கற்பக விநாயகர் ஆலயம், பிள்ளையார்பட்டி
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், குன்றக்குடியை அடுத்து உள்ளது.

இது விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவரைக் கோயிலாகும். சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்டதென வரலாறு கூறுகின்றது. முருகனுக்கு அறுபடை வீடு இருப்பதுபோலவே விநாயகருக்கும் அறுபடை வீடு உள்ளது. இத்தலத்தில் உள்ள கற்பக விநாயகர் சன்னிதி ஐந்தாவது படைவீடாகும். தலவிருட்சம் அத்திமரம் எனப்படும் மருதமரம். கோயிலில் தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. அர்ஜுன வனத் திருத்தலங்கள் நான்கு உண்டு. அவைகள் முறையே திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர், தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம், சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி ஆகியனவாகும்.

கோவிலில் விநாயகர் தும்பிக்கையுடன் வடக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். துதிக்கை வலப்புறம் திரும்பி உள்ளதால் 'வலம்புரி விநாயகர்' என அழைக்கப்படுகிறார். சுவாமி குகைக்குள் இருப்பதால் சுற்றிவரப் பிரகாரம் இல்லை. கோயிலினுள் காத்யாயனி, நாகலிங்கம், பசுபதீஸ்வரர் சன்னிதிகள் உள்ளன. கோயிலினுள் மருதீசர், திருவீசர், வாடாமலர் மங்கை, சிவகாமியம்மன் ஆகியோர் வீற்றுள்ளனர். இரண்டு கோபுரங்களுடன் கூடியது இக்கோவில். உள்ளே நுழைந்ததும் முதலில் கீழ்மேலாக ஓடிய பத்தியை அடுத்து, நான்கு தூண்கள் நிற்க, தென்வடலாக ஓடிய இரட்டை மண்டபம், அதன் கீழ்ப்புறத்தில் குடைவரைக் குகைக்குள் விநாயகர், மற்ற இடங்களில் உள்ளதைப்போல் அல்லாமல் இரண்டு கரங்களுடன், அங்குச பாசம் இன்றி, வயிறு ஆசனத்தில் படியாமல், அர்த்த பத்மாசனம் போன்று கால்களை மடித்து அமர்ந்திருக்கிறார். வலக்கரத்தில் மோதகம் தாங்கியுள்ளார்.

பிள்ளையார்பட்டி விநாயகரின் சிறப்பு, வலது தந்தம் நீண்டும் இடது தந்தம் குறுகியும் காணப்படுவதாகும். விநாயகருக்கு மேற்கே, தெற்கு நோக்கி சங்கரநாராயணர், உருநாட்டுச் சண்டீசன், கருடன் இருபுறம் நின்ற கோலத்தில் இருப்பதைக் காணலாம் அதன் மேல்புறத்தில் பத்தியின் நடுவே, கிழக்குப் பார்த்த திருவாயிலுடன் கூடிய, திருவுண்ணாழி துங்கானை மாட அமைதியில் குடையப் பெற்று, அதன் நடுவே பெரிய மகாலிங்கம் காணலாம். இந்த மூர்த்தி திருவீசர் என்றும் திருவீங்கைக்குடி மகாதேவர் எனவும் அழைக்கப்படுகிறார்



ஆண்டுதோறும் ஆகஸ்ட், செப்டம்பரில் வரும் விநாயகர் சதுர்த்தி கோயிலின் முக்கியத் திருவிழாவாகும். காப்புக்கட்டுதல், கொடியேற்றம் ஒன்பது நாள் முன்பு ஆரம்பமாகிறது. திருவிழா பத்துநாள் நடக்கிறது. ஒன்பதாம் நாள் தேரில், சந்தனக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் வீதி வலம் வருகிறார். பக்தர்கள் அதிக அளவில் இந்தத் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். விழாவில் விநாயகர், சண்டிகேஸ்வரர் இருவருக்கும் தேரோட்டம் நடக்கிறது. பிள்ளையார் தேரில் ஒரு வடம் ஆண்களும், மற்றொரு வடம் பெண்களுமாக இழுக்கின்றனர். சண்டிகேஸ்வரர் தேரை ஆண்களும் பெண்களும் இணைந்து இழுக்கின்றனர் விநாயகர் தேர் வலம் வரும்போது மூலவருக்கு எண்பது கிலோ சந்தனக்காப்பு சாத்தப்படுகிறது. மகா அபிஷேகமும் நடக்கிறது.

விநாயக சதுர்த்தியன்று முக்குறுணி அரிசியில் தயாரிக்கப்பட்ட மாவில், ஒரே ஒரு பிரம்மாண்ட கொழுக்கட்டை செய்யப்பட்டு, உச்சிகால பூஜையில் விநாயகருக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. இரவு, ஐம்பெரும் கடவுளரும் தங்க, வெள்ளி வாகனங்களில் வீதியுலா வருவர். மறுநாள் காலை கொழுக்கட்டை சூடாறிய பின்பு அதை உலக்கை போன்ற கம்பில் கட்டி, பலர் சேர்த்து காவடிபோலத் தூக்கிவந்து உச்சிக்காலத்தில், நைவேத்யம் செய்தபின்னர், மறுநாள் நகரத்தார், ஊர்மக்கள், பணியாளர்கள் அனைவருக்கும் பிரித்து உண்ணக் கொடுப்பர். நகரத்தார் என்று அழைக்கப்படும் செட்டியார் சமூகத்தாரின் நிர்வாகத்தில் கோவில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

கோயில் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும். விநாயகரிடம் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்கப் பிரார்த்தனை செய்து, அது நிறைவேறிய பின் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். ஒவ்வொரு சதுர்த்தியன்றும், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகப் பெருமான் கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருகிறார். திருக்கார்த்திகையன்று நாயனார் சன்னதியில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. திருவாதிரையன்று நடராஜர், சிவகாமசுந்தரி வீதி உலா வருகின்றனர்.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com