டாக்டர் நிர்மலா பிரசாத்
தமிழகத்தின் சிறந்த கல்வியாளர்களுள் ஒருவரும், எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியின் மேனாள் முதல்வருமான நிர்மலா பிரசாத் (69) மாரடைப்பால் சென்னையில் காலமானார். எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரி, எதிராஜ் கல்லூரி போன்றவற்றில் பணியாற்றிய அனுபவமிக்க இவர், பல நூற்றுக்கணக்கான மாணவிகளின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியவர். எதிராஜ் கல்லூரியில் வணிகவியல் துறையை உருவாக்கியதுடன் அதன் துறைத்தலைவராகவும் திறம்படப் பணியாற்றியவர். வைஷ்ணவா கல்லூரியை மிக உயர்ந்த தரத்திற்குக் கொண்டுவந்தவர். கல்வித்துறை மட்டுமல்லாமல் வாசிப்பு, இசை போன்றவற்றிலும் ஈடுபாடு உடையவர். பல கல்வித்திட்ட நலப்பணிகளுக்கு வழிநடத்துபவராகவும், ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். பல முனைவர் பட்டதாரிகளை உருவாக்கியவர். தனது கல்விப் பணிகளுக்காக 'பிரிட்டிஷ் காமன்வெல்த் ஃபெல்லோ விருது' பெற்றவர். மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் வழங்கிய Managerial Excellence Award, ரோட்டரி க்ளப் வழங்கிய Vocational Excellence விருது, சிநேகிதி இதழ் வழங்கிய சிறந்த பெண் சாதனையாளர் விருது, சேவா ரத்னா விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்றவர். சென்னைப் பல்கலையின் செனட் மெம்பர், சிண்டிகேட் மெம்பர் உள்படப் பல பல்கலைக்கழகங்களின் பல்வேறு உயர் ஆலோசனைப் பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றிருக்கிறார். (இவர் தென்றலுக்கு வழங்கிய நேர்காணலை வாசிக்க)© TamilOnline.com