சாகித்ய அகாதமி விருது பெறுகிறார் சோ. தர்மன்
1954 முதல் இந்தியாவின் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாதமியின் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு தமிழில் 'சூல்' என்ற நாவலுக்காக 2019ம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருது பெறுகிறார் சோ. தர்மன். இவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள உருளைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆகஸ்ட் 8, 1952ல், சோலையப்பன்-பொன்னுத்தாய் இணையருக்கு மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் தர்மராஜ். பாரம்பரிய விவசாயக் குடும்பம். கோவில்பட்டியிலுள்ள தனியார் பஞ்சாலையில் பணிசெய்த இவர், கி. ராஜநாராயணனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுதத் துவங்கினார். இதுவரை 13 நூல்கள், 8 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள் எழுதியுள்ளார். ஈரம், தூர்வை, சோகவனம் போன்றவை இவரது பிற நாவல்கள். 'கூகை' நாவலுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் 2005ம் ஆண்டிற்கான சிறந்த நாவல் பரிசு கிடைத்தது. இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதினை இருமுறை பெற்றிருக்கிறார். புவியரசு, டாக்டர் க. செல்லப்பன், எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோர் கொண்ட நடுவர் குழு 'சூல்' நாவலை விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது. விவசாயம், நீராதாரம், கண்மாய் போன்ற பல பிரச்சனைகளை மையக்கருவாகக் கொண்ட நாவல் இது.

இவ்விருது 100,000 ரூபாய் பரிசுத்தொகையும், நினைவுக் கேடயமும் கொண்டது. (சோ. தர்மன் பற்றி மேலும் வாசிக்க)

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com