ஒருமுறை புலவர் ஒருவர் போஜராஜனிடம் சென்றார். அரசர் அவருக்குப் பணமுடிப்பு ஒன்றைக் கொடுத்தார். "அரசே, நீங்கள் வியர்வை சிந்திச் சம்பாதித்த எதையேனும் கொடுங்கள், மற்றவர்களின் உழைப்பில் கவர்ந்து கொண்டதை அல்ல" என்று கூறிப் புலவர் அதை ஏற்க மறுத்தார். அவர் கூறியதை ஏற்றார் அரசர். புலவரை மறுநாள் வரும்படிக் கூறி அனுப்பினார்.
மறுநாள் புலவர் சென்றபோது, போஜராஜன் அவரிடம் 19 செப்புக் காசுகளைக் கொடுத்தார். ஒரு கொல்லனின் உலையில் பழுத்த இரும்பைச் சம்மட்டியால் அடித்து, அதற்குக் கூலியாக அந்தச் செப்புக் காசுகளைச் சம்பாதித்திருந்தார் அரசர். புலவர் கையை நீட்டினார். அரசர் காசுகளைப் போட்டார்.
என்ன ஆச்சரியம், பொற்காசுகள் விழுந்தன, செப்புக்காசு அல்ல! அரசரின் உழைப்பு அவற்றைத் தங்கமாக்கி இருந்தது. நியாயமாகச் சம்பாதித்த பணத்தையே ஒருவர் தானமாகக் கொடுக்க வேண்டும். அப்போது தேஹி (உடலில் வசிக்கும் இறைவன்), அதைத் தேஹ (உடல்) உணர்வில்லாமல் கொடுப்பார்.
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |