர் என்ற எண்ணத்தை அனைவரிடமும் உருவாக்கியதும், அந்த எண்ணத்தின் அடிப்படையில் சமரசப் பேச்சு வார்த்தைகளின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறமையும் அன்னானின் வெற்றிக்குக் காரணங்கள் என்கிறார்.

அதே சமயம், இவர் பொதுச் செயலராக இருந்த காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகள் ஓஇவர் கரங்கள் இரத்தக் கறை படிந்தவையா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றன. முக்கியமாக 1993, 94-ல் ருவாண்டாவில் நடந்த 800,000க்கும் அதிகமாக உயிர்ப்பலி கொண்ட இனப் படுகொலை, 1996-ல் பாஸ்னியாவின் செர்பிரனிகாவில் 8,000க்கு அதிகமாக உயிர்ப்பலி கொண்ட இனப் படுகொலை, 2003-ல் இருந்து இன்னமும் சூடானில் 400,000க்கு அதிகமாக உயிர்ப்பலி கொண்டு தொடர்ந்துவரும் இனப் படுகொலைகளை ஐ.நா.வின் மேலும் துரிதமான செயல்பாட்டினால் தடுத்திருக்கவோ, குறைத்திருக்கவோ முடிந்திருக்குமோ என்ற சந்தேகம் எழும்புகிறது.

அமெரிக்காவின் கணிப்பில் ஐ.நா. எந்த இடத்தில் இருக்கிறது? இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதற்கு பதில் வேறாக இருந்திருக்கும். ஆனால் தற்சமயம் அமெரிக்கா ஐ.நா.வின் தேவையைப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறது என்கிறார் ஜேம்ஸ் டிராப். ஓஈராக் நாட்டில் நடந்த பொதுத் தேர்தலின் வெற்றிக்குக் காரணம் ஐ.நாவின் உழைப்பு. ஐ.நா.வின் உதவியையும், சமரசப் பேச்சு வார்த்தையின் பலத்தையும் அமெரிக்கா, குறிப்பாக ஜார்ஜ் புஷ்ஷின் அரசு புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது என்கிறார் இவர்.

பல இடையூறுகளுக்கு இடையிலும் கோஃபி அன்னான் பொதுச் செயலராக இருந்த 10 ஆண்டுகளும் ஐ.நா.விற்கு வெற்றி கரமான ஆண்டுகள் என்பதை மறுக்க முடியாது. தனது பெயரையும், ஐ.நா.வின் பெயரையும் பாமர மக்களிடையேயும் நிலை நாட்டிச் செல்கிறார் கோஃபி அன்னான். அவரது ஓய்வு வாழ்க்கை சிறப்பாக அமைய நமது வாழ்த்துக்கள்.

சிவா சேஷப்பன்

© TamilOnline.com