தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக முன்னோடியாக இருந்தவரும், மூத்த முற்போக்கு எழுத்தாளருமான டேனியல் செல்வராஜ் (81) காலமானார். திருநெல்வேலியில் பிறந்த இவர், உயர்கல்வியை முடித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அடித்தட்டு மக்களின் அவலங்களை எழுத்தில் வடிக்க ஆரம்பித்தார். சாந்தி, ஜனசக்தி, தாமரை, சரஸ்வதி போன்ற முற்போக்கு இதழ்களில் நிறைய எழுதினார். இவரது முதல் நாவல் 'மலரும் சருகும்'. தனது நண்பரும், முன்னோடியுமான ரகுநாதனின் 'பஞ்சும் பசியும்' நாவலைப் போன்றே 'மலரும் சருகும் என்ற தலைப்பை வைத்து, முற்போக்கு நாவலாக அதனைப் படைத்திருந்தார். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. 'தேநீர்', 'மூலதனம்' போன்ற நாவல்கள் இவருக்கு அடையாளம் ஏற்படுத்தித் தந்தன. திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட்களால் நடத்தப்பட்ட தோல் பதனிடும் தொழிலாளர்களின் போராட்டத்தை 'தோல்' என்ற நாவலாகப் படைத்தார். அதற்கு 2012ம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. 200க்கும் மேற்பட்டசிறுகதைகள் எழுதியிருக்கிறார். நோய்வாய்ப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றிக் காலமானார். (எழுத்தாளர் செல்வராஜ் பற்றி மேலும் வாசிக்க)
|